கடல் வழி வணிகம் போன்ற ஒரு புத்தகம் வந்து அது பலர் பார்வைக்குப் பட்டிருக்கிறது என்றால், இருண்ட மேகங்களிடையேயும் கூட ஒரு மின்னல் கீற்று பளிச்சிடுவது போல்தான் எனச் சொல்லத்தோன்றுகிறது எனக்கு. இப்படி பொதுவாசக வட்டத்திற்கு அப்பால் விழும் ஒரு துறை பற்றிய புத்தகம் புத்தக வணிகத்தின் அக்கறைக்குள்ளும் விழுந்துள்ளதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். ஆசிரியர் குறிப்பிட்டுள்ள மூல நூல்கள் பட்டியலில், மயிலை சீனி வேங்கட சாமியின் பழங்காலத் தமிழ்ர் வாணிகம், சாத்தன் குளம் அ.ராகவனின் நம் நாட்டுக் கப்பற்கலை, பா.ஜெயக்குமாரின் தமிழகத் துறைமுகங்கள், முனைவர் ப.சண்முகத்தின் சங்க கால காசு இயல், தமிழ் நாட்டு வரலாற்றுக் குழுவினரின் தமிழ் நாட்டு தொல் பழங்கால வரலாறு போன்ற புத்தகங்கள் முன்னர் வணிக, கல்வி நிறுவனங்களால் வெளியிடப்பட்டனவே ஆனாலும், இத் தகவல் கூட பரவலான பொதுப் பார்வைக்கு வந்துள்ள கடல் வழி வணிகம் புத்தகம் மூலமே நமக்குத் தெரிய வருகிறது. நரசய்யாவின் இப்புத்தகத்தைப் படிக்கும்போது அவர் மேற்சொன்ன புத்தகங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களைச் சொல்லும்போது, அப்புத்தகங்களும் கூட, கவனிக்கப்படாவிட்டாலும், தமிழின் பல்துறை அறிவார்த்த விஸ்தரிப்பிற்கு நல்ல வரவுகள் என்று தான் சொல்லவேண்டும். அவற்றையும், அவை போன்ற, சரித்திரம், இலக்கியம், கல்வெட்டு, நாணயவியல், தொல்பொருள் ஆய்வு, அகழ்வாராய்வு என்று பல துறைகளிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள அத்தனையையும் உள்ளடக்கியது நரசய்யாவின் இப்புத்தகம். இதை ஏதோ தகவல் தொகுப்பு என்று இப்போது சொன்னதைப் புரிந்து கொண்டால்,அது பெரும் பிழையாகும். holistic ஆங்கிலத்தில் சொல்வார்கள், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒருமையும் முழுமையும் கொண்ட இன்னொரு பார்வை என்று சொல்லவேண்டும்.
இதில், நரசய்யாவின் வாழ்வும், ஆளுமையும் உள்ளடங்கியது என்பது முக்கியமும் விசேஷமுமானது, ஏனெனில், இந்த holistic பார்வையைத் தந்துள்ளது, அவரது வாழ்வும், ஆளுமையும் தான். கடற் படைப் பொறியாளராகவும், மாலுமியாகவும் பணிபுரிந்தவர், பங்களாதேஷ் போரிலும் தன் கடமையாற்றி, பின் துறைமுகங்களைப் பற்றிய ஆராய்வு எல்லாம் இது சார்ந்த பல துறைகளைப் பற்றிய புத்தகங்களையும் ஆராய்வுகளையும் தன் இயல்பில் தன் சுயமாகத் தேர்ந்த அக்கறையிலும் தேடல் தாகத்திலும் சேர்ந்தவையெல்லாம், இப்புத்தகமாக வடிவெடுத்துள்ளன. நான் மிக விசேஷமாகக் குறிப்பிட விரும்புவது, இயல்பான அக்கறைகள், இயல்பாக வளர்ந்த ஆளுமை, தன்னிச்சையாகப் பிறந்த தேடல், எல்லாம் ஆளுமையின் அனுபவத்தின் வழி விளைபவை. அத்தகைய ஆளுமையிடமிருந்துதான் முதலில், நாற்பது வருடங்களுக்கு முன் கடலோடி வந்திருக்கமுடியும். ஆசிரியர் கூற்றுப்படி, ‘முன்னரே வெளிவந்துள்ள சிறந்த நூலகளிலிருந்து முக்கியமான பகுதிகளைத் தொகுத்து எளிமையான முறையில் தமிழில் சாதாரண மக்கள் படிப்பதற்குத் தக்கவாறு அளிப்பதும், ‘தொடர்ந்து அகழ்வாராய்வு, சாசனங்கள் மற்றும் மண்பாண்டச் சான்றுகளுடனும், நணயவியல் குறிப்புகளுடனும், அப்போதிருந்த வணிக முறைகள், செயல்பட்டு வந்துள்ள வணிகக் குழுக்கள் ஆகிய சான்றுகளுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது” Periplus of the Erythrean Sea, Plini, Xinru Liu, என்றெல்லாம் தொடங்கி, வின்செண்ட் ஸ்மித், நொபொரு கரஷிமா டெலோச் போன்றோரை யெல்லாம் கடந்து, நீலகண்ட சாஸ்த்ரி, நாகசாமி, ஜெயகுமார் என்று சுமார் 50 மூலாசிரியர்கள், நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் முழுதையும் ஒரு வாசிப்பில் உள்வாங்கிக்கொள்ள முடியும், ஜீரணித்து விட முடியும் என்பது என்னால் ஆகாதது. அதை இங்கு எடுத்துரைப்பது, சுருக்கமாகவேணும் என்பதும், நரசய்யாவுக்கு நியாயம் செய்யும் முறையில் என்பது என்னால் ஆகாது. ஆக, ஒவ்வொரு அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதை ஒரிரு வாக்கியங்களில் சொல்வது தான் சாத்தியம். படிக்கும் ஆவலைத் தூண்ட அது போதும். அத்தோடு ஆங்காங்கே எனக்கு மிகவும் புதியதாக, ஆசிரியர் நமக்குத் தரும் முழுச்சித்திரத்தின் ஒரு சுவாரஸ்யமான காட்சியாக, செய்தியாக, அந்த ஒன்றே சற்றே திறக்கும் ஒரு ஜன்னல் கதவாக, நுழைவாயிலாக இருக்கும் சாத்தியத்தை நம்புவதால் அவற்றையும் சொல்லிச் செல்வேன்.
தமிழ்நாடு ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்குக் கடற்கரையைக் கொண்டது. தமிழ் மக்கள் பண்டைய காலத்தில் தாங்கள் வாழ்கிற பகுதியை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தார்கள். அதில் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் எனப்பட்டது. தமிழ் மக்கள் கடலோடிகள். கடல் காற்றையும், அலையையும், நீரோட்டத்தையும், பருவ காலங்களைப் பற்றியும் நட்சத்திர மண்டலங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். அதனால் பயமின்றி நாவாய் கலம், தோலை, தமரி என்று பலதரப்பட்ட படகுகளில் பொர்ட்களை ஏற்றிக் கொண்டு மேற்கு நாடுகளுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் சென்று விற்றார்கள். அங்கே கிடைத்த பொருட்களை வாங்கி வந்தார்கள் என்று கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் இருந்தும் – தமிழ்ச் சங்க இலக்கியத்தின் வாயிலாகவும் தெரிகிறது. அதுதான் கடல் வாணிகம். புகார் என்னும் காவேரிப்பட்டினம், அரிக்கமேடு கொற்கை, முசிறி, மாமல்லபுரம், நாகப்பட்டினம் ஆகியவற்றில் முன் துறைகள் இருந்தன. அதாவது துறைமுகங்கள் இருந்தன. பல முன் துறைகள் கடல் கொந்தளிப்பால் அழிந்து விட்டன. அவற்றின் வழியாக நடைபெற்ற சிறப்பான வணிகத்தை அகழ்வாராய்ச்சி, கலவெட்டு, இலக்கியம், சரித்திர சான்றுகளை கொண்டு நிலை நிறுத்தி வருகிறார்கள். அது தமிழ் மக்களின், ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழியின் அசல் தன்மையை நிலை நிறுத்துவதுதான். அதன் ஓர் அம்சமாக வெளிவந்துள்ளது நரசய்யாவின் கடல்வழி வாணிகம். முதுபெரும் எழுத்தாளர் சிட்டி சுந்தரராஜன் நமது கடல்வழி வணிகம் பற்றியும் அது ஆங்கிலேயர்கள் காலத்தில் வீழ்ச்சியுற்றது பற்றியும் – அதற்கு எதிராக வ.உ. சிதம்பரம் பிள்ளை கப்பல் விட்டது பற்றியும் அதன் அணிந்துரையில் சிறப்பாக எழுதி உள்ளார்.
நரசய்யா அடிப்படையில் எஞ்சீனியர், எழுத்தாளர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தன் கடல்படை அனுபவம் பற்றி கடலோடி என்ற நூலை எழுதியவர். கடலையும் இலக்கியத்தையும் அறிந்தவர். தமிழர்களின் கடல் வணிகத்தை – செங்கடல் வழியாக எகிப்து, ரோம் என்று அரிசி, மிளகு, மயிலிறகு, புலி – விற்று விட்டு தேறல் என்ற மதுவை வாங்கி வந்தது பற்றி இலக்கிய சரித்திரச் சான்றுகளோடு நிலை நிறுத்துகிறார். கடல்வழி வணிகம் என்பது ஒரு காலத்தில் மட்டும் நிகழ்வதில்லை. தொடர்ந்து நடைபெறுவது கடல்வழி எத்தனை தான் ஆபத்து நிறைந்ததாக இருந்தாலும் அதுவே வணிகம் நடைபெற ஆதாரமாக உள்ளது. கடலை ஆள்கிறவன் உலகத்தை ஆள்கிறான் என்று அதனாலேயே சொல்லப்பட்டது. கடல்வழி வணிகம் – என்ற நரசய்யாவின் நூல் பண்டைய கடல் வணிகத்திற்கு இருந்து தொடங்கி தற்காலம் வரையில் வருகிறது. முன் துறை – துறைமுகமாக மாறி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதையும் – புதிய நவீன துறைமுகங்கள் அடிப்படை வசதிகளோடு முதல் தரமான துறைமுகங்களாக மாறி உள்ளதையும் எடுத்துக் காட்டி உள்ளார். கடல் வணிகத்தில் முக்கியமானது, கப்பல். அது பலவிதமான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும். அதுபோல கடல்வழி வணிகம் என்ற நூலானது கடலில், விற்ற – வாங்கிய பொருட்களோடு சரித்திரம் சமூகம், பொருளாதாரம், அதையொட்டி நகரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பதைப் பல தளங்களில் சொல்கிறது. அது ஆசிரியரின் பல நோக்குப் பார்வையின் வழியாகச் சாத்தியமாகி உள்ளது மிகவும் சிறப்பானது. பழனியப்பா பிரதர்ஸ் – நல்ல தரமான தாளில் உயர்வான கட்டமைப்புடன் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். 2005-ம் ஆண்டில் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல்களில் ஒன்று கடல் வழி வணிகம்