செப்பேட்டின் அமைப்பு
எசாலம் செப்பேடு பதினைந்து இதழ்களுடன் ஒரு செப்பு வளையத்தில் கோக்கப்பட்டுள்ளது. வளையத்தில் சோழ மன்னரின் புலி முத்திரையும் உள்ளது. சோழரின் சின்னமான புலியுடன் இரு மீன்களும் ஒரு வில்லும் உள்ளன. மேலும் ஒரு பன்றியும் சுவஸ்திகமும் சாமரமும் வெண்கொற்றக்குடையும் சக்கரமும் முத்திரையில் உள்ளன. மீன்கள் பாண்டியரையும் வில் சேரரையும் பன்றி சாளுக்கியரையும் வென்று அவர்களுடைய நாடுகள் சோழப் பேர, சில் இருந்தமையைக் குறிப்பிடும் எனலாம். பெருநிலப்பரப்பை ஆண்ட சக்கரவர்த்திக்குச் சக்கரம் காட்டியது பொருத்தமேயாகும். இரட்டை மீன்களைத் தொடர்ந்து விளக்குத்தாங்கி, வாள். அம்பு மற்றும் பரசினை முத்திரையில் காண்கிறோம். மேலும் இதழ் விரிந்த தாமரை ஒன்றும் வில்லின் கீழே சூலம் ஒன்றும் பன்றியை அடுத்துத் தோரணம் ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. வெண்கொற்றக்குடை, சாமரம், சுவஸ்திகம், விளக்குத்தாங்கி போன்றவை மங்கலச் சின்னங்கள் எனலாம். சூலம் சிவபெருமானைக் குறிப்பாகச் சுட்டும் எனலாம். சூலத்தேவர் செப்புச்சிலையும் சில சிவன் கோயில்களில் இருப்பதைப் பலரும் அறிவர். இலச்சினையில் தோரணம் இடம்பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணமிருக்க வேண்டும். முதல் இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் கடாரத்தை அம்மன்னன் வென்று அங்கிருந்து வித்தியாதரத் தோரணத்தைக் கொண்டு வந்ததாக உள்ளது. அச்செயலையே இலச்சினையில் இடம் பெறும் தோரணம் குறிப்பிடும் எனலாம். பிற சோழர் செப்பேடுகளின் முத்திரைகளில் இடம்பெறும் சின்னங்களே பெரும்பாலும் இதில் இடம் பெறினும் சிறு வேறுபாடுகள் உள்ளன. புலிச் சின்னமானது வங்காளப் புலியாக இன்றிச் சிறுத்தைப் புலியாக உள்ளது. கரந்தைக் கோவிந்தராசுவும் சிறுத்தையே சோழரின் சின்னம் என்பார். இலச்சினையில் இருவரியில் எழுதப்பட்ட வடமொழிக் கிரந்தலிபி உள்ளது.
ராஜத் ராஜன்ய மகுடச்ரேணி ரத்னேஷ சாஸநம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேஸரிவர்ம்மன:
‘அரசர்களின் திருமுடி வரிசைகளின் இரத்னங்களில் திகழ்வதான இது பரகேஸரிவர்மனான ராஜேந்திர சோழனின் சாசநம்’ என்பது இதன் பொருள். சாசநம் என்பது கட்டளை என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும். இராசேந்திர சோழனுடைய வேறு செப்பேடுகளிலும் இம்முத்திரைச் சுலோகம் இடம் பெற்றுள்ளது. மிகச்சிறிய வேறுபாடு உண்டு.
எசாலம் செப்பு இதழ்களின் நீளம் 34 செ.மீ. அகலம் 16.5 செ.மீ. வளையம் மட்டும் 34 செ.மீ. விட்டமும் 2 செ.மீ. பருமனும் கொண்டுள்ளது. முத்திரையின் விட்டம் மட்டும் 13.5 செ.மீ. ஆகும்.
முன்பே குறிப்பிட்டதற்கிணங்க வடமொழிப் பகுதி முதல் நான்கு ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. கிரந்த லிபியில் தெளிவாக வாசிக்கும் நிலையில் இது வெட்டப்பட்டுள்ளது. எஞ்சிய 1″ ஏடுகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பகுதியும் தெளிவாக வாசிக்கும் நிலையில் வெட்டப்பட்டுள்ளது. எழுத்துகள் அழகாகவும் உள்ளன. வடமொழிப்பகுதி சுலோகங்களாக அமைய, தமிழ்ப் பகுதி உரைநடையாக அமைந்துள்ளது.