மன்னர் ரிபெல் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆண்வழி வாரிசும், வடமலை திருவநாத வணங்காகுடியார் சேத்தூர் அரசர் சேவுகப் பாண்டியத் தேவரின் பெண்வழி வாரிசுமான ஜமீன்கொல்லங்கொண்டான் பிச்சைராஜா என்ற சேவுகப் பாண்டியரின் மனைவியான நூலாசிரியர் தொகுத்த வரலாற்றுச் செய்திகள், அவரது மகன் விஜய் ஜெகந்தாத் முயற்சியால் நூலாகியுள்ளது. 2018-இல் முதல் பதிப்பைக் கண்ட இந்த நூல் தற்போது இரண்டாம் பதிப்பாக வெளி வந்துள்ளது.
‘நாச்சியார் என்றால் தலைவி. வீரமங்கை, மறத்தி’ என்று பொருள்படும். ஜமீன்கள்தோறும் நாச்சியார்கள் நங்கூரமாய் நின்று மன்னர்களை வழிநடத்தியுள்ளனர்.
தமிழ்ச் சேவை புரிந்த மன்னர்களின் பெருமைகள், அவர்களது சாதனைகளுக்கு மறைமுகமாகத் துணை நின்ற மகத்தான நாச்சியார்களின் மாண்புகள், அவர்களுடைய வீரம், தியாகம், பொறுமை, ஆன்மிகச் சக்தி, சமயோசித திறமை என்று அவர்களுடைய வரலாற்றுச் சிறப்புகள் இளைய தலைமுறையினருக்கு விளக்கப்பட்டுள்ளது.
1760 – ஆம் ஆண்டு முதல் 21-ஆம் நூற்றாண்டு வரையில், தமிழர்கள் பெருமைப்படத்தக்க நற்குலப் பண்புகளின் அடையாளமாக விளங்கிய பெண்ணரசிகளின் வாழ்க்கை வியக்க வைக்கிறது.
மன்னர் குடும்பத்தில் பிறந்த ஒரு பாட்டி தனது பேரக் குழந்தைகளுக்காக எழுதிய முந்தைய மாதரசிகளின் வரலாற்றுச் செய்திகள், நாளைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகத்தை விட்டுச் சென்றுள்ளது.
கொல்லங்கொண்டான், சேத்தூர், சிவகிரி, ஊர்க்காடு, சொக்கம்பட்டி, சிங்கம்பட்டி, இராமநாதபுரம், சாயல்குடி, இளம்செம்பொன்னூர் ஆகிய ஒன்பது பாளையங்களைச் சேர்ந்த பெரியதாயீ, முத்துத் திருவாயி நாச்சியார் உள்பட 42 நாச்சியார்கள் குறித்த வரலாறு, அவர்களுடைய அரிய புகைப்படங்களுடனும், சான்றுகளுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாசிப்பவரை வியக்க வைக்கின்றன. பல நாச்சியார்கள் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ள சான்றுகளைப் பார்க்கும்போது, அந்தக் காலத்திலேயே பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள முடிகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன்படக் கூடிய அரிய நூல்.