‘ஓவியம்’ ஏனைய கலை வடிவங்களுள்ளும் ஒப்பற்ற சிறப்புடையது எனவும் கலைகளின் அரசன் எனவும் போற்றப்படுகிறது. மனித நாகரிகத்தின் மிகத் தொடக்கக் காலத்திலேயே, தன்னைச் சூழ்ந்திருக்கும் பொருள்களின் மீது தனக்கு விருப்பமானவற்றை, இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைந்து அவற்றை அழகியல் கலந்த கலைப் பொருட்களாக்கினான் மனிதன். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அன்றாட வாழ்வில் தான் பயன்படுத்திய பானைகளின் மீது மனிதனது தூரிகை பல்வேறு வடிவங்களை ஓய்வின்றித் தீட்டியது. மிகவும் தனித்தன்மைகள் கொண்ட அவற்றின் கூறுகள், மனிதக் குழுக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்ந்ததை அறிய உதவின. கட்டடச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் மிகவும் கவனத்திற்குரியனவாகும்.
ஓவிய மரபிற்கும், வரலாற்று ஆய்வுகளுக்கும் பெருந்துணையாக விளங்கவிருக்கும் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தனிச்சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. கலை வரலாற்று அறிஞராகவும், சிறந்த சுவரோவிய ஆய்வு வல்லுநராகவும் விளங்கும் முனைவர் சா. பாலுசாமி அவர்கள் திருப்புடைமருதூர் ஓவியங்களை அரிதின் முயன்றுஆவணப்படுத்தியுள்ளார். மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆவணப்படுத்தும் நெறிமுறையை முழுமையாகக் கையாண்டும் திருப்புடைமருதூர் கோயில் ஓவியங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அங்குள்ள ஓவியங்களில் ஓர் அங்குலத்தைக்கூட விடாமல் இந்நூலில் விவரித்துள்ளார். ஓவியங்கள் குறித்த தன் கருத்து முடிவுகளை முன்வைக்க, போதுமான சான்றுகளையும் அவர் முன்வைத்துள்ளார். திருப்புடைமருதூர் ஓவியங்கள் மூலமாக, கி.பி. 1532ஆம் ஆண்டு விஜயநகர அரசிற்கும் திருவிதாங்கூர் அரசிற்கும் இடையே நடந்த வரலாற்று நிகழ்வான ‘தாமிரபரணிப் போர்’ பற்றி அடையாளம் கண்டு வெளிப்படுத்தியிருப்பது இந்நூலாசிரியரின் பெரும் வரலாற்றுப் பங்களிப்பாகும்.
=========================
சிற்பம், ஓவியம், படிம வார்ப்பு ஆகிய கவின் கலைகள் மன்னர் ஆட்சிக்கால தமிழகத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தன. குறிப்பிட்ட மன்னர் பரம்பரை குறித்த வரலாற்றை எழுதுவோர் தவறாது இக்கலைகள் பெற்றிருந்த வளர்ச்சியைக் குறிப்பிடுவர். ஒவ்வொரு மன்னர் பரம்பரையினர் ஆட்சியிலும் இந்நுண்கலைகள் தமக்கெனத் தனியான அடையாளங் களுடன் உருவாயின. இவற்றின் உருவாக்கத்தில் அமைந்த நுட்பமான வேறுபாடுகள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுவது வளமையான ஒன்று. அத்துடன் ஆட்சியாளர்களின் சாதனைப் பட்டியலில் இக்கலை களின் வளர்ச்சி நிலை இடம்பெறுவது மரபாகிப் போனது.
இக்காரணங்களால் பல்லவர், பாண்டியர், சோழர், நாயக்கர் ஆட்சிக் காலத்தையக் கவின்கலைகள் பற்றிய செய்திகளை இவ்ஆட்சிக்காலங்கள் தொடர்பான வரலாற்று நூல்களில் நாம் படித்தறிகிறோம். ‘பல்லவர் பாணி’ ‘சோழர் பாணி’ என்ற சொற்கள் நாம் அடிக்கடி கேள்விப்படும் சொற்களாகும். மற்றொரு பக்கம் கவின் கலைகள் குறித்த ஆய்வு அல்லது அறிமுக நூல்களில் புகைப்படங்கள் கோட்டோவியங்கள் இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் இக்கலைகளை மையமாகக் கொண்டு இவற்றின் அழகியல் கூறுகளை வெளிப்படுத்தும் தன்மையன.
நாம் அதிகமாகப் புறக்கணித்த ஒரு பகுதி இக்கவின் கலைகளின் துணையுடன் வரலாற்றைக் கட்டமைப்ப தாகும். இக்கவின் கலைகளில் சித்திரிக்கப்படும் காட்சிகள் உருவங்களின் துணை கொண்டு வரலாற்றைக் குறிப்பாக சமூக வரலாற்றையும் பண்பாட்டு வரலாற் றையும் உருவாக்கும் முயற்சி குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கவின்கலைகள் குறித்த ஆய்வு முழுமையான அளவில் வரலாறு என்ற அறிவுத்துறையுடன் இணைக்கப் படவில்லை. முற்றிலும் கலை குறித்த ஆய்வாகவே உள்ளது.
மற்றொரு பக்கம் இக்கலைகளின் வளர்ச்சி குறித்துப் பட்டியலிட மட்டுமே வரலாற்றறிஞர்கள் இவைகளைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இவ் வரிசையில் சித்தன்னவாசல் ஓவியம், தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஓவியம், தாராசுரம் கோவில் சிற்பங்கள் என்ற பெயர்கள் அடிக்கடி கேள்விப்படும் பெயர்களாக அமைகின்றன. ‘கல்லிலே கலை வண்ணம் கண்ட’ தமிழன் அக்கலைகளில் வரலாற்றையும் பொதிந்து வைத்துள்ளான். இது போன்றே ஓவியத்திலும், மரச்சிற்பங்களிலும், சுதைச் சிற்பங்களிலும், உலோகப் படிமங்களிலும் வரலாறு பொதிந்துள்ளது. இவ்வரலாறு, மன்னர்களை மையமாகக் கொண்டெழுதப்படும் அரசியல் வரலாறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களை மையமாகக் கொண்டெழுதப்படும் சமூக வரலாற்றுக்கான தரவுகளாக அமையும் தன்மையன.
•••
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் (திருப்பெருந்துறை) மாணிக்கவாசகரின் ஆள் உயரச் சிற்பங்கள் இரண்டு உள்ளன. ஒன்று அவர் பாண்டிய மன்னனின் அமைச்சராக உள்ள கோலத்தில் உள்ளது. இச்சிற்பத்தில் அவர் தம் தலையில் நீளமான குல்லாய் ஒன்றை அணிந்து காட்சி அளிக்கிறார். இவர் முகத்தில் ஒருவிதமான இறுக்கம் தென்படுகிறது (இதைக் கம்பீரம் என்றும் குறிப்பிடலாம்).
மற்றொரு சிற்பம் மாணிக்கவாசகர் சிவனடியாராக மாறிய கோலத்தில் உள்ளது. இதில் பணிவான தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார் (நம் காலத் தம்பிரான்கள் / ஆச்சாரியார்களின் தோற்றத்துடன் இத்தோற்றத்தை ஒப்பிட்டுப் பார்க்க இடமுண்டு).
அதிகார வர்க்கத்திற்கும் அடியார்களுக்கும் இடையிலான முக வேறுபாட்டை இவ்விரு சிற்பங்களும் நளினமாகவும் துல்லியமாகவும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
•••
காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் கோவிலில் காணப்படும் சிற்பம் ஒன்று குறித்து பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் தம் நூல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப் பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசற்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப் படுகின்றனர்.
சமணர், புத்தர் போன்ற புறச்சமயத்தவரை அழித்து வைணவம் நிலைநாட்ட முயன்றதைத் தான் அச்சிற்பங்கள் உணர்த்துகின்றன” (பக்கம்.48).
மன்னனின் நேரடிப் பார்வையில் நிகழ்ந்த கழுவேற்றல் நிகழ்ச்சி குறித்த இச்சிற்பம் வரலாற்றுச் சிறப்புடையது என்பதில் அய்யமில்லை.
குற்றவியல் அறிவுத்துறையில் தடையம் அழிப்பு என்று குறிப்பிடுவதற்கொப்ப ஓவிய வடிவில் உள்ள தடையங்கள் இன்று அழிக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த சமணர் கழுவேற்றம் குறித்த ஓவியம் மறைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியுள்ளது. இத்தகைய சமூகச் சூழலில் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்நூல் மிகவும் பயனுடைய நூலாகும்.
திருப்புடைமருதூர்
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் வீரவ நல்லூர். இவ்வூருக்கு வடமேற்கில் ஏறத்தாழ ஆறு கி.மீ. தொலைவில் பொருநை ஆற்றங்கரையில் திருப்புடை மருதூர் என்ற கிராமம் உள்ளது. கடனா ஆறு என்ற ஆறு இப்பகுதியில் பொருநை ஆற்றில் கலக்கிறது. ஆற்றங்கரைக்கு சற்று அருகில் நாறும்பூநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கட்டடக் கலை யானது, பாண்டியர், சேரர், சோழர், விஜயநகரர் ஆட்சிக்காலக் கலையழகை உள்ளடக்கியது. இக் கோவிலின் தல மரமாக மருத மரம் அமைந்துள்ளது.
இக்கோவிலின் வரகுண வீரபாண்டியன், இராஜேந்திர சோழன் ஆகியோர் காலத்தியக் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோவிலில் இடம் பெற்றுள்ள மரச்சிற்பங்களும் கோபுரத்தின் உட்பகுதியில் காணப்படும் வண்ண ஓவியங்களும் அழகியல் தன்மையும் வரலாற்று ஆவண மதிப்பும் கொண்டவை. இவற்றின் காலம் குறித்து ஆராயும் ஆசிரியர் 17ஆம் நூற்றாண்டின் முதற் காற் பகுதிக்கு முந்தையவையாக இவை இருக்க முடியாது என்று முடிவுக்கு வருகிறார்.
ஓவியங்களும் மரச் சிற்பங்களும்
இக்கோவிலில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களையும் செதுக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களையும் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினர் தொழில்நுட்ப நேர்த்தி யுடன் 1980இலும் 1985இலும் புகைப்படங்களாக எடுத்துள்ளனர். பின் 2008இல் டிஜிட்டல் புகைப்படக் கருவியின் துணையுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இவ்வாறு இவர்கள் எடுத்துள்ள வண்ணப் புகைப்படங் களின் எண்ணிக்கை 2200 ஆகும்.
இவற்றில் இருந்து தேர்வு செய்த 206 வண்ணப் படங்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இப் படங்களைப் பின்வரும் முறையில் நூலாசிரியர் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார்.
(i) கப்பல், குதிரை இறக்குமதி வாணிபம்
(ii) அரசு நிர்வாகம்
(iii) இராணுவப் பிரிவுகள்
(iv) மெய்க்காப்பாளர்கள்
(v) படைப்பயிற்சியும், போரிடலும்
(vi) அய்ரோப்பியப் பணியாளர்கள்
(vii) அன்றாட வாழ்க்கை
(viii) பொழுதுபோக்கு
(ix) தொழில்நுட்பக் கருவிகள்
(x) பயணிக்க உதவும் கருவிகள்
இவ்வரிசையில் அடங்கியுள்ள படங்களைக் குறித்து எழுத்து வடிவில் இக்கட்டுரையில் விளக்குவ தென்பது பொருத்தமற்ற செயல். இப்படங்களைக் கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பைப் புரிந்து கொள்ளமுடியும். என்றாலும் ஓர் அறிமுகம் என்ற நிலையில் சில செய்திகளைக் குறிப்பிடலாம்.
•••
வண்ணப்புகைப்படங்களுடன் கூடிய இந்நூலின் நோக்கம் ஓவியங்களில் பொதிந்துள்ள அழகியல் கூறுகளை ஆராய்வதல்ல. இவ்ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிய முற்படுவதுதான்.
கலை வரலாற்றில் ஓவியர்கள் சிற்பிகள் ஆகியோர் தம் காலப் பண்பாட்டையே தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். புராணம், சமயம் தொடர்பான படைப்புகளும் இப்போக்கிற்கு விதிவிலக்கல்ல. கிரேக்க, ரோமானிய சிற்பிகள் தம் கடவுளர் குறித்த பாரம்பரியமான பழமரபுக் கதைகளை அழகிய சிற்பங்களாக வடித்தாலும் தம் நாட்டு மக்களின் தோற்றங்கள் அவற்றில் படியச் செய்துள்ளார்கள். இதுபோன்றே அய்ரோப்பியாவின் மறுமலர்ச்சிக்கால ஓவியர்கள் வரைந்த விவிலியப் பாத்திரங்கள் மறுமலர்ச்சிக்கால ஆண்களும் பெண்களும் அணிந்த ஆடை அணிகலன்களுடன் காட்சி தருகின்றன.
இதே வழிமுறையில்தான் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்ஓவியர்கள் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு அவற்றில் இடம்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர் பல்லக்கில் வரும் காட்சியில் இடம்பெறும் பல்லக்கு, ஓவியர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பல்லக்கின் அமைப்பைக் கொண்டுள்ளது. அவரை வரவேற்கும் அரசு அதிகாரிகள் நாயக்கர்கால அதிகாரிகளைப் போன்று ஆடை உடுத்தியுள்ளார்கள்.
ஒரு சமூகத்தின் நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆடை அமைகிறது, இதனால் ஓவியங் களில் இடம்பெறும் அரசு அதிகாரிகள், படை அதிகாரிகள், குடிமக்கள் ஆகியோரின் ஆடைகள் கவனிப்பிற்குரியனவாக அமைகின்றன.
ஆய்வுத்திட்டம்
ஓவியங்கள் மரச்சிற்பங்கள் குறித்த ஆசிரியரது ஆய்வு பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை, குதிரைகள் கப்பல்களின் வாயிலாக வருதல் ஆகியன வற்றை வெளிப்படுத்தல். இரண்டாவதாக பணியாளர் களுடன் உயர்அதிகாரிகள் நிற்கும் காட்சி, கொடி பிடிப்போர், பல்லக்குத் தூக்கிகள், இசைக்கருவிகளுடன் நிற்கும் இசைவாணர்கள் ஆகியோர் குறித்த காட்சிகளை வெளிப்படுத்தல்.
மூன்றாவதாக இராணுவம் குறித்த சித்திரிப்பு. இச்சித்திரிப்பில் படைவீரர் அணிவகுத்துச் செல்லல். யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை அவற்றின் அமைப்பு, பயன்படுத்தும் போர்க்கருவிகள், சண்டையிடும் முறை ஆகியனவற்றை உற்றுநோக்கல்.
நான்காவதாக மக்களின் அன்றாட வாழ்க்கை முறை – மக்களின் குடும்ப நடவடிக்கைகள் பொழுதுபோக்கு ஆகியன குறித்த பதிவுகள்.
இறுதியாக தொழில்நுட்பமுறை குறித்த பதிவுகள். தென்இந்தியாவின் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் சில பகுதிகளை இவை வெளிப்படுத்தும்.
வெளிநாட்டவர்
குதிரைகளோடு வரும் கப்பலின் ஓவியம், மாலுமி களின் ஓவியம், அரேபிய வணிகர், போர்ச்சுகீசிய வீரர்கள், மன்னன் முன்பு குதிரைகளுக்குப் பயிற்சி அளித்தல், துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் செல்லல், போர்ச்சுகீசியர் குழு மன்னனைச் சந்தித்தல் ஆகிய காட்சிகள், வெளிநாட்டவருடன் நாயக்க மன்னர்கள் கொண்டிருந்த தொடர்பினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது ஆயுதங்களையும் உடையையும் நாம் அறியச்செய்கின்றன.
பிற காட்சிகள்
வளையல் வியாபாரி, விலை உயர்ந்த கற்கள் விற்கும் வியாபாரி, ஆடு மேய்ப்பவர், சுமை தூக்குபவர், மீன் பிடிப்பவர், மீன்பிடி வலை, பலவகையான இசைக் கருவிகள், இசைக்கருவிகளுடன் அணிவகுத்துச் செல்லும் இசைவாணர்கள், நடனமாதர், கோலாட்டம் ஆடும் பெண்கள், வீரநடனங்கள், கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட நடனமாது, சிறுத்தையுடன் சண்டையிடும் வீரர்கள், வில் வீரர்கள், யானையைப் பிடித்தல், எருதுச் சண்டை, சேவல் சண்டை, ஆட்டுக்கிடாய் சண்டை, பறவை பிடிப்பவன், பாம்பாட்டி, மல்யுத்தம் புரிவோர், பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் எனப் பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் அல்லது செதுக்குச் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளன.
ஆசிரியரின் பங்களிப்பு
மேற்கூறிய ஓவியம் அல்லது செதுக்குச் சிற்பப் பதிவுகளைப் படமெடுத்து வகைப்படுத்தித் தருவதுடன் ஆசிரியர் நின்றுவிடவில்லை. ஆங்காங்கே உரிய விளக்கங்களையும் கூறிச் சென்றுள்ளார். சான்றாக இவ்ஓவியங்களில் வில் அம்பு ஏந்திய வீரர்களும், துப்பாக்கி ஏந்திய வீரர்களும் ஒன்றாக இடம் பெற்றுள்ளமை குறித்த அவரது விளக்கத்தைக் குறிப்பிடலாம்.
16ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த பழங்காலத் துப்பாக்கியில் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட அதன் வெப்பம் ஆற வேண்டும். அத்துடன் வெடிமருந்தை மீண்டும் திணிக்க வேண்டும். இதனால் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட கால இடைவெளி ஏற்படும். ஆனால் வில்லில் இருந்து அம்பு எய்ய இவ்வளவு கால இடைவெளி ஏற்படுவதில்லை. தொடர்ச்சியாக அம்பு எய்யலாம். இதனால்; துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர்.
நூல் ஆசிரியரின் முடிவுரை
வரலாற்றுப் பதிவாளரின் எழுத்துப்பதிவை விட காட்சிப்புல அனுபவம் மிகவும் சிறப்பானது என்று கூறும் ஆசிரியர் சமகால ஓவியங்களைவிட எதுவும் பெரு மதிப்புடையதல்ல என்ற முடிவுக்கு வருகிறார். அவரது கருத்துப்படி அவை அக்காலத்தியப் புகைப்படங்கள்.
“இதுவரை வெளிவந்துள்ள நாயக்கர் கால வறண்ட வரலாற்றின் எலும்புகளுக்குச் சதையையும் இரத்தத்தையும் திருப்புடைமருதூர் ஓவியங்களும் மரச்சிற்பங்களும் வழங்கியுள்ளன”என்று அவர் குறிப்பிடுவதன் உண்மையை இந்நூலைப் படிப்பவர்கள், படங்களைப் பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்வர்.
நன்றி: Keetru.com