தமிழ்ச் சிறுகதை உலகில் இன்றளவும் தவிர்க்கமுடியாத ஆளுமையாகக் கோலாட்சிவரும் புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு என்றென்றைக்கும் மரணம் இல்லை.
அவரைப் பற்றியும் அவரது படைப்புக்களை பற்றியும் தொடர்ந்து பாராட்டுரைகளையும் விமர்சனங்களும், கொள்கை அடிப்படையிலான எதிர்மறையான தீர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன.
அவ்வகையில் புதுமைபித்தனை முழுமையாக புரிந்துகொள்ள வகைசெய்யும் காத்திரமானதொரு ஆய்வாவணமாக விளங்குகிறது இந்நூல்.
புதுமைப்பித்தன் சிந்தனையைக் கலையாக்கும் கலைஞன். கலைப்படைப்பு அவரது சிந்தனை கற்பனையின் பிழிவு மேலோட்டமாக வாழ்க்கையை பார்த்து, நடக்கின்ற எதார்த்தத்தை இலக்கிய படைப்பில் அவர் பிரதிபலிக்கவில்லை.
அறிவு இகந்த விளிம்பில் தம்மை நிறுத்திக்கொண்டு அறிவார்ந்ததாகச் சொல்லப்படுகின்ற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றவர் புதுமைப்பித்தன் என்று இந்நூல் நிறுவுகிறது.