தமிழர் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உயர்வையும் உரத்தையும் சங்க இலக்கிய நூல்கள் சரஞ்சரமாய் எடுத்து இயம்புகின்றன. அன்றைச் சூழலில் வாழ்ந்த மக்களின் மனப்போக்கும் மனிதப் பண்பும் சிற்றுயிர் பரவிய சிந்தனையும் ஒற்றையுயிர்க்கும் இலக்கணம் வகுத்தப் பதிவுகளும் ஆடியாய் இன்றும் அழகுமிகு காட்சியாய் மனத்தின் மாட்சியாய் அமைந்துள்ளன.
நம் முன்னோரின் வாழ்வு நெறிகள், மேன்மைப் பண்புகள், கொடைச் சிறப்புகள், நாட்டுப்பற்று, கலையுணர்வு, காதலின்பம், இல்லற ஒழுக்கம் இவையெல்லாம் இலக்கியங்கள் நமக்களித்த கொடையாகும். முன்மாதிரியாகக் கொள்ளத் தக்க தலைவன் – தலைவி, பிற மாந்தர்கள், அகம் – புறம் என இரு திணைக் கருத்துகளை மிகைப்படுத்தாது இயல்பாய்க் கூறுவன இலக்கியங்கள். தமிழர் வாழ்வின் வேராக அறம், பொருள், இன்பம் மூன்றும் அமைந்திருந்த காரணத்தாலேயே இலக்கியங்கள் மக்கள் மனத்தைப் பண்படுத்துகின்றன; வாழ்வை நெறிப்படுத்துகின்றன.
நீதி வழுவாத நெறி பிறழாத அரசனின் மாண்பு, புலவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளன்மைப் பண்பு – புலவர்பால் கொண்டிருந்த பெரும் மதிப்பு, போரிலும் அறங்காத்தல் விருந்தோம்பலின் சிறப்பு, தீதென்றால் எடுத்துச் சொல்லும் பக்குவம் இவையாவும் சங்ககாலத்தின் போற்றிப் புரக்கத்தக்க ஒழுகலாறுகளாய் இன்றும் திகழ்கின்றன.
இத்தகைய காணக்கிடைக்காத பெருஞ்செல்வங்களாகிய பழந்தமிழ் இலக்கியங்களில் தெரிவு செய்யப்பெற்ற சில பாடல்களின் அடிகளுக்குச் செறிவான ஓவியங்களைத் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற ஓவியர்கள் வடிவமாக்கித் தந்துள்ளனர். ஓவியர்களின் கைவண்ணம் நம்மை மெய்மறக்கச் செய்வதோடு பழந்தமிழர்களின் மேன்மையை எடுத்துக்காட்டுகின்றன. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு ஆகிய நூல்களின் பொருள் பொதிந்த பாடல்கள் எழில்நிறைந்த ஓவியங்களாய் நம் விழிகளுக்கு விருந்து படைத்துள்ளன. கவின்மிகுக் காட்சிகள் தமிழர்களின் கண்களுக்குப் பரிசாய்க் காத்திருக்கின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தமிழ்மொழிக்காகவும், தமிழ்வளர்ச்சிக்காகவும் அரிய பல திட்டங்களை உருவாக்கிச் செம்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். அவ்வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சங்க இலக்கியக் காட்சிக்கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையில் சங்க இலக்கியக் காட்சிகள் நூலாக்கம் போன்றவை அம்மா அவர்களின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் பிறமொழியில் மொழி பெயர்க்கவும் அம்மா அவர்கள் ஆணையிட்டு தமிழ்வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்து வருகிறார்கள்.
இளைய தலைமுறையினர் தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் வாழ்வியல் முறையையும் அறிந்துகொள்ளவும் வாழ்வாங்கு வாழ்ந்துச் சிறக்கவும் சங்க இலக்கியப் பதிவுகள் பயன்படும் என்பதில் ஐயமில்லை.