ஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை… மனிதர்களுக்குள் உடல் உறுப்பு மாற்றம் மட்டுமே உண்டு என்பார்கள். அந்த உடல் உறுப்பு மாறுபாட்டையும் கூட கேள்வி கேட்டவர்கள் பெண் உரிமைச் சிந்தனையாளர்கள். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்ணியம் என்று பேசப்படும் வார்த்தைகள் எப்போது உருவானது, எப்படி உருவானது, இதனை முன்னெடுத்த மனிதர்கள் யார் என்ற வரலாற்றுத் தகவல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
இன்னும் கதைகள், புராணங்கள், தொன்மங்கள் ஆகியவற்றையே அறிவாதாரங்களாகக் கொண்டு சாதி, மதச் சழக்குகளில் அருமை வாய்ந்த மானிடப் பிறப்பைப் பாழாக்கிக் கொண்டிருக்கிற கீழைத்தேயக் ‘கிழட்டுப்’ பண்பாடுகளுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்குப் பெண்ணியம் பற்றிய கல்வியும், அறிவும், – புரிதலும் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்பதை மிக விரிவாக விளக்கிச் செல்கிறது இந்நூல்,
கருத்துக்களை எளிதாய்ப் புரியவைக்கும் வகையிலான தமிழாக்கமாக
அமைந்துள்ள இந்நூல் பெண்ணியம் என்பது பெண்களுக்கான அறிவாக மட்டுமில்லை, அது ஆண், பெண் முதலான அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக இருக்கின்றது என்ற கருத்தை உரத்துச் சொல்கிறது.