Description
பிற்கால சோழர்களில் முதலாம் இராஜராஜன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் காலத்தை சோழர்களின் பொற்காலம் என வரலாற்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.இராஜராஜசோழன் தனது வாழ்நாளில் போற்றி பெருமைப்படுத்திய பெண்மணிகள் இருவர். மதுராந்தகசோழன் என்கின்ற உத்தம சோழனின் தாயாரும் கண்டராதித்தனின் மனைவியுமான செம்பியன்மாதேவியார் அதில் ஒருவர். மற்றொருவர் அவனது மூத்தசகோதரியான குந்தவை நாச்சியார் என்கின்ற மந்தாகினி தேவி.
சோழர் குலத்தின் மூத்தபெண்மணி என்ற வகையில் பாட்டி உறவுமுறை உள்ள செம்பியன் மாதேவியாரை போற்றி பெருமைப்படுத்தியதில் வியப்பேதுமில்லை. தன்னைவிட சில வருடங்களமூத்தவரான குந்தவை நாச்சியாரை தனது தாய்க்கு நிகராக போற்றி பெருமைப்படுத்தியது வரலாற்றில் காணக் கிடைக்கிறது . தனது மகளுக்கு மூத்த சகோதரியின் பெயரையே வைத்துள்ளதும் குந்தவை நாச்சியார் மீது இராஜராஜசோழன் வைத்திருந்த மதிப்பும் மரியாதையையும் உறுதிப்படுத்துகிறது.
சோழ வரலாற்றில் குந்தவை என பெயரிடப்பட்டவர்கள் மூன்று பேர். கீழைச்சாளுக்கிய அரசகுல பெண்ணை இராஜராஜ சோழனின் பாட்டனாரான அரிஞ்செயச்சோழன் மணம்செய்திருந்தான்.இவர் வீமன் குந்தவை என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார். இவரது பெயரையே இராஜராஜசோழனின் திருத்தமக்கையான மந்தாகினி என்கின்ற குந்தவைக்கு சூட்டியுள்ளனர். இவர் மீது கொண்ட மதிப்பும் மரியாதையாலும் தனது மகளுக்கு குந்தவை என இராஜராஜசோழன் பெயரிட்டுள்ளான். இராஜராஜனின் மூத்த சகோதரி குந்தவையையும், மகள் குந்தவையையும் ஒருவராக கருதி குழப்பம் அடைவதுணடு. இராஜராஜசோழனின் அக்காள் குந்தவையை ஆழ்வார்பரந்தகன், குந்தவை பிராட்டியார், வள்ளவரையர் வந்தியத்தேவர், மாதேவர்மாதேவியார், திருமகளார், ஸ்ரீ பராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சிறப்பாகக் குறித்து வருகின்றன.