கொங்கு நாட்டுப்புறப் பண்பாடு – பேரா.சு.சண்முகசுந்தரம்

280

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.
ஒரு சமூகத்தில் தொன்றுதொட்டு வழக்கப்படுத்தி, மக்களால் ஒட்டுமொத்தமாகப் பின்பற்றப்பட்டு வரும் வாழ்வியல் நடைமுறையே பண்பாடு. ஒவ்வொரு சமூகத்துக்கும் அடையாளப்படுத்தப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்றன. வாழ்முறைகள், விழா நிகழ்வுகள், பேச்சு வழக்குகள், ஆடல், பாடல்கள், உணவு, உடைகள், பண்டிகைகள், வழிபாடுகள், சடங்குகளில் பண்பாடு ஒட்டிக்கொண்டு நிலைத்து விடுகின்றன.
எனினும், காலப்போக்கில் பல்வேறு சமூகக் கலப்புகளால் புதிய பழக்கங்கள், பல பண்பாட்டுக் கூறுகளைப் பெருமளவில் சிதைத்து விடுவதுண்டு. ஒரே நாட்டில் வாழும் மக்களிடையேயும் பல்வேறு வரலாற்றுச் சூழல்களுக்கேற்ப பண்பாடுகள் மாறுபடுகின்றன.
பண்பாடுகள் நாட்டுப்புறங்களில் தோன்றியவையே! வரலாறுகள் மற்றும் வழக்காற்றியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட கொங்கு நாட்டுப்புறப் பண்பாடுகளை எளிய நடையில் நுாலாக்கித் தந்திருக்கிறார்.
கொங்கு நாட்டின் நிலவியல் விபரங்கள் மற்றும் வணிகங்கள், ஏற்றுமதி, வாய்மொழி வரலாறுகள், வந்தேறிகள் பற்றிய முன்னோட்டத்துடன் வேனிற்கால விழாக்கள், ஊரக நிர்வாகிகளின் படிநிலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், மரபுக்கதைகள், கதைப்பாடல்கள், புதிர் கதைகள், வட்டாரப் பழமொழிகள், வழக்காறுகள், தெய்வங்கள், கலைகள், பழங்குடிகளின் வாழ் முறைகள் போன்றவை விரிவாக எழுதப்பட்டுள்ளன.
கொங்கு மண்டலத்தில் வீடுகளெங்கும் தானியங்கள் நிறைந்த இளவேனில் காலங்களில் குடியானவர்களின் கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள், தேரோட்டங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பாட்டுப் போட்டிகள், திண்ணைக் கதைகள், ஒயில் கும்மிகள், கோலாட்டம், தெருக்கூத்துகள் நிகழ்வதும், கொங்கு மக்களிடையே பொங்கல், ஆடிப்பெருக்குத் திருவிழா, ஆயுத பூஜை, தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன.
புத்தரிசியால் பொங்கல் வைத்து படைத்து உண்ணுதல் மணநோன்பு என்றும், மாடுகளை அழகுபடுத்தி வணங்கி கோவிலுக்கு இட்டுச் செல்லுதல் பட்டிநோன்பு என்றும், கன்னிப் பெண்கள் ஆற்றங்கரைக்குச் சென்று பூசித்து பூப்பறித்து விளையாடித் திரும்புவது பூநோன்பு என்றும் அனுசரிக்கப்பட்டு, ஏறுதழுவுதல், கோலடித்தல், சிலம்பு எறிதல், சடுகுடு போன்ற விளையாட்டுகள் பரவலாக நடந்ததையும் அறிய முடிகிறது.
கொங்குப் பகுதிகளில் தாய் வீட்டுச் சீர், காது குத்துச் சீர், தெரட்டிச் சீர், திருமணத்தில் மாமன் சீர் போன்றவற்றில் உள்ள முறைமைகள் விளக்கப்பட்டுள்ளன. மகப்பேறு கால உணவுகள், பூப்படைந்த பெண்களின் உணவுகள், பண்டிகை மற்றும் நோன்பு நாள் உணவுகள் எனப் பலவும் காணக் கிடைக்கின்றன. சேலம் மக்கள் வேட்டியைச் சேற்றில் தோய்த்தே உடுத்துவர் என்பது வியக்க வைக்கிறது.
கொங்குப் பகுதியின் செவிவழிப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், இசைப் பாடல்கள், ஏற்றப் பாடல்கள், குலவைப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், ஆலாத்திப் பாடல்கள், மழைப் பாடல்கள், நோன்புப் பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், ஒயில் கும்மிப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், வள்ளிக்கும்மி போன்றவற்றில் இழையோடும் நயங்களும் எடுத்தியம்பப்பட்டுள்ளன.
பல்வேறு வட்டாரத் தெய்வங்கள், முன்னோர் வழிபாடு, தெய்வங்களின் விரிவான விபரங்களுடன் திருவிழா முறைமைகள், இந்திர விழா, பங்குனி உத்திரத் திருவிழா, சாணி வெட்டு விழா, ஊஞ்சல் விழா, கொங்கு நேர்த்திக்கடன்கள், சேலார் குத்தி தேர் இழுத்தல், பூக்குழி இறங்குதல், ஆயிரங்கண் பானை எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், பறவைக்காவடி, மாவிளக்கு, முளைப்பாரி போன்ற பலவும் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.
கோவில் பண்பாட்டுக் கலைகள், கூத்துகள், வழிபாட்டுக் கூறுகள், நன்றிக்கடன், கன்னிமார் வழிபாடு, நம்பிக்கைகள் ஆகியவற்றுடன் கொங்கு நாட்டுக்கலைகள், நாட்டுப்புற இசைக்கருவிகள், அண்ணன்மார் கதை உறுமி கோமாளி ஆட்டம், குடையாட்டம், கும்மியாட்டம், சக்கையாட்டம்.
மேலும், சிக்காட்டம், சேவையாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், பட்டுராஜா ஆட்டம், பந்த சேவையாட்டம் பெருஞ்சலங்கையாட்டம், வண்டிக்காளியாட்டம் போன்றவற்றுடன் மரப்பொருட்கள், கைவினைக் கலைகள், கல் சிற்பங்கள், சுடுமண் பொம்மைகள், கொங்கு ஓவியங்கள், சுடுமண் கலைகள், பச்சை குத்துதல், உடல் அலங்காரம் போன்றவை விரித்துரைக்கப்பட்டுள்ளன.
பழங்குடிகளின் பண்பாடு, நீலகிரி மக்களின் ஆட்டங்கள், இருளர் பாடல்கள், நாமக்கல் வேட்டுவர், சித்தேரி பழங்குடி, தோடர்கள், கோத்தர், பளியர், முதுவர் விபரங்கள் மற்றும் மலைப்பழங்குடி மக்கள் வழக்காறு, வேட்டைக்காட்டு இருளப்பள்ளர், சோணாகர்கள், மலாசர்கள், குறும்பர்கள், இருளர்கள் போன்றோர் தகவல்களுடன் மருத்துவம், பொருள்சார் பண்பாடு, சடங்குகள், மரபுகள், நம்பிக்கைகள் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தின் பண்பாட்டுக் கூறுகளை விரிவாக அறிய உதவும் நூல்.
Weight 0.25 kg