வேலூர் கோட்டையின் கட்டட அமைப்பு, வேலூர் கோட்டையை யாரெல்லாம் ஆட்சி செய்தார்கள், ஜலகண்டேஸ்வரர் கோயிலின் வரலாறு, கட்டட அமைப்பு, இடம் பெற்றுள்ள தெய்வங்கள், சிலைகளின் அமைப்பு, கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் சிறப்பு என வேலூரின் சிறப்பம்சங்களை எல்லாம் இந்நூல் கூறுகிறது.
1806 ஜூலை 10 ஆம் தேதி வேலூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கான காரணங்கள் மிக விரிவாக அலசப்பட்டுள்ளன. ஆங்கிலேயரின் படைகளில் இருந்த இந்திய வீரர்கள் பசு அல்லது பன்றியின் தோலினால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட மதநம்பிக்கைகளுக்கு விரோதமான பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதை எதிர்த்து படைவீரர்கள் கலகம் புரிந்தனர்.
ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு திப்புசுல்தானின் கொடி ஏற்றப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் சுதந்திரப் போராக இது கருதப்பட வேண்டும் என்று நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னர் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் வரலாறும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. வேலூர் கோட்டையில் உள்ள முக்கிய இடங்கள், வேலூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் என வேலூரைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது