கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய முக்குலத்தோர் குறித்து விரிவாகப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நூல். இவர்களை தேவர் என்று அழைப்பது தவிர்க்க முடியாதது என்று கூறும் நூலாசிரியர், தமிழர், திராவிடர் என்ற ஆய்வும் மாறுபட்ட கோணத்தில் விவாதமாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
கொற்றைப் பரம்பரையே பின்னாளில் குற்றப்பரம்பரையாகி விட்டதாகக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடும் நாகர் முதல் பாலை நிலத்து மறவர், சேரநாட்டு அகமுடையர் என முக்குலத்தோர் சரித்திரம் விரிந்து புதுக்கோட்டை குறுநில மன்னர்கள், நாட்டார்கள் என அவர்களது ஆளுமைகள் பிரமிக்கும் வகையில் விளக்கப்பட்டுள்ளன.
கள்ளர்களை அரையர், பல்லவர், சோழர் கலந்த இனத்தவர் எனக் குறிப்பிடுவதும், 348 பட்டப் பெயர்களை வரிசைப்படுத்தி குறிப்பிட்டிருப்பதும் வியக்க வைக்கிறது.
மறவர்கள் பாலை நிலத்து மக்கள் என்பதற்கான சான்றுகளும், போரில் முன்னின்றவர்கள் என்ற தகவல்களும் புதியது. நாயக்கர் காலத்தில் மறவர் சீமை ஒழுங்குபடுத்தப்பட்டதையும் முகம்மதியர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் மறவர்களின் நிலையையும், இப்போதைய கிளை பிரிவுகளையும் பட்டியலிட்டு விளக்கியிருப்பது சிறப்பாகும்.
அகமுடையர் என்பவர் முடியரசுக் காலத்தில் அகப்படைப்பிரிவினர், உயர்ந்த வாழ்க்கையைக் கைக்கொண்டவர்கள், லெமூரியா காலத்து மேருமலைக் காவலர்கள் என விவரிக்கும் நூலாசிரியர், பூலித்தேவர், மருதுசகோதரர்கள் என முக்குலத்தோர் சரித்திரத்தை சாகச விடுதலை வீரர்களின் வரலாறாகவும் விளக்கியுள்ளார். முக்குலத்தோர் சரித்திரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் நூல்.