லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிடப் பரிணாமத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள்; பிடிமானங்கள்; அகவயமான உந்துதல்கள். இந்திய – தமிழகம் போன்ற பின்னடைந்த கலாச்சாரம், பற்றாக்குறையான அறிவியல் நோக்கு, பொறுப்பற்ற பொருளாதார அமைப்பு, அரைநாகரிகம், புராதனமான இனக்குழு மரபு மாறாத குருதி, மண், சாதி, கடவுள், பால் சார்ந்த உறவுகள் ஆகியவை நிலவுகிற எதார்த்தத்தில், இவற்றைக் கடந்து சென்று, பொதுவான மாந்தவிய உறவுகளின் மேன்மையை எடுத்துக் கூறுவது இன்றியமையாச் செயல்பாடாக இருக்கிறது.
இந்தச் செயல்பாட்டிற்கு ஆக்கம் தருவதாக எரிக் ஃபிராம் படைப்புகள் அமைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் முக்கால் கால அளவில் வாழ்ந்து மறைந்த இவருடைய நூல்களில் குறிப்பிடும்படியான ‘மனவளமான சமுதாயம்’ (The Sane Society – 1955) என்ற நூல் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.