நாகரிகங்களின் மோதல் குறித்த உரையாடல் மேலெழுந்த போது, உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இஸ்லாமும் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவதும் இந்த அச்சுறுத்தலின் முதல் நிலையாகவும் பார்க்கப்பட்டது. காட்டுமிராண்டிகளின் மதமாக இஸ்லாத்தை சித்தரிக்கும் போக்கில், அதனுடைய கலாச்சாரம் தான் முதலில் தாக்குதலுக்குள்ளானது… இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இந்த வரிசையில் இப்படி நின்றனர்…
ஜனநாயகம், பெண்ணியம் போன்ற நவீன சித்தாந்தங்களோடு இஸ்லாம் என்றுமே ஒத்துப்போகாது என இஸ்லாமியவாதிகள் மறுபுறத்தில் நின்றனர். அரபு எழுச்சிக்குப் பின் இந்நிலை மாறி, இஸ்லாமிய வாதிகளும், அரசியல் சமத்துவம் பேசுவோரும் ஜனநாயகம் என்ற புள்ளியில் சங்கமித்தனர். இருப்பினும் இஸ்லாத்தை விதந்துரைக்கும் முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் கூட, பெண்களின் நிலை குறித்த இஸ்லாமியப் பார்வை எனும் வரும்போது இஸ்லாத்தை தூற்றத் தவறுவதில்லை.
ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின், மேற்குலக பெண்கள் இஸ்லாத்தை தழுவி வருவது அதிகரித்து வருகிறது. எனில் இஸ்லாம் & ஜனநாயகம் ஒருங்கிணைவு போல், மேற்கத்திய கலாச்சாரம் & இஸ்லாமிய பெண்ணியம் ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளதா? உண்மையில் இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் நிலைதான் என்ன?