தமிழர் கலை மரபு அகநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளதைப் பேசுகிறது இந்நூல். தமிழரின் மரபார்ந்த கலை வடிவங்களை விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் நூலாசிரியர்.
சிற்பக் கலைகளைப் பற்றி பேசும் முதல் கட்டுரை, காலந்தோறும் அதன் வளர்ச்சிப் போக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் சிற்பக் கலை வளர்ச்சி சைவ, வைணவ சமய வளர்ச்சியுடன் மிக நெருங்கிய தொடர்புள்ளதைக் காண்கிறோம்.
நடுகற்களின் வாயிலாகப் பழங்காலத்தில் கல்லில் உருவங்களைப் பதிக்கும் முறை இருந்ததென்பதையும், பரவலாக கல் சிற்பங்களை அமைக்கும் பாணியைத் தொடங்கி வைத்த பெருமை பல்லவர்களுக்குரியது என்பதையும் நூல் விளக்குகிறது.
தமிழகத்தில் சோழர் கால கட்டடக் கலை, சிற்பக் கலை பற்றியும், அவர்கள் பாணியும் பேசப்பட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழ் சிற்பக் கட்டடக் கலையின் உயர்ந்த நிலையை எடுத்துக் காட்டும் தலைசிறந்த படைப்பாகும்.
விஜயநகர மன்னர்களின் கலைப் பணிகள் பேசப்பட்டுள்ளன. கிருஷ்ண தேவராயரின் காலத்தில் தமிழகத்தில் மீண்டும் கலைப் பணிகள் சிறப்புற்றதைக் காண முடிகிறது. நாயக்கர்கள் காலத்துக்குப்பின் சிற்ப, கட்டடக் கலைகள் நசிந்து போனதை நூல் பதிவு செய்கிறது.
பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 கரணங்கள், நிகழ்த்து முறைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளதையும் ஆடல் மகளிரின் அபிநயங்கள் படங்களுடனும் ஒரு கட்டுரை விவரிக்கிறது.
சிற்பங்களில் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளும் சிற்பங்களின் நுணுக்கங்களும், கோயில் கட்டடக் கலை அழகியல், இறை உருவங்கள், நுண்கலைகள் என்று பெரும் தேடலினூடாக தமிழரின் கலை வளர்ச்சிப் போக்கு நூலில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
பழந்தமிழர் மரபும் கலையும் – ஜே.ஆர்.லட்சுமி
350/-