தமிழுக்குப் புத்துயிரூட்டவும், தமிழை வளர்க்கவும் தமிழ்ச்சங்கம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். தமிழ்க் கல்லூரிகள் தொடங்குதல், சுவடிகள், நூல்களைத் தொகுத்து வெளியிடுதல், பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழாராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், இவரது தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தமிழறிஞர்கள் இதன் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இது ‘நான்காம் தமிழ்ச் சங்கம்’ என வரலாற்றில் முத்திரை பதித்தது. இவர் இதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். சங்கம் சார்பில் ‘செந்தமிழ்க் கலாசாலை’ என்ற தமிழ்க் கல்லூரி, பாண்டியன் நூலகம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.
பாண்டித்துரையார் பொன்னுச்சாமித் தேவரின் மூன்றாவது மகனாக 21.03.1867 அன்று பிறந்தார். உக்கிரப்பாண்டியன் என்ற பெயரும் அவருக்கு உண்டு. பாலவநத்தம் சமீன்தாராக விளங்கிய பாண்டித்துரையார் தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் நெஞ்சில் நினைந்து போற்றத்தக்கன.
தமிழ் மொழியை வளர்க்கப் பாண்டிய மன்னர்கள் மூன்று சங்கங்களை உருவாக்கினர். முதல் சங்கத்தைக் காய்சினவழுதியும், இடைச்சங்கத்தை வெண்டேர்ச் செழியனும், கடைச்சங்கத்தை முடத்திருமாறனும் தோற்றுவித்தனர் என்பர்.
பாண்டித்துரையார் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 14.9.1901-இல் உருவாக்கினார். இச்சங்கத்தில் 10-ஆம் ஆண்டு விழாவினைத் தஞ்சையில் 1910-இல் நடத்தினார்.
ரா. இராகவையங்கார் அவர்களை ஆசிரியராகவும் மு. ராகவையங்கார் அவர்களைத் துணையாசிரியராகவும் கொண்டு ‘செந்தமிழ்’ எனும் சீரிய இலக்கிய இதழை நடத்தினார். மேலும் கிடைத்தற்கரிய அரிய தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்தார்.
சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி என்ற நூலினைப் போதுமான நிதி வசதி இல்லாததால் வெளியிடாமல் இருந்தார். அவருக்கு நூல் வெளியிட உதவி செய்தார். (ஆ. சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ப. 1076).
ஈழத்தைச் சேர்ந்த நீதியரசர் கு.கதிரைவேற்பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழ்ச் சொல் அகராதி’ என்ற நூலின் மூன்று தொகுதிகளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வழி வெளியிட்டார். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் பதிப்புப் பணிக்கு உதவி செய்தார்.
மேலும் தமிழ்ச் சான்றோர்கள் பலருடைய நூல்களை மதுரைத் தமிழ்ச் சங்கம் வாயிலாக வெளியிட்டார். பாண்டித்துரையார் நல்ல கவிஞராகவும் விளங்கினார். இசைக் கலையிலும் ஈடுபாடு கொண்டவர்.
அந்நாளில் ‘ஸ்காட்துரை’ எனும் ஆங்கிலோ இந்தியர் திருக்குறளை மனம்போன போக்கில் திருத்தி வெளியிட்டு இருப்பதை அறிந்து பாண்டித்துரையார் கொதித்தெழுந்தார். அவரிடம் எஞ்சி இருந்த திருக்குறள் படிகளை விலைக்கு வாங்கி நெருப்பிட்டுக் கொளுத்திய தமிழ்ப் பற்றாளர் இவர். சைவத்தையும், தமிழையும் தம்மிரு கண்களாகக் சுருதிய பாண்டித்துரையார், ‘சைவமும் தமிழும் தழைத்தோங்க வழி செய்வோம்’ என்ற கோட்பாட்டின்படி வாழ்ந்தார்.
தமிழ்ப்பணியைத் தலையான பணியாகக் கருதிச் செயல்பட்ட பாண்டித்துரையார் தேசிய இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் விளைவாக வ.உ.சி. அவர்களுடன் நட்புப் பூண்டார்.