முரசுப் பறையர் | தி. சுப்பிரமணியன்

150

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

இந்தியச் சமூகம் சாதியச் சமூகமாகவும் சாதியப் பண்பாடாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது. அது அரசியலாலும் பண்பாட்டாலும் தாழ்த்தப்பட்டோ உயர்வடைந்தோ வந்திருக்கின்றது. அதேசமயம் தமிழகம் ஒற்றையடுக்கு கொண்ட சாதியமைப்பை இடைக்காலத்தோடு இழந்து, தென்னிந்திய மக்களின் சவ்வூடு பரவலாகப் பல இனங்கள் சேர்மமான கதை ஈர்ப்புமிக்கது. தமிழ்ச் சாதிகள் மீது தெலுங்குச் சாதிகள்; அவற்றின் மீது கன்னடச் சாதிகள்; அவற்றின் மீது மலையாளச் சாதிகள் என ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்துகிடக்கின்றன. இத்தகைய பன்மையடுக்கு கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கம் பற்றிய கண்திறப்பாக முரசுப் பறையர் நம் கைகளில் தவழ்கிறது.

இந்த நூலில் முனைவர் தி. சுப்பிரமணியன் முரசுப் பறையர் என்னும் தலித்துகள் கர்நாடகத்திலிருந்து தமிழகம் வந்து எவ்வாறு குடியமர்ந்தார்கள் என்பதை வரலாறு, சமூகம், பண்பாடு எனும் மூன்று பொருள்களில் விவரிக்கிறார். இதை முரசு நாட்டினர் எல்லை எது என்பதில் தொடங்கி அவர்களின் தோற்றம், தொல்பழங்கால சமுதாய அமைப்பு, குலங்கள், வழக்காறுகள், தெய்வவழிபாடு, திருமணமுறை, பண்டிகைகள், சடங்குகள் போன்றவை குறித்துப் பல்வேறு தகவல்களை இனவரைவியல் நோக்கில் வழங்குகிறார்.

மேலும் தமிழகத்தில் வாழும் முரசுக் கொங்கரு, திகலரு, புட்ட ஒலையரு, ஒலையரு, முரசுப் பள்ளி, மக்கதூர் போன்ற ஏழு கன்னடம் பேசும் தலித்துகளைப் பற்றியும் இனவரைவியலாக நமக்குக் காட்சிப் படுத்துகிறார். இதற்காக தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் களப்பணி செய்தும் பண்டைய நடுகற்கள், கல்வெட்டுச் சான்றுகள், வரலாற்று ஏடுகள், நிகழ்கால இனவரைவியல் சான்றுகள் எனப் பன்முகப்பட்ட தரவுகளைக் கொண்டும் இந்தச் சமூக ஆவணம் எழுதப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் தமிழ்ச் சூழலில் தலித் சொல்லாடலைப் புதிய பரிமாணத்தில் இந்த நூல் விரிவுபடுத்துகிறது. கூடவே, தமிழ்ச் சமூகத்தின் பன்மை அசைவியக்கத்தை இனவரைவியலாகப் பேசுகிறது. தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

Weight0.25 kg