சிலப்பதிகாரமும் “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” (மங்கல.7) என மழையையே வாழ்த்தியுள்ளது. இந்நிலையில்,
மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் அற்ப உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே
(11:95, 96)
என மணிமேகலையும் உணவு கொடுப்போரை உயிரைப் பேணியவர் என்கின்றது. மெய்ஞ்ஞானியான திருமூலரும் “உடம்பார் அழியில் உயிரார் அழிவர். . .உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” (724: 1, 4) என உடம்பை வளர்க்கும் உபாயத்தை உரைத்துள்ளார்.
தொடர்ந்து வரும் தமிழ்ச் சமுதாய உருவாக்கங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தச் சிந்தனை மரபின் தொடர்ச்சியை ஆராய்வதன் மூலமாகத் தமிழ்ச் சமுதாய அடிப்படைகளை இனங்காண முடியும் என்ற நோக்கில், இந்த ஆய்வு தொடக்ககாலமான சங்க காலம் கொண்டிருந்த உணவு உற்பத்திமுறைகளின் அடிப்படையில் அக்காலச் சமுதாய உருவாக்கத்தையும் சமுதாய மாற்றங்களையும் இனங் காண்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு உற்பத்தியின் ஆதாரங்களாக அமையும் நிலம், நீர் என்ற இரண்டு அடிப்படை ஆதாரங்களோடு சங்ககால மனிதசமுதாயங்கள் கொண்டிருந்த உறவுகளின் அடிப்படையில் சங்ககாலச் சமுதாய மாற்றத்தை ஆராயும் இந்த ஆய்வு, IX
1. சமுதாய உருவாக்கமும் உணவும்
2. திணைச்சமுதாயங்கள்-உணவு ஆதாரங்களும் உற்பத்தி முறைகளும்
3. திணைசார் உணவுமுறைகள்
4. கள்ளுணவு
5. திணைமயக்கமும் பண்டமாற்றும் 6.உணவுப்பொருள் சேமிப்பும் பாதுகாப்பும்
7. அரசும் மருதநிலப் பெருக்கமும் மழையும்
8. சடங்கும் வழிபாடும் உணவுப் பெருக்கமும்
9. பகுத்துண்ணலும் விருந்துபேணலும்
10. சமுதாயப் படித்தரநிலைகளும் உணவு வேறுபாடும்
11. வறுமைச் சூழலும் சங்கச்சமுதாய நிலையும்
12. உணவும் சமுதாய மாற்றமும்
எனும் 12 இயல்களைக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
“சமுதாய உருவாக்கமும் உணவும்” எனும் இயலின் முதல் பகுதி உலகச் சமுதாய வரலாற்றில் காட்டுமிராண்டிக் காலம், அநாகரிக காலம், நாகரிக காலம் எனக் கொள்ளப்படும் காலங்களிலும்; பழங் கற்காலம், இடைக்கற்காலம், புதியகற்காலம் எனக் கருதப்பட்ட காலங்களிலும் உணவு உற்பத்தி நடைபெற்ற முறைகளாக எங்கெல்ஸ், ஆர். எஸ். சர்மா ஆகியோர் விளக்கியுள்ள நிலைகளை விளக்குவதாக அமைந்துள்ளது. அடுத்த பகுதியில், தொல்காப்பியரின் திணைக்கோட் பாட்டில் சமச்சீரற்ற வளர்ச்சி முறைகளுக்கு ஏற்ற உணவுமுறைகள் இருந்த இருப்பு விளக்கப்பட்டுள்ளது.
“திணைச் சமுதாயங்கள்-உணவு ஆதாரங்களும் உற்பத்தி முறைகளும்” எனும் இரண்டாவது இயல் குறிஞ்சி முதலான ஐந்திணை கள் கொண்டிருந்த பொருளாதார அடிப்படைகளை உணவு உற்பத்தி ஆதாரங்களை விளக்கும் நிலையினதாக அமைந்துள்ளது.
“திணைசார் உணவுமுறைகள்” எனும் மூன்றாவது இயலில் ஐந்திணைச் சமுதாய மக்களாலும் பயன்கொள்ளப்பட்ட உணவுகள், அந்தணர் உணவுமுறை, பட்டின நகர உணவு முறைகள், அரண்மளை உணவுமுறைகள் ஆகிய விரிவாகவும் உரிய சங்கச் சான்றுகளுடனும் ஆராயப்பட்டுள்ளன.
“கள்ளுணவு” எனும் இயலில் ஐந்திணைகளிலும் கள் முக்கிய உணவாக இடம்பெற்றநிலை, நாண்மகிழ் இருக்கைகளில் இனக்குழுச் சமுதாயத் தலைவர்கள் கள்ளுண்ட நிலை, பின்னர் வேந்தர் சமுதாய நாளவைகளிலும் இடம்பெற்ற நிலை, விருந்தினர், குடியினர், சுற்றத்தார், பரிசிலர் பாணர் பொருநர் முதலானோர், சீறூர்மன்னர், குறுநிலமன்னர், வேந்தர், உழவர்கள் எனும் பல்வேறு பிரிவினரும் கள்ளுண்ட நிலை, ஆட்டங்களிலும் திருமணத்திலும் போர்ச் சூழல்களிலும் கள் உண்ணப் பட்ட நிலை, குடிகள் வீடுகள் தொடங்கி அரண்மனைகள் வரையில் கள் வடித்தெடுக்கப்பட்ட நிலை, கள் தயாரித்துப் பதப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட முறைகள், பெண்டிர் கள் வடித்து விற்றமை, கள்ளின் சொற்பெருக்கச் சூழல், கள் பற்றிய மனப்பாங்கு மாற்றம் என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வியல் சங்கச்சமுதாயத்தில் கள் பெற்ற முக்கியத்துவத்தை விளக்கும் இயலாக அமைந்துள்ளது.
“திணைமயக்கமும் பண்டமாற்றும்” எனும் இயல் நானிலங்களும் இணைகின்ற அரசு உருவாக்கச் சூழலில் நாற்றிணை மக்களிடையே நடைபெற்ற பண்டமாற்றுப் பொருளாதாரத்தை விளக்குகின்றது. திணைச் சமுதாய உணவு முறைகளுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், நெல் உப்பு போன்றவை முக்கியப் பண்டமாற்றுப் பொருட்களாக இருந்த நிலை, பண்டமாற்றாகப் பெறப்பட்ட மீன், கள், வரகு, இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள், யானைத்தந்தம், எருமைக்கன்று. மணி போன்ற பொருட்கள், யாணர் எனும் சொல்லின் முக்கியத்துவம், அரசின் பண்டமாற்று என்பனவற்றை உரிய சான்றுகளோடு ஆராய்ந்துள்ளது. பண்டமாற்றில் பயன்படுத்தப்பட்ட சொற் பயன்பாட்டு நிலைகளும் உரிய சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வியல் திணைச் சமுதாயங்களின் இணைவை, தொடர்பை விளக்கும் இயலாக அமைந்துள்ளது.
“உணவுப்பொருள் சேமிப்பும் பாதுகாப்பும்” எனும் இயலில் உணவு மிகுதி குறைவு பற்றிய சிந்தனை, உணவுப் பொருட்களைச் சங்ககால மக்கள் குதிர்களில் சேமித்துப் பாதுகாத்த முறை, மீன் இறைச்சி போன்றவை உலர்த்திச் சேமித்துப் பயன்கொள்ளப்பட்ட முறை என்பன உரிய சங்கச் சான்றுகளுடன் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
அல்குஇரை, அல்குமிசைவு எனும் சொற்கள் பெற்ற முக்கியத்துவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரசும் மருதநிலப் பெருக்கமும் மழையும்” எனும் இயல் சுவர்ச்சிநிலப் பகுதியாக மருதம் இருந்தமை, புன்செய் நிலங்கள் மதிப்பிழந்து போன நிலை, வேந்தர்கள் மருதநிலங்களைக் கவர்வதைப் போரின் நோக்கமாகக் கொண்ட நிலை, மழையும் வளமும் அரசின் ஆதாரமாக இருந்தநிலை ஆகியவற்றை விளக்குவதாக உள்ளது.
“சடங்கும் வழிபாடும் உணவுப் பெருக்கமும்” எனும் இயலில் உலக வரலாற்றில் நிலவிய பெண்டிரின் வேளாண் தலைமை, இதற்கான சங்ககால எச்சம், உலகவரலாற்றில் மந்திரச் சடங்குகள் உணவுப் பெருக்க நம்பிக்கை சார்ந்தனவாக இருந்த நிலை, மழைச் சடங்கில் சங்ககாலப் பெண் பெற்ற முதன்மை, ஆண்வழிப்பட்ட மழைச்சடங்கில் இறை வழிபாடு இடம்பெற்ற முறை, வேட்டை தப்பாமைக்குப் பெண்டிர் கற்பு காரணமானது எனும் நம்பிக்கை, உணவுப் பொருட்கள் வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிலை, உணவுப் பெருக்க வளமைச் சடங்குகளாகக் கைக்கொள்ளப்பட்டவை, வெறியாட்டில் ஆடு பலியாகத் தரப்பட்டமை, குருதிச்செந்தினைகள் வெறியாட்டில் வள அறிகுறியாகப் பயன்பட்ட நிலை, நடுகல் வழிபாட்டில் கள் படைக்கப்பட்டமை, பலிப்படையல், காக்கைக்குத் தரப்பட்ட பலி, பெருஞ்சோற்றுநிலை, படிவஉண்டி, கைம்பெண்டிர் உணவு முறை, விரிச்சி கேட்டலில் உணவுப்பொருட்கள் பயன்கொள்ளப்பட்ட நிலை, இறப்பு போர் சார்ந்த சடங்குகளில் உணவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட முறை, இறந்தோர்க்கான படையல், சினைச் சுறாக்கொம்பு பெண்ணெருமைக் கொம்பும் என்பன வழிபடப்பட்ட முறை, வளமைப் பெருக்கச் சடங்குகளாக நதிகளில் வாளைமீன், இறால், நத்தை என்பனவற்றையும் காய், கிழங்கு, கள் போன்றவற்றையும் கடல்துறையில் முத்து, வலம்புரிச் சங்கு ஆகியவற்றையும் விட்டு அவற்றின் வளம் வேண்டப்பட்ட விளக்கப்பட்டுள்ளன. ட சடங்குநிலை என்பன “பகுத்துண்ணலும் விருந்துபேணலும்” எனும் இயல் பகுத்துண்ணல் இனக்குழுச் சமுதாயச் செயற்பாடாக இடம்பெற்றுப் பின்னர் குறுநில மன்னர் சமுதாயங்களில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டமை, இனக்குழுச் சமுதாயங்களில் இடம்பெற்ற விருந்துபேணல் திணைச் சமுதாய நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட நிலை, திணைமக்களின் மனநிலைகள், அரச சமுதாயங்களில் குறிப்பிட்டவரைப் பேணும் செயற் பாடாக மாறிய நிலை என்பனவற்றை விளக்குவதாக அமைந்துள்ளது.
“சமுதாயப் படித்தரநிலைகளும் உணவு வேறுபாடும் எனும் இயலில் சங்கச் சமுதாயப் படித்தரநிலைகள், இனக்குழுச் சமுதாயங் களுக்குள் உடைமையாளர் இருந்தநிலை, இனக்குழுச் சமுதாயம் வேந்தர் சமுதாய நீர்வளத்திலிருந்து வேறுபட்டு நீர்வளம் அற்றிருந்த நிலை நாற்றிணைச் சமுதாயங்களிலும் இருந்த குடியிருப்புகள், மருத வலைஞர் குடி தோப்புக்குடிகள் ஆகிவற்றின் குடியிருப்புகள், செல்வப் பெண்டிர் இருப்பு, செல்வக்குடி ஆண்நிலை, நானிலச் சிறுகுடி வாழ்க்கை, பெண்டிரின் பொருளாதாரத் தற்சார்பற்ற நிலை, பழஞ்சோறும் பாற்சோறும் உண்ணும் இல்லோர் உடையோர் நிலை, வேலைப் பிரிவினைகள், அரசியர் அந்தப்புர வளவாழ்வு, நகர வழிபாட்டு மரபுமாற்றம் என்பன விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த இயல் பல்வேறுபட்ட சங்கச்சமுதாயக் குடியிருப்புகளையும் அவற்றின் பொருளாதார நிலைகளையும் விளக்கும் இயலாக, நானிலச் சிறுகுடிகள் முதல் நகர்கள், அரசகுடிகள் வரையிலான வேறுபாடுகளை அவரவர் சமுதாய இருப்புநிலைகளை விளக்கும் இயலாக அமைந்துள்ளது.
“வறுமைச் சூழலும் சங்கச்சமுதாய நிலையும்” எனும் இயல் சங்கச் சமுதாயப் பின்புலம், உடையோர் இல்லோர் எனச் சமுதாயம் மாறிய நிலை, உணவுப் பற்றாக்குறை நிலவிய சமுதாயச் சூழல்கள், குறிஞ்சி முல்லைச் சமுதாயங்கள் பொருளீட்டலில் ஈடுபட்டமை, வறுமை குறித்த சொல்லாட்சி, மழை வளத்தின் அறிகுறியாகவும் மழை இன்மை வறட்சியின் அறிகுறியாகவும் இருந்த நிலை, வளம் வேண்டப்பட்ட சமுதாயநிலை, நன்செய் புன்செய் ஆகியவை முறையே வளம் வளமின்மை ஆகியவற்றின் அடிப்படைகளாக இருந்தநிலை, சங்க இலக்கிய வறுமைச் சூழல்களாக இனக்குழு வறுமை, பாணர் போன்ற கலைஞர்களின் வறுமை, தனிக்குடும்ப வறுமை, புலவர் வறுமை என்பன நிலவிய நிலை, ‘குறியெதிர்ப்பு’ எனும் சமுதாயச் செயற்பாடு வறுமைச் சூழலிலும் உணவுப் பற்றாக்குறைச் சூழலிலும் நிலவிய நிலை, வறுமைக்கான சமுதாயக் காரணி என்பனவற்றை ஆராயும் இயலாக அமைந்துள்ளது. இந்நிலையில் இவ்வயில் இனக்குழு முதல் அரச வரையிலான சூழல்களில் நிலவிய வறுமைநிலைகளையும் வறுமைக் கான காரணங்களையும் விளக்கும் இயலாக அமைந்துள்ளது.
உணவும் சமுதாய மாற்றமும் எனும் இறுதி இயல் முன் இயல்களில் ஆராயப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது. பொதுத்துய்ப்பு, தனித்துய்ப்பு, விருந்துபேணல், கொடை, திணைச் சமுதாய வாழ்நிலைகள், சிறுமனை வாழ்வு, அரண்மனை வாழ்வு, கள் பற்றிய மனப்பாங்கு மாற்றம், உணவு வரையறைகள், யாணரும் உணவுச் சேமிப்பும், பெண்டிர் வேளாண்மையிலும் சடங்குகளிலும் பெற்ற முதன்மை, உணவுப் பொருள் வளமைச் சடங்குக் கூறு, வறுமைச் சூழலுக்கான சமுதாயப் பின்புலம், பொதுத்துய்ப்பை மீள வேண்டும் நிலை என்பனவற்றை விளக்கும் இயலாக அமைந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இந்த ஆய்வு உணவு அடிப்படையிலான சமுதாய வேறுபாடுகள், திணைநிலைச் சமுதாயங்களின் பொருளாதாரத் தளம், மருதமும் நெய்தலும் பெற்ற வளம், முல்லை குறிஞ்சிச் சமுதாயங்கள் பற்றாக்குறைக்காலப் பொருளீட்டலில் ஈடுபட்ட நிலை, திணைச் சமுதாயங்கள் பொருளீட்டலை இல்லதோர்க்குக் கொடுக்கும் அறச் செயற்பொருட்டாகவும் மேற்கொண்ட நிலை, விருந்துபேணல் திணைச் சமுதாயங்களின் அடிப்படைப் பண்பாக இருந்த நிலை, இனக்குழுவின் பொதுத்துய்ப்பு, தனியுடைமையின் தோற்றுவாயால் நேர்ந்த சமுதாய மாற்றம், தனியுடைமைகளால் நேர்ந்த பல்வேறு படித்தர நிலைகளை உடைய சமுதாய உருவாக்கம், வேலைப்பிரிவினை கள், பெண்டிர் சடங்குகளில் பெற்ற முக்கியத்துவம், உணவுப் பெருக்க வளமைச் சடங்குகளின் சமுதாயப் பின்புலங்கள் எனும் பல்வேறு நிலைகளையும் விளக்கிச் சங்கச் சமுதாயச் சமச்சீரற்ற வளர்ச்சிப் போக்கை உணவு அடிப்படையில் உணவு உற்பத்தி அடிப்படையில் விளக்குவதாக அமைந்துள்ளது.