நூல்: சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற
ஆசிரியர்: முனைவர். வீ.எஸ்.ராஜம்
வெளியீடு: மணற்கேணி
விலை: ரூபாய் 110
எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் மு.நூ. பதிவு
பழந்தமிழ் சமூகத்தில் சாதி – தீண்டாமை என்ற கோட்பாடுகள் தென்படுகின்றனவா என்கிற ஆராய்ச்சி முயற்சியின் விளைவே இந்நூல் என்கிறார் நூல் ஆசிரியர். தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் முனைவர் வீ.எஸ்.ராஜம் அம்மையாரின் இப்பணி போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.
இதற்காக சங்க இலக்கியம் தொடங்கி சங்கம் மருவிய இலக்கியங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார். அடியார்க்கு நல்லார், உவேசா, ஈடு உரைகளைத் தவிர அவற்றுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் சாதி உயர்வு-தாழ்வு, ஒதுக்கப்பட்டவர், தீண்டாமை போன்ற கோட்பாடுகளை தன்னால் காண முடியவில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சாதி, புலையர், இழிசினர், தீட்டு, சேரி போன்ற பல சொற்களை ஆழ்ந்து ஆராய்ந்து விரிவாக முன் வைத்துள்ளார். சங்க கால தமிழ்ச் சமூகம் இன்றிருப்பது போலவே ஒரு சாதிய சமூகமாகத்தான் இருந்தது என்று வாதிடுகிற ஒருவருக்கு இந்நூல் கட்டாயம் ஒவ்வாமையை தரும்.