தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளில் விளையாட்டு மரபுகள் பண்பாட்டு விழுமியங்களாக அமைகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தற்சமயம் மேற்கொள்ளப் படுகின்ற அகழாய்வுகளில் விளையாட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப் படுகின்ற செய்திகளை நாம் அறிவோம். அவ்வகையில் தமிழர் வாழ்வியலி ல் பன்னெடுங்காலமாகச் சிறப்புப் பெறுகின்ற விளையாட்டுக்களைச் சமூக, பண்பாட்டுத் தளத்தில் அவற்றின் நிலைப்பாடு, செயல்முறைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது இந்த நூல்
விளையாடிய தமிழ்ச்சமூகம் என்கிற நூலை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. பாப்பா படைத்திருக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெளியீடாக அமைந்த இந்நூல் 45வது சென்னை, புத்தகக் கண்காட்சியில் 16.02.2022 அன்று வெளியிடப்பட்டது. விளையாட்டில் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச் சமூக உறவுகள் குறித்த ஓர் அலசல் என்கிற குறிப்புக்கான விளக்கமாக அமையும் இந்நூலின் தொடக்கத்திலேயே தமது நூன்முகத்தில் சிறு வயது முதல் வளரிளம் பருவம் வரையிலும் வீட்டினுள் இருந்ததைவிடத் தெருவிலும் திறந்தவெளிகளிலும் விளையாடியதே அதிகம். வெயிலிலும் பனியிலும் இரவிலும் பகலிலும் காலநேரமின்றித் திரிந்ததும் விளையாடியதும் கொஞ்சங்கூட இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அலுக்கவேயில்லை. பாகுபாடின்றிப் பையன்களோடு விளையாடிச் சுவரேறிக் குதித்ததே அதிகம். தெருக்களும் வீதிகளும் சுத்தம் மனிதர்களின் மனதைப்போல.
அதனால் தெருக்களே இருக்கைகளும் படுக்கைகளும் விளையாடுமிடங்களாக அமைந்தன. விளையாட்டிடையிடையே உணவு. அவ்வப்போது படிப்பு. மனம், உடல், அறிவு, சிந்தனை இன்னும் என்னவெல்லாம் உண்டோ அனைத்தும் விளையாட்டுமயம். சிறுவயதில் படித்ததைவிட விளையாடியதே அதிகம். படிக்காமல் விளையாடியது வீணாகிவிடவில்லை. அனுபவப்பாடம் அறியமுடிந்தது. இன்றைக்கும் நான் வாழ்க்கையை அனைத்து நிலைகளிலும் சமன்படுத்தி வாழ்ந்து வருவதற்குச் சிறந்த அனுபவமாக அமைந்தது விளையாட்டுப்பருவமே என்று நினைக்கிறேன் என்று நம்மையும் சிறு பிராயத்திற்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.