Description
இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் இணையில்லா படைப்புகளை அதிகம் கொண்டிருப்பவை தமிழ் மொழியும் வடமொழி எனப்படும் ஸம்ஸ்கிருதமுமாகும். இரண்டுமே செம்மொழித் தகுதியுடையவை. இரு மொழிச் சொற்களும் பாலும் நீருமெனக் கலந்து இலக்கிய வளங்களில் தனிச் சிறப்பு பெற்றுள்ளன. அவ்வகையில், வடமொழி பண்பாட்டின் கலாசாரக் குறியீட்டுப் படிமம் ஆகவும், இந்திய இலக்கியத்தின் தொன்மமாகவும் போற்றப்படுபவை கவி காளிதாசனின் படைப்புகள். சங்க இலக்கியங்களின் தாக்கத்துக்கு காளிதாசன் ஆள் பட்டவர் என்பதும் அவரது கவி ஆளுமைத் திறனைக் கட்டமைத்ததில் சங்க இலக்கியங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதும் ஆய்வாளர்களின் முடிவான கருத்து. சாகுந்தலம், ரகுவம்சம், குமார சம்பவம், மேக சந்தேசம் என, காளிதாசனின் காலத்தை வென்ற காவியங்களுக்கும் அகநூனூறு, நற்றிணை, பட்டினப்பாலை என தமிழின் பல்வேறு சங்க இலக்கியப் பாடல்களுக்கும் இடையேயான கற்பனை வளம், சொல் நயம், குறிப்புப் பொருள் உத்திகள் போன்றவை குறித்து ஒப்பாய்வு செய்துள்ளார் நூலாசிரியர். சங்க கால – வடமொழி இலக்கியங்கள் குறிப்பாக, காளிதாசன் படைப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் தூண்டுகோலாகிறது இந்நூல்.














