Description
தனது 50வது வயதுக்குப் பிறகு எழுதத் தொடங்கி, பத்தாண்டுகளுக்குள் வரலாற்று ஆய்வு, செப்பேடுகள் உரை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுத்தின் பல்வேறு வகைமைகளிலும் எழுதியவர் மு.ராஜேந்திரன். இவரின் வடகரை – ஒரு வம்சத்தின் வரலாறு என்ற தன் வரலாற்று நாவல், தமிழ் இலக்கியத்தின் முதல் இனவரைவியல் நாவலாக அறியப்படுகிறது. தென்தமிழகத்தில் 1801ஆம் நடைபெற்ற காளையார்கோயில் போரை மையமாக வைத்து இவர் எழுதிய 1801, காலாபாணி ஆகிய இரட்டை நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதில் காலாபாணி நாவல், மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது. ‘சிப்பாயி’ என்ற இத்தொகுப்பில் சிப்பாயி, பட்டுக்கட்டி எனும் இரண்டு குறுநாவல்கள் உள்ளன. 1950, 60களின் தென்தமிழக மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதைகள். கிராம வாழ்க்கையில் ஊடறுத்துப் பாவிக் கிடக்கிற சாதிய, பாலியல் இச்சை இழையோடும் உரையாடலில் சுகிக்கும் ஆண்கள், சுயநல அரசியல்வாதிகளின் வளர்ச்சி என நம் பெருமைகளுக்குள் புதைந்திருக்கிற ஓர் உலகத்தை இக்கதைகள் பேசுகின்றன. இக்கதையில் வரும் மனிதர்களின் உயரத்திற்கும் தாழ்ச்சிக்கும் நம் சமூகமே காரணம். கஸ்பாவும் பட்டுக்கட்டியும் புலிக்குட்டியும் தெய்வானையும் நம் கிராமங்களில் இன்றும் மறைந்துவிடவில்லை.




