Description
சிலப்பதிகாரத்தில் ஏனைய காதைகள் இலக்கியப் பகுதியாக விளங்கும்போது அரங்கேற்று காதை மட்டும் ஆடலிசையின் இலக்கணப் பகுதியாகச் சுட்டி விரித்துரைப்பது இந்நூலினுள் நுழைந்து படிக்கத் தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆடல்மகள் அறிந்திருக்க வேண்டிய ஆடல் அரங்கேற்றத்தை மாதவியின் வழி உணர்த்துகிறார் இளங்கோவடிகள் என்பதை விளக்கியுரைத்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். நாட்டிய இலக்கணத்தைக் கொண்ட பகுதியாக அரங்கேற்று காதை சிறப்புற அமைந்திருப்பதை சிலப்பதிகார ஆசிரியர் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. கூத்தியது அமைதி முதல் அரங்கு புகுந்து ஆடும் இயல்பு வரையிலான பத்துத் தலைப்புகளின்கீழ் ஆய்வானது விரிவடைந்திருக்கிறது. இந்நூலின் முக்கியத்துவமான பகுதி சிலப்பதிகாரம் கூறும் அரங்கு அமைதி என்பதாகும். இதில் மண்ணகத் தேர்வு, இடத்தேர்வு, அளவுகோல் அமைப்பு, அரங்கின் அளவுமுறை, அரங்கமைப்பு, அரங்கில் அமையும் மாண்விளக்கு, அரங்கிலுள்ள எழினிகள், விருந்து படக்கிடந்த அருந்தொழில் அரங்கம் போன்றவை விளக்கி உரைக்கும் முறை வேறெந்த ஆய்வு நூல்களிலும் கண்டிராத செய்திகளாகும். இந்நூலாசிரியர் முடிவுரையில் தரும் எழுபத்து இரண்டு (72) கருத்துரைகள் கவனிக்கத்தக்கவையோடு அல்லாமல் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு வழிவகை செய்கிறது.




