Description
“வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி…”
இயற்கை பொய்த்தாலும், தான் பொய்க்காமல் பொன் விளையச் செய்யும் பொன்னி நதி பாயும் பூமியே சோழ நாடு. சங்க இலக்கியம் முதல் பாரதியின் பாடல்கள் வரை ‘காவிரி’ வெறும் நதியல்ல அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
கல்லணை கட்டிய கரிகாலன் முதல், தஞ்சை பெரிய கோவில் எழுப்பிய ராஜராஜன் வரை – இந்தத் திருநாட்டின் வரலாற்றை ஒரு புத்தகமாகத் தொகுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.தமிழ் மண்ணை ஆண்ட மூவேந்தர்களுள், கலைக்கும் தமிழுக்கும் சோழர்களும் பாண்டியர்களும் ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது. “சோழ நாடு சோறுடைத்து” என்ற பழமொழிக்கேற்ப, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சை மற்றும் திருச்சியின் பெருமைகளை இன்றைய தலைமுறைக்குக் கடத்துவதே இந்த நூலின் நோக்கம்.
காவிரியின் கருணை: கர்நாடகத்தில் பிறந்தாலும், சோழ மண்ணில் தவழ்ந்து தமிழகத்தின் தாகம் தீர்க்கும் காவிரித் தாயின் வரலாற்றுப் பயணம்.
கட்டிடக்கலை அதிசயங்கள்: உலகமே வியந்து பார்க்கும் தஞ்சைப் பெரிய கோவில் மற்றும் மலையக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலின் ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புகள்.
தொழில்நுட்ப முன்னோடி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மைக்குச் சான்றாக நிற்கும் கரிகாலனின் ‘கல்லணை’.
பண்பாட்டு சங்கமம்:
வைணவத்தின் தலைமையிடமான ஸ்ரீரங்கம், புதுக்கோட்டையின் குடைவரைக் கோயில்கள் மற்றும் மகாத்மா காந்தி அடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட திருச்சி ‘காந்தி மார்க்ட்’ போன்ற சுவாரஸ்யமான தகவல்கள். பக்தி, மொழிப்பற்று, மக்கள் சேவை என இம்மன்னர்கள் காட்டிய வழி இன்றும் நமக்கு உத்வேகம் அளிப்பவை. சோழ மண்டலத்தின் செழுமையையும், திருச்சி – தஞ்சை நகரங்களின் தொன்மையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு காலப் பெட்டகமாக இந்த நூல் அமையும்.




