பழங்குடிகள் தங்களது குழு நடவடிக்கையில் அதிக ஞானமும், அறிவியல் ஆற்றலும், இயற்கையை எதிர்கொள்வதிலும் மிதமிஞ்சியவர்கள். ஆனால் இவர்கள் பொது சமூகத்துடன் உறவாடி தொடர்பு கொள்ளும் போது பாதுகாப்பற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். அரசாங்க சட்டதிட்ட நெறிமுறைகளை புரிந்து கொள்ளும் கடினத்தால் மனவழுத்ததிற்காளாகி வீழ்த்தப்படுகிறார்கள்; கிறிஸ்டோபர் பழங்குடிகள் ஆய்வாளர்.
ஊராளி, தனியான மொழியை கொண்ட இனம். இவர்கள் குறித்து இதுநாள் வரை தனி நூல் வந்ததில்லை. பல்லாண்டு காலம் ‘பரண்’ என்ற தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இம்மக்களுடன் பயணித்து அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், வழிபாடுகள் இவைகளை முழுமை தொகுக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் என்றால் மிகையான பாராட்டு அல்ல..
தென்னகம், மேற்கு மலைகளில் வாழும் காடர், பளியர், முதுவர், காணி குடிகள் குறித்தும், நீலகிரி மலையில் வாழும் தோகதர், குறும்பர் உள்பட ஏழு குழுக்கள் குறித்தும் பல ஆய்வு நூல்கள் வந்து ஆனால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பொது தான் ஊராளி, லிங்காயத்து, சோளகர் போன்ற பழங்குடி இனப்பட்டியல் மக்களை பொதுச்சமூகம் மெல்ல அறிந்தது. சமூக வழக்கறிஞரான திரு. பால முருகன் அவர்களின் ‘சோளகர் தொட்டி’ புதினம் மூலம் ஓரளவிற்கு அறிமுகமானார்கள். பொதுவுடமை கட்சியின் தனி பிரிவாக செயல்பாடுகளாலும் அமைப்புகளுக்குள் இம்மக்கள் தெரிந்தார்கள்.
பன்னிரண்டு உட்பிரிவுகளை கொண்ட ஊராளி மக்களுக்கும் அங்குள்ள லிங்காயத்து மக்களுக்கும் உள்ள தொடர்பு முல்லை மருத நிலப்பரப்பில் உள்ள கம்பளத்து நாயக்கர் அருந்ததியர் கதைபோல் உள்ளது. அதே போல் தனி மொழி உடைய சோளர்களுக்கும் இவர்களுக்குமுள்ள உறவு முறைகளை விளக்குகிறது. அனைத்து பழங்குடி மக்களும் மாட்டுக்கறி உண்பதில்லை என்ற உண்மையை பலரும் அறிந்திருந்தாலும் இதை பொதுவெளி சமூகத்திற்கு பரவலாக தெரிவதில்லை. ஆனால் காட்டுக்குள் வாழும் லிங்காயத்துகள் புலால் உண்பதில்லை பலரும் அறியா செய்தி.
ஊராளிகளின் தொன்மக்கதைகள் கிரேக்க கதைகளுடன் ஒத்து செல்வதை நூலாசிரியர் விவரிப்பது சித்தர்கள், முனிவர்கள், ஜெஜூட் பாதிரிமார்களைப்போல் ஆய்விட்டுள்ளார் என்பதை என்பதை நிறுவியுள்ளார்.
கொடிய நஞ்சினை பிரிட்டீஷார் வனச்சட்டமாக்கினார்கள். அதை இன்று வரை பொது விவாதமாக்காதன் விளைவால் மேற்கத்திய மனப்பான்மையுடன் ‘பாங்காட்டிற்குள் எப்போது குயேறினீர்கள்’ என்ற கேள்வியுடன் ஆய்வு செய்து, வனம் என்பது மனிதர்கள் வாழ பகுதி என்ற மனநிலையை இன்றுவரை நிலைநிறுத்திவிட்டார்கள்’’ என்பதை சொல்லாமல் பதிவு செய்துள்ளது நூல்.
அரச மரபில், காட்டிற்குள் வேட்டையாடுவதன் மூலம் கொரில்லா போர் முறையும் மனவலிமையும் பயிலும் இடம். கருங்காடு என்ற பாங்காட்டில் வேட்டையாடிட போகும் போது விலங்குகள் மறைந்திருந்து தாக்கும். அதனிடமிருந்து தப்பிப்பது, அல்லது அதனை எதிர்கொண்டு வேட்டையாடி கொல்வது. திக்குத்தெரியாத காட்டில் திசைமாறி சென்று ‘மீண்டு’ வருவது இது தான் அன்றைய காடுகளின் பயன்பாடுகளின் ஒன்று. இப்படி பயிற்சிக்கு காடுகளை அறிந்த குழுக்கள் இருந்தால் தானே தப்பிப்போனவர்களை மீட்க முடியும். வனத்துள் பல்லாயிரம் ஆண்டுகளாக மிளகு, ஏலம், இஞ்சி பயிரிட, பட்டை, சோம்பு, கருவேப்பிலை, அரண்மனை, அணைகள் கட்ட கடுக்காய், சித்த மருத்துவ பெருபாலான மூலிகைகள் இருக்கும் இடமறிய காடறிவந்தவர்களுக்குத்தானே கண்டறிந்து கொண்டு வரமுடியும். மனித குலம் தோன்றிய காலம் தொட்டு காடுகளுக்குள் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற பார்வையை புறம் தள்ளியதன் விளைவு தான் வனம் என்பது தனிக்கிரகமாக பார்க்கும் மனநிலையை உடைக்கும் நூலினை தனக்கே உரிய மெல்லிய பாணியில் எழுதப்பட்ட நூல்.
இந்தியாவில் வனச்சட்டம் என்ற முதலாளிகனுக்கான சட்டத்தை கொண்டு வந்தபின்னர் மலைகளில் வாழ்ந்த மக்கள் ‘உழுதிடும் நிலத்தை காடு என்றே சொல்லும் பழக்கம் உள்ளவர்கள் என்று அறியாது, வேளாண்மை நிலத்தை காடு (forest) என எழுதி காட்டில் மைப்பகுதியில் வாழ்விடமாக கொண்ட மக்களை வெளியேற்றி விட்டனர். இதை நூலாசிரியர் ‘பிச்சைக்காரர்கள் அல்லாத இனத்தை பிச்சை எடுக்க வைத்துவிட்டார்கள்’ என நாகரீகமாக பதிவிட்டுள்ளார்.
இம்மக்களின் பிரதான உணவு ராகி என்ற கேழ்வரகு. இதன் தாக்கம் பெண்ணை கூட ராகி என்றே மறை பொருளாக சொல்லும் வழக்கம் உள்ளதை அவர்களது சடங்கு முறைகள் தொகுப்பில் பதிவிட்டுள்ளார். பில்லூர் என்ற சொல் தெலுகு சொல் என்பதால் பூனை அல்லது அதைபோன்ற தந்திரம் உள்ள மக்கள் வாழ்விடம் என நம்பிக்கை ‘பில்லு’ என்பது ஊராளி மொழியில் வாழ்விடம் என வெளிச்சமிட்டு பில்லு என்ற புல் வகையில் வீடுகளை வேய்ந்த வீடுகளின் படத்ததையும் பதிவிட்டுள்ளது இந்நூல்.
திராவிட குழுக்கள் பெரும்பாலும் குடும்ப நிகழ்வில் தாய்மானுக்கு மையப்பங்குண்டு என்பதை பல சான்றுகளோடு ஊராளி மக்கள் குடும்ப நிகழ்வுகளான திருமணம், குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு வரை மக்களோடு வாழ்ந்து அவர்களது மொழியில் பேட்டியாக ஊர், பெயர், அவர்களது படம் உள்ளிட அனைத்தையும் பதிவிட்டுள்ளது இந்த ஆய்வேடு.
குடும்ப பிரச்சனைகளில் பஞ்சாயத்து முறை வந்தால் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் லிங்காயத்துகளிடம் உள்ளது. அதே போல் கோயில் திருவிழாக்களில் பூசாரிகளாக ஊராளி இனத்தினர் இருந்தாலும் லிங்காயத்துகளே பஜனை பாடும் அதிகாரம் உள்ளதை குறிப்பிட்டு இவர்களுக்குளிருக்கும் சாதிய முரண்பாடுகளையும், ஊராளிகளுக்கும் அருந்ததிய மக்களுக்கும் இருக்கும் சாதிய ஏற்ற தாழ்வு முறையும் போகிற போக்கில் பதிவிட்டு வருகால ஆய்விற்கு பாதை அமைத்துக்கொடுத்துள்ளார் ஆய்வாளர் ஊராளன்.
தரைப்பகுதியில் குடியானவர்களுக்கு சேவைக்குடிகள் இருப்பது போல் அங்கு சேவை குடிகள் என்பவர்கள் அருந்ததியர் மட்டுமே இவர்களே முடிதிருத்தம் செய்திடும் பணியையும், இறப்பு சடங்கு செய்வது மட்டுமே செய்கிறார்கள். ஆசாரி, சலவை தொழில், குயவர் என்ற குழுக்கள் பணியை இக்குழுக்கள் தங்களது தேவையை குறுக்கி தங்களுக்கு தாங்களே செய்துகொள்கிறார்கள் என்ற செய்தியும் கூர்ந்து கவனிக்கதக்கது.
ஊராளி குழுக்களுக்குள் மறுமணம் எளிதாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் தனித்து பேசக்கூடாது என்ற நடைமுறை 1990 வரை கட்டுப்பாடாக இருந்தது. தற்போது சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதாம். பழங்குடி மக்களிடம் இப்படியான கடுமையான சட்டம் இருப்பது ஆழ்ந்து ஆய்வு செய்திட வேண்டும் என்றே தோன்றுகிறது. திருமணச்சடங்கில் தரைப்பகுதியில் உள்ள கமளத்து நாயக்கர், அருந்ததியர், கன்னடம் பேசும் குழுக்களிடம் வெற்றிலையில் பால் தொட்டு தலையில் வைத்து ஆசிர்வசிக்கும் பழக்கம் உள்ளது போல் அம்மக்களிடம் உள்ளது கூர்ந்து கவனித்தக்கது. அதே போல் தலைப்பாகை கட்டும் நடை முறை, வெள்ளை ஆடை உடுத்தி திருமண சடங்கு செய்வது, கருப்பு பாசியை நாத்தனானர் தாலியாக கட்டுவதில் உள்ள நடைமுறை தரைப்பகுதியில் மடி மாற்றும் சடங்கிற்கும் உள்ள தொடர்பு, மாப்பிள்ளை பெண் கங்கணம் கட்டிய 24 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருப்பது, கோல்குச்சி என்ற மணமுறிவு குறியீடு, பெண்ணுக்கு நகை பணம் கொடுத்து திருமணம் முடிக்கும் பழக்கம் என பலவற்றை தொட்டு பெரும் ஆய்விற்கு வழிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
இம்மக்களின் மருத்துவ அறிவை தனி பட்டியலாக தொகுத்து, இறப்பை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி நம்மை செருப்பால் அடிக்காமல் அடிக்கிறார் நூலாசிரியர்.
பசுங்கோமியம், பசும்சாணம் இன்று குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடம் கொள்கை கோட்பாடாக மாறிவிட்டது. ஊராளி மக்களில் இறந்தவர்கள் புதைத்த பின் அனைவரும் சாணத்தை உடலில் பூசி குளிக்கும் நடைமுறையும் மலையாளிகள் என்ற குலத்தினரிடம் உள்ள மகாபாரத கதைகளும், இதே போல் இறந்த ஆண்கள் அனைவருக்கும் நடுகல் நடும் பழக்கம் தரப்பகுதியில் உள்ள கன்னடம் பேசும் சில குழுக்களிடமும், தெலுகு பேஉஸ்ம் அருந்ததிய சில குழுக்களிடம் உள்ளது போல் இம்மக்களிடம் உள்ளது.
பார்ப்பன பூசாரிகள் தலையில் கால் வைத்து ஆசிர்வசிக்கும் மரபினை மறுத்தலிக்கும் நாம் இப்பழக்கம் பழங்குடி மக்களிடம் உள்ளதை நாம் கவனிக்க மறுத்து விட்டோம் என்ற பார்வையை புறம் தள்ளமுடியாது.
இறந்தவர்களுக்கு இளநீர் விளக்கு எண்ணை தேய்த்து வழிபடும் பழக்கம் தேவேந்திர குல வேளாளர் குலத்தில் ஒரு பிரிவில் சாமி வழிபாட்டில் உள்ளது போல் ஊராளி இனத்தில் கொடுவார் குழுவினரிடம் உள்ளது கவனிக்கத்தக்கது.
பண்ணாரியம்மன் இவர்களது தெய்வத்தை பெருந்தெய்வமாக மாற்றி விட்டனர் என்ற சான்றுடன் நிறுவியுள்ளார் ஊராளி.
ஊராளி மக்களிடம் உள்ள கோவில் வழிப்பாட்டு பாடல், தாலாட்டு, ஒப்பாரி இசைகருவி, புழங்கு பொருள்கள், சொற்கள் என தொகுத்து ஒரு பல்கலை கழகம் செய்திடும் பணியை தனிமனிதனாக சாதித்து விட்டார் நூலாசிரியர்.
பிரிட்டீஷ் ஆட்சி வரை காடுகள் முழுவது இவர்களுக்கு சொந்தமானதாக இருந்ததை வனச்சட்டம் மூலம் வன நிலம் வகைப்பாடு செய்ப்பட்டு எஸ்டேட் ஆக்டிற்கு கொண்டு வந்து குத்தகை நிலமாக்கினார்கள். இதனால் மலைவாழ் மக்கள் அல்லாத மக்கள் அங்கு குடியேற்றம் நடந்ததன் விளைவால் இம்மக்கள் அவர்களின் அடிமைகளாக்கி விட்டனர் என்பதை இட்லி போண்டாவிற்கு நிலத்தை விற்ற சான்றுகளுடனும் அரசியல் சான்றுகளுடனும் நிறுவியுள்ளார் ஆசிரியர்.
வனத்தை காப்போம் என பேசுபவர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள், சமூக அக்கரையுள்ளோர் படிக்க வேண்டிய நூல் என நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்.