பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்
இவனின் ஆட்சிக் காலத்தில் தென்னாடு முழுவதும் நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்திருந்தது. பிரெஞ்சு படைகளின் தொடர் தோல்வி, ஆங்கிலேயர்கள் கர்நாடகத்தில் பெற்ற வெற்றி அதன் தொடர்ச்சியாக நாடு பிடிக்கும் திட்டத்துடன் கூடிய அவர்களின் நகர்வுகள் ஆகியவைகள் வரலாற்றில் புதிய பக்கங்களை எழுத ஆரம்பித்தன. திருச்சியில் இருந்த முகமது அலிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஆங்கிலேயர்கள் சாந்தாசாகிப்பைக் கொன்றனர்.
ஆங்கிலேயர்களின் துணையோடு ஆற்காடு நவாப்பாக பதவியில் அமர்ந்த முகமது அலி அவர்களிடமிருந்து ஏராளமான பணத்தைக் கடனாக பெற்றான். ஆடம்பர செலவினங்களுக்கும். போகங்களுக்கும் அவன் கேட்கும்பொழுதெல்லாம் மறுப்பே சொல்லாமல் ஆங்கிலேயர்கள் அள்ளிக் கொடுத்தனர்.
கிள்ளிக் கொடுக்காது அள்ளிக் கொடுத்ததால் ஏற்பட்ட கடனுக்காக கி.பி. 1763ல் இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தை கும்பெனியாருக்கு நவாப் விட்டுக்கொடுத்தான். அளவுக்கு மீறிய கடனால் நவாப்பின் பணத் தேவை அதிகமானது. அதன் பொருட்டு வரிவசூல் செய்யவும், தன்னுடைய ஆட்சி மற்றும் அதிகார உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பாளையங்கள் மீது தாக்குதல்களை நடத்த நவாப் முகமது அலி முடிவு செய்தான். திருநெல்வேலி சீமைக்குள் நுழைந்த நவாப்பின் படைகள் பாளையக்காரர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டது. வரிவசூல் அத்தனை எளிதாக அமையவில்லை.எனவே நவாப் ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். 1755ல் ஆற்காடு நவாப்பும், ஆங்கிலேயர்களும் உடன்பாடு செய்து கொண்டனர். இதன் மூலம் தெற்கு சீமையில் ஆற்காடு நவாப்பிற்கு வரவேண்டிய வரிகளை வசூலித்து அதில் ஆறில் ஒரு பங்கை மட்டும் நவாப்பிற்குக் கொடுத்துவிட்டு எஞ்சிய தொகையை அவனது கடனுக்காக வரவு வைத்துக் கொள்ளும் உரிமை ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. ஆங்கிலேயர்கள் பாளைய வசூலில் நுழைவதற்கான முதல் வாய்ப்பை இந்த உடன்பாடு கொடுத்தது.
1755 பிப்ரவரி 4ல் கர்னல் ஹெரான் தலைமையில் மிகப் பெரிய படையெடுப்பு நிகழ்ந்தது. மாபூஸ்கான் தலைமையில் நவாப்பின் படைகளும் வந்தன. அச்சமயத்தில் திருநெல்வேலி பாளையத்தில் இருந்த பாளையங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நின்றன. மேற்குப்பகுதி பாளையங்கள் பூலித்தேவர் தலைமையிலும், கிழக்குப் பகுதி பாளையங்கள் பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் தலைமையிலும் அணிதிரண்டன.
ஹெரானிடம் பணிந்த பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் வரியாகத் தந்ததுபோக மீதித்தொகைக்கு பிணைக்கைதிகளைக் கொடுத்தான். 1756ல் மாபூஸ்கான் பின்னால் அணிவகுத்து நின்று போரிட்டான். ஆங்கிலேயர்களுக்கு எதிரான களத்தில் பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் அத்தனை எதிர்ப்பைக் காட்டவில்லை. முடிந்தவரை அவர்களோடு இணைந்தும், இயைந்துமே செயல்பட்டான். பொல்லாப் பாண்டிய கட்டபொம்மனைச் சிறந்த வீரர் என கூறுவதற்கில்லை என்கிறார் பேராசிரியர் ந. சஞ்சீவி.