Description
எடுவர்டோ கலியானோ கதைகளையும், கவிதைகளையும் வெளியிட்டிருக்கிறார். எண்ணற்ற கட்டுரைகளை, பேட்டிகளை எழுதியிருக்கிறார். ஏராளமான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவர் பல விருதுகளைப் பெற்றவர். கௌரவ பட்டங்களைப் பெற்றவர். தன்னுடைய இலக்கிய திறமைக்காகவும், அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றவர். லத்தீன் அமெரிக்காவில் தோன்றிய அற்புதமான எழுத்தாளர்களில் அவர் ஒருவர். அவருடைய படைப்புகள் துல்லியமான விவரணைகளையும், அரசியல் கடப்பாட்டையும், கவித்துவத்தையும் கொண்ட ஓர் அபூர்வ கலவையாகும்.
அவர் லத்தீன் அமெரிக்கா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் சென்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் குரல்களைக் கேட்டிருக்கிறார். தலைவர்களோடு, அறிவுஜீவிகளோடு பழகியிருக்கிறார். அவர் பூர்வீக இந்தியர்களோடும், விவசாயிகளோடும், ராணுவ வீரர்களோடும், கொரில்லாக்களோடும், கலைஞர்களோடும், சட்ட விரோதமானவர்களோடும் வாழ்ந்திருக்கிறார். ஜனாதிபதிகளோடு, சர்வாதிகாரிகளோடு, தியாகிகளோடு, பாதிரியார்களோடு, கதாநாயகர்களோடு, கொள்ளைக்காரர்களோடு, நிராதரவரான தாய்மார்களோடு, விபச்சாரிகளோடு அவர் பேசியிருக்கிறார்.
கலியானோவின் எழுத்துகளில் வெளிப்படும் வாஞ்சையை, பொறுப்புணர்வை, பாதுகாப்பை, இதத்தை, வலியை இந்த நூலில் உணரலாம்.





























