“ஸ்கந்தபுராணம் ஆரியர்களால் கடத்தப்பட்ட குன்று தோறும் குடியிருந்த குமரனின் குசும்புக்கதை. இந்த வள்ளியின் புராணமோ சுத்தமான தனித் தமிழ்க் கதை. வள்ளியை ஆரியர்களால் தொட முடியவில்லை. அவர்கள் தொட விரும்பவுமில்லை. வள்ளி நம்ம தங்கச்சி. முருகன் நம்ம மச்சினன். காவடிகள் நம்ம படையல். அலகு நம்ம நேர்ச்சை. வேல் அவனது படை வெற்றி அவனது படைவீடு.
மயில் வாகனன், சேவல் கொடியன், பாம்பு பகைவன். தேனும் தினை மாவும் திகட்டாமல் தந்தவள் வள்ளி. தமிழக நாட்டுப்புறங்களில் வள்ளித் தாலாட்டு, வள்ளித் திருமணம், வள்ளிக் கும்மி, வள்ளிக் கூத்து, வள்ளிக் கதைகள் என வள்ளி புராணம் வளர்ந்த வண்ணம் இருக்கிறது. இது நமக்கான ஆய்வு.”
– நூலாசிரியர்
தமிழர் வாழ்வில் தாலாட்டு, கும்மி, ஏற்றம், காவடி, கதைப்பாட்டு, கூத்து என எல்லா வடிவங்களிலும் முருகன்-வள்ளி காதல் இடம்பெறுகிறது. ‘குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் அழகன், இளையன், மணம் கொண்டவன், வீரமும் வெற்றியும் செறிந்தவன்’ என்கிறது சங்க இலக்கியம். பழந்தமிழரிடையே முருகன் வழிபாடு வெறியாட்டுச் சடங்காக இருந்ததைத் தொகைநூல்கள் உணர்த்துகின்றன.
மலையும் மலை சார்ந்த மக்களும் கொண்டாடிய முருகன் வைதீக வழிபாட்டின் கூறுகளுக்கு உட்பட்டாலும், இன்றும் தமிழ் வழிபாட்டின் அடையாளமாகவே இருக்கிறான். முருகனின் இணையராக இருந்தாலும் வள்ளிக்கும் இங்கே தனித்த வழிபாட்டு மரபு இருக்கிறது. ஆனால் அவை தனித்து ஆவணப்படுத்தப்படவில்லை.
அக்குறையைப் போக்கும் வகையில் குறிஞ்சி நிலத்தின் செழிப்புக்கு அடையாளமாக விளங்கிய தாய்த்தெய்வமான வள்ளியும் வீரத்துக்கு அடையாளமாக இருந்த முருகனும் இணைந்த மலைவாழ் மக்களின் வழிபாட்டு முறை குறித்து மிக முக்கியமான கள ஆவணமாக வந்திருக்கிறது இந்த நூல்.
தமிழின் நாட்டார் மரபைத் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் பேராசிரியர் சண்முகசுந்தரம், வள்ளி குறித்த நாட்டுப்புற வழக்காறுகளை மிகுந்த கவனத்தோடு சேகரித்து ஆவணப்படுத்தியிருக்கிறார். சங்க இலக்கியம், தொன்மக் கதைகள், தலைமுறை கடந்துவரும் வாய்மொழிக் கதைகள், தல வரலாறுகள், கதைப் பாடல்கள், கலைகளில் இதற்கான தரவுகளைத் தேடியிருக்கிறார்.