பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம் :
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமையான இலக்கியம் சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியமான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.
எட்டுத் தொகையில் “ஒத்த” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பதிற்றுப்பத்தின் பெயர்க் காரணம்,தொகுப்பாக்கம் பின்புலம், துறை, தூக்கு, வண்ணம், சேரர்களின் வரலாற்றைக் கூறும் கல்வெட்டுக்கள் பதிற்றுப் பத்தினைப் பாடிய புலவர்கள் பாடப்பெற்ற மன்னர்கள் போன்ற செய்திகளை ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.
பத்துப்பத்து என்பது பதிற்றுப்பத்தின் பொருளாகும். பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள் பாடிய பத்துப்பத்துப் பாடல்களின் தொகுதியே பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது.
இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார் இன்னார் என்பது அறியமுடியவில்லை என்றாலும் இந்நூல் சேர மன்னர்களை மட்டுமே சிறப்புற பாராட்டிப் பாடப்பெற்ற நூலாகும்.