“இந்தியாவில் பண்டைய காலம் தொட்டு உலோகவியல் தொழில்நுட்பத்தில் பெற்றிருந்த திறனை நம் தொல்பொருட்கள் எதிரொலிக்கின்றன. தில்லியில் உள்ள குதுப்மினாரில் பல நூற்றாண்டுகளாகத் திறந்த வெளியில் எத்தகைய வேதியல் மாற்றத்திற்கும் உட்படாமல் துருப்பிடிக்காமல் நின்றுகொண்டிருக்கும் இரும்புத் தூணும், கோனார்க் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பு உத்திரமும்,மிகப்புகழ்பெற்ற தார் இரும்புத் தூணும் நமது முன்னோர்கள் பெற்றிருந்த உயர் தொழில்நுட்பத் திறனை எடுத்துக்காட்டுகின்றவாகத் திகழ்கின்றன.
இத்தகைய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் ஐரோப்பியர்களின் கவனத்தைப் பெற்றன. குறிப்பாகத் தொழிற்புரட்சிக்கு முன்பாக இருந்த இத்தகைய தொழில்நுட்பம், குறிப்பாக எஃகு தொழில்நுட்பம், ஐரோப்பியர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தது. ஐரோப்பியர்களுக்கு இந்திய இரும்பின் மீதான ஆர்வம் கிரேக்க-ரோமன் காலத்திலிருந்து அதாவது சரியாகக் குறிப்பிடவேண்டுமாயின் ஹெலனிஸ்டிக்-ரோமன் காலத்திலிருந்தே தொடங்குகிறது. தொடக்கத்தில், இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் மற்றும் தொழில்நுட்பத்தின் தன்மை பற்றிமட்டும் கவனம் செலுத்தப்பட்டது. இரும்பு கி.மு. சுமார் இரண்டாயிரம் ஆண்டில் அறிமுகமானதாக ஆய்வு முடிவுகள் வாயிலாகத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, மாங்காடு, தெலுங்கனூர், கீழ்நமண்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால ஆய்வு முடிவுகள் முந்தைய கருத்துகளின் மீது புதியபார்வை செலுத்தின. முன்பு கொண்டிருந்த முடிவுகளை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தின. அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்புகள், தமிழ்நாட்டில் இரும்பு 5300 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நிறுவுகின்றன.
அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றில், பண்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் புரிந்துகொள்ளும் தொடர் முயற்சியில் தற்பொழுது பெறப்பட்டுள்ள அறிவியல் அடிப்படையிலான இரும்பின் காலம் ஒரு முக்கிய மைல்கல்லாகத் தமிழ்நாடு அரசு கருதுகிறது. அனைத்திற்கும் மேலாக, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் தெலுங்கனூரில் கிடைத்த இரும்புவாளை உலோகவியல் ஆய்வுக்குட்படுத்திப் பெறப்பட்ட முடிவுகள், தென் இந்தியாவில் உயர்-கார்பன் எஃகு தொழில்நுட்பத்தின் தோற்றத்தின்மீது புதிய ஒளியினைப் பாய்ச்சியுள்ளது.
இரும்பு மற்றும் எஃகின் அறிமுகம், தொழில்நுட்ப விரிவாக்கம், உற்பத்தித்திறன் மற்றும் பரவல் ஆகியவை சமூக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றன. எனவே இரும்புத் தொழில்நுட்பத்துக்கும் நகரமயமாக்கலுக்கும் இடையேயான நேரடித் தொடர்பை மிகவும் ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல், உற்பத்தித்திறன், பகிர்மானம், தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாடு போன்றவை சமூகத்தை உருவாக்குவதிலும் கட்டமைப்பதிலும் முக்கிய பங்காற்றின. நமது முன்னோர்கள் சமூக மற்றும் தொழில்நுட்ப வாழ்க்கையில் அடைந்த சாதனைகளைப் புரிந்துகொண்டு பெருமை கொள்வதோடு அவற்றின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கோண்டு நமது எதிர்காலத்தைத் திட்டமிடுவது முக்கியமாகும்.”
– தங்கம் தென்னரசு, அமைச்சர்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நூல்கள், ஆசிரியர். ராஜன், கா. பதிப்பாளர். சென்னை : தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு ,