முன்னுரை
கொங்கு வேளாளர்கள், திருமணம்,எழுதிங்கள் போன்ற நிகழ்வுகளின் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தவை, பழமையானவை என்பது மானிடவியல் ஆய்வாளர்தம் கருத்தாகும். ஆனால் காலப்போக்கில் அவை மறைந்தும், திரிந்தும் வருவதுடன் சில புதிய சீர்களும், நடைமுறையும் புகுந்து மாற்றம் பெற்று விட்டன.
ஆசீர்வதித்த குலகுருக்கள் வேறு வேலைகளைத் தேடிச் சென்று விட்டனர். குலம் போற்றிய காணிப் புலவர்கள் மறைந்தே விட்டனர். பதினெட்டு வகையான குடிபடை மக்களை ஆதரித்து எல்லோரையும் அவரவர்க்குரிய சீர்களில் பங்கு கொள்ளச் செய்து பணமும், அரிசியும், ஆடையும் வழங்கி பொதுவுடைமைச் சமுதாயமாக வாழ்ந்த சமுதாயம் கொங்கு வேளாளர் சமுதாயம். இன்று குடிபடைகள் திசை மாறி விட்டனர். தாய் மாமன் வீட்டு உரிமைப் பெண்ணை மணம் செய்த கொங்கு வேளாளர்கள் அவர்களாகவே முன் வந்து தங்கள் மகன், மகளுக்குப் பிற மதம், பிற மொழி, பிற சாதியில் கொண்டும் கொடுத்தும் திருமணம் செய்விக்கின்றனர். ஆற்றுக்கு அக்கரையில் பெண் கொடுக்க மறுத்த கொங்குச் சமுதாயம் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை விரும்புகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதைப் பொன்னேபோல் போற்றிக் கொங்கு வேளாளர் சமுதாயம் உலகம் தழுவிய சமுதாயம் ஆக மாறி வருகிறது. இது காலத்தின் கட்டாயம் வரவேற்கத்தக்கது.
முன்பு மூன்று நாள் கோலாகலமாக நடைபெற்றது கொங்கு வேளாளர் சமுதாயத் திருமணங்கள். இன்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் மாலை மாற்றித் திருநாண் பூட்டி ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விடுகின்றனர். விவசாயத்தை விட்டு, அல்லது விற்று நகரங்களிலும், பெருநகரங்களிலும், குடியேறியுள்ள கொங்குச் சமுதாயத்தினர் சீர்க்காரக் குடிபடைகளை எங்கே தேடுவர். வேறு வழியில்லை. வரவேற்பை வரவேற்க வேண்டியதுதான். மாறிவரும் வேகமான யந்திர உலகில் மூன்று நாள் திருமணம் என்பது சாத்தியம் இல்லை. நேரமும் இல்லை. குடிபடைகளும் ஆதரிப்பர் இன்றி வேறு வேலைகளுக்குச் சென்று கொண்டுள்ளனர்.
சீர்கள் நடைபெறாவிடினும் அவைகளைப் பதிவு செய்து வைப்பது மிகவும் அவசியம். சீர்களுக்குரிய காரண காரியங்களையும் காண முற்படுவது நமது கடமை. அதற்காகவே இச்சிறிய முயற்சி இவை உரிய படங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
கொங்கு வேளாளர் திருமணங்களில் மங்கலன் மங்கல வாழ்த்துக்குப் பின் புலவர் திருமண வீட்டார் உண்ணும் வெண்கல வட்டிலில் பால், பழம் பிசைந்து சாப்பிட்டு கம்பர் பாடியதாகக் கருதப்படும் கம்பர் வாழி, ஏர் எழுபது, திருக்கை வழக்கம் ஆகிய வேளாளர் இலக்கியங்களைப் படிப்பர். இலக்கிய மேடைபோல் கொங்கு வேளாளர் திருமண வீடுகள் திகழ்ந்தன. மங்கல வாழ்த்து உட்பட நான்கு இலக்கியங்களும் இச்சிறு நூலில் இடம் பெற்றுள்ளன. அவை வேளாண்மை, வேளாளர் புகழ் பாடுகின்றன. பழமை துலக்கும் புதிய முயற்சி.
இந்நூல் வெளி வருவதில் என் மக்கள் இரா. ஜெயப்பிரகாஷ, இரா. செந்தில்குமார், இரா.ஜெயமோகன் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரும் மிக ஆர்வம் காட்டினர்.
புத்தக உள்ளடக்கம்
1.கொங்கு நாடு
2. கொங்கு வேளாளர்
3.கொங்கு வேளாளர் திருமணச் சீர்கள்
4. எழுதிங்கள் சீர்
5. கம்பரும் கொங்கு நாடும்
6. கம்பர் தந்த தமிழ்
7.கொங்கு நாடும் புலவர்களும்
8. கொங்குக் குலகுருக்கள்
9. கொங்கு வேளாளர் குலங்கள்