கரிகால் வளவனின் கல்லணை மட்டுமே தமிழர்களின் நீர் மேலாண்மைக்கான சான்றாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பாண்டியர்களின் நீரியல் மேலாண்மை குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர். அதன் பலனாக, ‘பராக்கிரம பாண்டியன் கல்லணை’ எனும் பாண்டியரின் நீரியல் மேலாண்மையை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார். பாண்டியர் காலத்தில் வாய்க்கால் வெட்ட ஒதுக்கப்படும் நிலங்கள், அதற்கான வழிமுறைகளை கல்வெட்டு ஆதாரங்களுடன் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் கட்டிய கல்லணைகள் நீரைப் பிரிக்கும் வகையிலும், பாண்டியரின் கல்லணை நீரைத் தடுக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இது வைகையின் இயல்பிற்கேற்ப கட்டப்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
அந்தவகையில் கரிகால் வளவனின் கல்லணையில் உள்ள அணையில் பொறியியல் மற்றும் நீரியல் மேலாண்மைத் தொழில்நுட்பத்தையும், பாண்டியர்களின் தடுப்பணைகள், மதகுகள் மூலம் சிறு கால்வாய்களைக் கையாண்டது குறித்தும் இந்நூல் பேசுகிறது. இதுவரை ஓரளவே எழுதப்பட்டுள்ள பாண்டியர் வரலாற்றுக்கு இந்த ஆய்வு மேலும் வலுசேர்த்துள்ளது இடைக்கால பாண்டியர் காலத்தில் நீரியல் மேலாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுமான வழிமுறைகள் மற்றும் தற்போது நீரியல் மேலாண்மை அடைந்துள்ள மாற்றங்களைப் பதிவு செய்ய நூலாசிரியர் தவறவில்லை. பிற்குறிப்பில் சங்ககாலப் பாடலில் இடம்பெற்றுள்ள நீரியல் தொழில்நுட்பங்களைப் பதிவு செய்துள்ளது சிறப்பு. தமிழர்களின் தொழில்நுட்ப வரலாற்றையும், நீரியல் மேலாண்மையையும் அறிய விரும்புவோருக்கு இந்நூல் மிகவும் பயன்படும்.