தமிழ்நாட்டில் மட்டுமே ஆகமங்கள்:
தற்போது எழுத்து வடிவம் பெற்றுள்ள, ஆகமங்கள் என்று அழைக்கப்படும் ஆகம விதிகள், நடைமுறைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளன. தமிழ்நாடு தவிர, முன்னர், சென்னை மாகாணத்தில் (Madras Province) இருந்து தற்போது வேற்றுமாநிலத்தில் உள்ள கோயில்களில் மட்டுமே (திருப்பதி, காளஹஸ்தி போன்ற கோயில்கள்), பின்பற்றப்பட்டு வருகின்றன. வேறு மாநிலங்களிலோ, வட இந்தியாவிலோ இந்த ஆகமங்கள் பின்பற்றப்படுவதே இல்லை. எனவே, இந்த ஆகமங்கள் முதலில் தமிழில்தான் இருந்தன என்றும், தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் தமிழுக்கு வந்தன என்றும் நிலவும் கருத்திற்குஅது வலுச்சேர்ப்பதாக உள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட வழக்கங்கள் எழுத்து வடிவம் பெற்று, பின்னாளில் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பின்னர், காலத்தால் தமிழ்நூல்கள் அழிந்த பின்னர், சமஸ்கிருதத்தில் இருந்து மீண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டவையே தற்போதுள்ள ஆகம நூல்கள் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள்தான் தமிழ் ஆகமங்கள் ஆயின என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.