Enjoy Free Shipping on Orders Above ₹5,000! Dismiss

குஞ்சாலி மரக்காயர் அருங்காட்சியகம் – விஜயகுமார்

குஞ்சாலி மரக்காயர் அருங்காட்சியகம், கோழிகோடு.

“வணிகம்” ஒரு நாகரீகத்தின் செழிப்பை, மரபை  உலகின் மற்ற நாகரீகங்களுக்குக் கடத்தியது. ஆனால் அதே வணிக உறவினால் பிற்காலத்தில் காலனி ஆதிக்கம் உலகெங்கும் உருவாகியது.இந்தியாவின் முதல் காலனி ஆதிக்கம் அரபிக்கடற்கரையில் தலைதூக்கியது.கி.பி.1498 மே மாதம் 20 ஆம் தேதி அரபி வளைகுடா நாட்டின் வணிக கப்பலைக் கொள்ளையடித்ததில் மிளகு, ஏலக்காய் போன்ற பொருட்கள் அவர்களைக் கவரவே கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில அடிமைகளை ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்கல்லில் இருந்து வாஸ்கோட காமாவின் தலைமையில் கிளம்பிய அந்த கப்பல் இந்தியாவின் மேற்குக்கடற்கரை ஊரான கோழிக்கோட்டை அடுத்த கப்பகாடு (இன்றைய காப்பாடு) என்ற இடத்தில் வந்து நின்றது. வெள்ளை கோடியில் சிவப்பு நிற கூட்டல் குறியிட்ட அந்த கொடியுடன் வந்த கப்பலிலிருந்து இறங்கிவந்த  அடிமைகள் அங்குக் குழுமியிருந்த மீனவர்களுடன் உரையாடினர்.

நல்லவேளை அந்த கப்பலில் வந்த அரபியினுக்கு மலையாளம் தெரிந்ததால் கோழிக்கோடு சாமுத்ரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பிறகு கப்பலிலிருந்து இறங்கிய வஸ்கொடகாமாவை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.பின்னலில் கோழிக்கோடு சாமுத்திரியுடனான வஸ்கொடகாமாவின் சந்திப்பு நிகழ்ந்தது. அதில், மனுவேல்  கொடுத்தனுப்பியதாக பல பரிசுப்பொருட்களை சாமுத்திரிக்கு வழங்கி சாமுத்ரியின் நன்மதிப்பையும் , வணிகம் செய்ய அனுமதியையும் பெற்றான்.சிலமாதங்களுக்கு பிறகு போர்த்துக்கிசியர்களின் தவறான நடவடிக்கைகளைக் கண்டு வருத்தப்பட்ட சாமுத்ரி வஸ்கொடகாமாவை தனது நாட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.ஆனால் இங்குள்ள வளங்கள் வாஸ்கோடகாமாவின் பேராசையைத் தூண்டவே திரும்பி செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு கோழிக்கோட்டை அடுத்து அமைந்திருந்த கோழிக்கோடு ராஜாவின் எதிரிகளான   கொச்சி, கோலத்திரி நாட்டு ராஜாக்களுக்கு  நாடுகளுக்குத் தனது தூதுவர்களை அனுப்பினான்.

அவர்கள் வாஸ்கோடகாமாவின் வேண்டுகோளை ஏற்று போர்த்துக்கீசியர்க்கு வேண்டிய வணிக மையங்களை தங்களது நாட்டில் அமைத்துக்கொடுத்ததுடன் பல சலுகைகளையும் அளித்தனர். வாஸ்கோடகாமா அந்தக்காலகட்டத்தில் கோலத்திரி ராஜாவின் கட்டுப்பாட்டிலிருந்த கண்ணூரில் வணிக மையங்களுடன் சேர்த்து ஒரு கோட்டையையும் கட்டினான். அதிகாரம் மிக்கவனாக மாறிய வாஸ்கோடகாமா அரபியை வணிகர்களின் கப்பல்களைக் கொள்ளையடித்தான்.மேலும் அவனது பல நடவடிக்கைகள் உள்ளூர் வணிகர்களுக்கும் , மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.அதனால்  மக்கள் எதிர்ப்பு  உருவாகவே .வஸ்கொடகாமா  போர்ச்சுகல்லிற்கு  திரும்பினான். திரும்பும் வழியில் எதிர்ப்பட்ட கப்பல்கள் அனைத்தையும்  கொள்ளையடித்தான்.வாஸ்கோடகாமா 1499 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று போர்ச்சுகல்லை அடைந்தனர். மனுவேலிடம் கேரளத்தின் வனப்பை பற்றியும்  செல்வவளத்தைப் பற்றியும் தெரிவித்தான். அரசர் மனுவேல் பெட்ரோ அல் வேரிஸ் கப்ரால் என்ற தனது கடற்ப்படை தளபதியின் தலைமையில் இரண்டாயிரம் ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் ஒரு வணிககுழுவை கொச்சியிலும் , கொலத்திரியிலும் வணிகம் செய்ய அனுப்பினார்.இக்காலகட்டத்தில் கோழிக்கோடு சாமுத்திரியின் அனுமதி பெறப்  பல வணிக தூதுக்கள் அனுப்பப்பட்டாலும் அவற்றை அவர் நிராகரித்தார்.

பிறகு கி.பி.1502 இல் மீண்டும் கேரளத்திற்கு வந்த வாஸ்கோடகாமா மக்கா சென்றுவந்த பெண்கள் , குழந்தைகள் அடங்கிய 4௦௦ பேரை  மாடாய் எனுமிடத்திற்கு அருகில் சிறைபிடித்து அவர்களைக் கொன்று கடலில் வீசினான். கோழிக்கோட்டை டைந்த வாஸ்கோடகாமா கொலத்திரி ராஜவுடனும், கொச்சி ராஜாவுடனும் சேர்ந்து கோழிக்கோட்டை கைப்பற்றத் திட்டமிட்டான்.அதேசமயம் சாமுத்திரி சுமூக உறவை ஏற்படுத்த அரண்மனையின் மூத்த சேவகனான தளப்பண்ணநம்போதரி என்பவரை தூதுவனாக அனுப்பினார். வாஸ்கோடகாமா நம்போதரியிடம் சாமுத்திரியின் உயிருக்கு விலைபேச அதுநடக்காமல் போகவே , நம்போதரியின் காதுகளை அறுத்து அதற்க்கு பதில் நாயின் காதுகளைத் தைத்து அனுப்பினான்.

இந்நிகழ்வு சாமுத்திரியை மேலும் கோபப்படுத்தியது. போர் மூளவே மூன்று நாட்களுக்கு பிறகு வாஸ்கோடகாமா கொச்சியில் அடைக்கலமானான்.பின் கண்ணூர் மற்றும் கொச்சியிலிருந்து முடிந்தவரை பொருட்களை வாரிக்கொண்டு வாஸ்கோடகாமா போர்ச்சுக்கல்லிற்கு ஓடினான்.மேலும் கேரளத்தில் ராஜக்களுக்கிடையே இருக்கும் பகைமையை உபயோகித்து செல்வங்களை அறுவடை செய்யலாம் என போர்த்துக்கீசியர்கள் அறிந்துகொண்டனர். கேப்டன் அல் புக்கர் தலைமையில் ஒரு பெரிய கப்பற்படை மலபார் பகுதியை அடைந்தது.கடலில் வைத்தே பல கப்பல்களைக் கொள்ளையடித்தனர். மேலும் பல நகரங்களையும், வணிக மையங்களையும் கொள்ளையடித்தனர்.

கொச்சியில் வணிக குடும்பமான  முகமதுவின் குடும்பம் பொன்னிக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு நல்லமுறையில் வணிகம் நடத்தினர்.அந்த காலகட்டத்தில் பொன்னானி ஒரு முக்கிய பன்னாட்டு  துறைமுகமாக  இருந்தது. முகமதுவிடம் கடற்கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள சிறு படை முகமதுவிடம் இருந்தது. கண்ணூரில் சந்தை அமைத்திருந்த போர்ச்சுகீசியர் கடற்கொள்ளையிலும் ,பல கொலைகளிலும் ஈடுபட்டனர்.கொலத்திரி ராஜாவின் அன்பிற்குரிய அலி மரக்காரை கடலில் வைத்து  போர்ச்சுகீசியர் கொன்றனர். கொலையுண்டு மூன்றுநாட்களுக்குப் பிறகு அலிமரக்காரின் உடல் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் கொலத்திரி ராஜாவை மிகவும் பாதிக்கவே போர்ச்சுகீசியருடனான அனைத்து உறவுகளையும் முறித்துகொண்டார் மேலும் போர்ச்சுகீசிரை கண்ணூரிலிருந்து  வெளியேறவும் உத்தரவிட்டார். இதைச் சற்றும் மதிக்காத போர்ச்சுகீசியருக்கு கண்ணூர் கோட்டையை சாமுத்திரியின் உதவியுடன் மீட்டு பாடம் கற்பித்தார் கொலத்திரி ராஜா.அதே சமயம் போர்ச்சுகீசியர் பொன்னானியை ஆக்கிரமித்தனர்.போர்ச்சுகீசியாரை விரட்ட முகமதுவின் மகனான குட்டி அகமது அலி மரக்கார் தலைமையிலான படை போர்ச்சுகீசியரின் கப்பல்படையை ஆக்கிரமித்தனர்.

பல நாட்கள் நீடித்த போரில் போர்ச்சுகீசியர் பின்வாங்கினர். குட்டி அகமது அலி மரக்காரின் திறமையையும் ராஜ விசுவாசத்தையும் கண்ட சாமுத்திரி அவரை கடற்படை தளபதியாக்கி குஞ்சாலி என்ற சிறப்பு பெயரையும் வழங்கினார்.இவரே முதலாம் குஞ்சாளிமரக்கார் என அறியப்படுகிறார். அதற்குப் பிறகு பல போர்கள் போர்ச்சுகீசியருடன் ஏற்பட்டது. இவற்றில் முதலாம் குஞ்சாலி மரக்கார் ஹிட் அண்ட் ரன் எனும் உக்தியை போர்ச்சுகீசியருக்கு எதிராக உபயோகித்தார். எதிரியின்  கப்பல்களுக்கு அருகில் தோணிகளில் சென்று தீ அம்புகளால் தாக்கி அவர்கள் தாக்குதலை உணரும் முன்பே அங்கிருந்து ஓடி மறைவது ஹிட் அண்ட் ரன் எனப்படுகிறது.1508 இல் குஜராத் கடற்பகுதியில் முதலாம் குஞ்சாளிமரக்காரின் படை போர்த்துகீசிய படையுடன் மோதியது.இதில் ஏராளமானபோர்ச்சுகீசியர்கள் கொல்லப்பட்டனர் பிழைத்தவர்கள் கோவாவிற்கு தப்பினர்.அதற்கு பின் பலமுறை கோழிக்கோட்டைக் கைப்பற்றும் போர்ச்சுகீசியரது முயற்சிகள் சாமுத்திரியின் நிலப்படையான நாயர் படையாலும் , கடற்படையான குஞ்சாளியின் படையாலும் முறியடிக்கப்பட்டன.

சாமுத்திரியுடனான சமாதான தூதுக்களும் தொடர்ந்து தோல்வியடையவே போர்ச்சுகீசியர் சாமுத்திரியின் அரண்மனை வைத்தியனை விலைக்கு வாங்கி மருந்தில் விஷம் வைத்து சாமுத்திரியை தீர்த்துக்கட்டினர். பிறகு பதவிக்கு வந்த சாமுத்திரி ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டார்,அதன்படி போர்ச்சுகீசியருக்கு சாலியம் எனும் இடத்தில கோட்டை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.1531இல் போர்ச்சுகீசியர் சாலியம் கோட்டையை கட்டி முடித்தனர்.இவ்வுடன்படிக்கையின்படி போர்ச்சுகீசியர் அவர்கள் செய்யும் வணிகத்திற்கு வரி கட்டுவதாகவும், கடலில் கொலை , கொள்ளைகளில் ஈடுபடமாட்டோம் எனவும் உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் அதைத் துளியும் கடைப்பிடிக்கவில்லை. இது போர்ச்சுகீசியருக்கும், சாமுத்திரிக்கும் இடைப்பட்ட உறவில்  மீண்டும் விரிசலை உருவாக்கியது.இதன் தொடர்ச்சியாக சாமுத்திரியின் கப்பல்கள் போர்ச்சுகீசியர்களால் குஜராத் அருகில் சிறைபிடிக்கப்பட்டு முதலாம் குஞ்சாலி மரக்காரால் பலமாத போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.இந்நிகழ்விற்குப் பின் ரபிக்கடலிலிருந்து போர்ச்சுகீசியரை முழுவதும் விரட்ட முதலாம் குஞ்சாலி மரக்கார் சபதம் எடுத்து பலவருடம் பல தளங்களில் போரிட்டார் .1538 இல் இலங்கைக்கு அருகில் நடைபெற்ற போரில் முதலாம் குஞ்சாலி மரக்கார் தாக்கப்பட்டு பின் 1539 இல் மீண்டுவந்த அவர்  கொல்லப்பட்டார்.

முதலாம் குஞ்சாளியின் மறைவுக்குப் பின் போர்ச்சுகீசியரின் ஆதிக்கம் அரபிக்கடலில் அதிகரித்தது. அவர்களது கனவு நீண்டநாள் நிலைக்கவில்லை. முதலாம் குஞ்சாலி மறககாரின் மகனான குட்டி போக்கர் அலி மரக்கார் அவரது பதவியை ஏற்றுக்கொண்டார்.இவரை இரண்டாம் குஞ்சாலி மரக்கார் என அழைத்தனர். இவர் போர்ச்சுகீசிருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்  மற்ற ராஜ்ஜியங்களுக்கு உதவச் செய்தார் . அதன்படி 1553 இல் மதுரையை ஆண்ட விசுவநாதன் நாயக்கருக்கு உதவினர்.

அதற்குக் கைமாறாக மதுரையிலிருந்த போர்ச்சுகீசியரை வெளியேற்றினார்.1569இல் இரண்டாம் குஞ்சாலி தனது 68 ஆம் வயதில் மரணத்தைத் தழுவினார்.அவரது மறைவுக்குப் பின் பட்டு மரக்கார் முன்றாம் குஞ்சாலி மரக்காராய் பதவியேற்றார்.இவர் தனது பலத்த தாக்குதல்களால் போர்ச்சுகீசியரை பயமுறுத்தினார்.இவர் மிகவும் தந்திரவாதியாகச் செயல்பட்டதால் போர்ச்சுகீசிலிருந்து மிராண்டா என்ற தளபதியின் தலைமையில் 56 கப்பல்களில் போர்த்துகீசிய படை இந்தியாவிற்கு வந்தது இதை மற்ற ராஜ்யங்களின் உதவியுடன் எதிர்க்க தயாரானார் சாமுத்திரி. அதன்படி, இந்தியாவின் மற்ற ராஜ்ஜியங்களுக்குத் தூதர்களை அனுப்பினார் சாமுத்திரி.ஆனால் பல ராஜ்ஜிய அரசர்கள் போர்ச்சுகீசியருடன் போரிடுவதை விரும்பவில்லை. ஆனால் பிஜாபூர் சுல்தான் ஆதுர்ஷா , அகமதாபாத் சுல்தான் நிஷாம் ஷாவும்,மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.1570இல் ஒரே நேரத்தில் மதுரை திருமலை நாயக்கரின் படை மதுரை அருகே இருந்த போர்ச்சுகீசியரின் பண்டகசாலையையும், பிஜாபூர் சுல்தானின் படைகள் போர்ச்சுகீசியருடைய கோவா கோட்டையையும், அகமதாபாத் நிஜாமின் படை போர்ச்சுகீசியரின் சாவ்லா கோட்டையையும், குஞ்சாலி மரக்கார் தலைமையிலான சாமுத்திரி படை சாலியம் கோட்டையையும் ஆக்கிரமித்தன. இந்நிகழ்வு போர்த்துக்கீசியரை மிகவும் பாதிக்கவே மேலும் படைகள் போர்ச்சுகீசிலிருந்து தருவிக்கப்பட்டன.பல மாதங்கள் நடந்த போரின் முடிவில் 1571இல் போர்ச்சுகீசியரின் பலமாக திகழ்ந்த சாலியம் கோட்டையை இடித்தனர்.

          

போர்ச்சுகீசியர் தங்களது அனைத்து படைகளையும் கோவாவிற்குக் கிடத்தினர்.இதற்கிடையில் சாமுத்திரி இறந்ததால் புதிதாகப் பொறுப்பேற்ற சாமுத்திரி போர்ச்சுகீசியருடன் இணக்கமான போக்கைக் கையாண்டார்.போர்ச்சுகீசியருக்கு சாமுத்திரியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதுடன் 1584இல் பொன்னானியில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் முக்கிய வணிகத்தளமான பொன்னானியில் கோட்டை கட்ட அனுமதி அளித்ததற்க்கான எதிர்ப்பை மூன்றாம் குஞ்சாலி மரக்கார் சாமுத்திரியை நேரில் கண்டு தெரிவித்தார்.போர்ச்சுகீசியரை பகைக்காமல் குஞ்சாலி மரக்காரை சமாளிக்க சாமுத்திரி ஒரு தந்திரம் செய்தார்.குஞ்சாளிக்கு விருப்பப்பட்ட இடத்தில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள சாமுத்திரி அனுமதி வழங்கினார்.அதன்படி கோழிக்கோட்டிற்கு வடக்கே குற்றாடி ஆற்றின் அருகில் ஒருகோட்டை போர்ச்சுகீசியர் பொன்னானியில் கோட்டை கட்டி முடிக்கும் முன்பே கட்டப்பட்டது.இதற்கு மரக்கார் கோட்டை என பெயர் வழங்கப்பட்டது.1594 இல் போர்ச்சுகீசியருடன் சாமுத்திரி நாயர் படையுடன் சேர்ந்து முன்றாம் குஞ்சாலி மரக்கார் போரிட்டு வென்று திரும்பும்போது கப்பலில் கால் இடறி விழுந்ததில் படுத்த படுக்கையானார். குஞ்சாளியை காண சாமுத்திரி நேரில் வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் முன்றாம் குஞ்சாலி மரக்கார் இயற்கைஎய்தினார். அவரது மரணத்திற்கு பின் அவருடைய மகன் முகமது மரக்காரை நான்காம் குஞ்சாலி மரக்காராக சாமுத்திரி அறிவித்து படைத்தலைவனாக்கினார்.தனது முன்னோர்களை விட மிகுந்த பலவானாகவும், புத்திசாலியாகவும்நான்காம் குஞ்சாலி மரக்கார் விளங்கினார்.

பல தாக்குதல்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக நான்காம் குஞ்சாலி மரக்காரால் நடத்தப்பட்டு அரபிக்கடலின் முழு அதிகாரத்தையும் பெற்றவராக நான்காம் குஞ்சாலி மரக்கார் மாறினார்.மேலும் இவர் அரபிக்கடலின் சிங்கம் என அழைக்கப்பட்டார்.1597 இல் சாமுத்திரி இறந்தார். அவருக்கு பிறகு பொறுப்பேற்ற இளம் சாமுத்திரி குஞ்சாளியின் புகழ் கண்டு போராமையுற்றார்.சாமுத்திரியின் அரசவையில் பலரை போர்ச்சுகீசியர் தங்கள் வயப்படுத்தினர்.அவர்கள் நான்காம் குஞ்சாலி மரக்காரை பற்றி பல உண்மைக்கு புறம்பான செய்திகளை சாமுத்திரியிடம் கூறி பகைமையை வளர்த்தனர்.ஒருகட்டத்தில் நான்காம் குஞ்சாலி சாமுத்திரியின் அரியணையை அவரை வீழ்த்தி பிடிக்க திட்டமிட்டுள்ளார் என சாமுத்திரியிடம் புறம் கூறினார்.மேலும் மரக்கார் கோட்டையை மைய்யமாக கொண்டு குஞ்சாலி மரக்கார் அரசமைப்பதாகவும் கூறினார்.இறுதியில் பென்னி பிச்சு பரிகுவ எனற போர்ச்சுகீசியனின் தந்திரம் வென்றது.

சாமுத்திரியின் நாயர்படை தரை வழியாகவும் , போர்ச்சுகீசியரின் கப்பற்படை நீர்வழியாகவும் மரக்கார் கோட்டையை முற்றுகையிட்டு கோட்டைக்கு எந்த உதவியும் செல்லாமல்  தடுத்தனர்.அச்சமயம் குஞ்சாளியின் கடற்படை குழுவின் தலைமை வீரனான குட்டியாமு மின்னலைப்போல போர்ச்சுகீசு கப்பலை முற்றுகையிட்டு தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தான். மேலும் கோட்டையிலிருந்து பீரங்கிகளை குண்டுமலை பொழிந்தன. போர்ச்சுகீசிய தரப்பில் டிசில்வ்யா, பிரான்சிஸ் பெராரா ,மேஜர் லே போன்றோர் மாண்டனர். பிரோடடோ மெண்டோ கா வின் தலைமையில் பலநாள் சண்டையிட்டும் குஞ்சாலி மரக்காரின் கோட்டையை கைப்பட்ற இயலவில்லை.போர்ச்சுகீசியரின் முயற்சி தோல்வியடைந்தது. இருந்தாலும் அங்கு முகாமிட்டிருந்த போர்ச்சுகீசிய படை பல தந்திரங்களை திட்டமிட்டது.

அதன்படி, கோட்டைக்குள் உணவும், மருந்தும், யுதமும் கொண்டுசெல்ல பயன்படுத்திய அனைத்து வழிகளையும் தடுத்து நிறுத்தியது.பலமாதங்கள் நீண்ட இந்த தடையால் கோட்டைக்குள் உணவுப்பொருள் தீர்த்து பெண்களும் , குழந்தைகளும் பசியால் வாடினர். அச்சமயம் வெளியில் இருந்த குஞ்சாளியின் ஆதரவாளர்கள் மதுரை மன்னருக்கு தூது அனுப்பி விடயத்தை தெரிவித்தனர்.மதுரையின் அரசி 3000 மூட்டை அரிசியும்,மளிகைப் பொருட்களும் அனுப்பி உதவினார்.

ஆனால் பொருட்கள் வரும் வழியிலேயே தடுக்கப்பட்டன.மரக்கார் கோட்டையிலிருந்து தப்பி வந்தால் மதுரையில் அடைக்கலம் தருவதாக அரசர் கூறினார்.கோட்டைக்குள் சென்ற தூதர்கள் மூலம் அடிபணிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை குஞ்சாலி ஏற்கவில்லை. இதற்குமேல் வெளியேறவில்லை என்றால் பெண்களும் , வயதானோரும், குழந்தைகளும் பட்டினியால் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்த குஞ்சாலி மரக்கார் , “நான் சாமுத்திரியின் குடிமகன் , சமுத்திரியின் முன் நான் சரணடைய தயார் “ ன குஞ்சாலி மரக்கார் அறிவித்தார். சாமுத்திரி சரணடைந்தால் அனைவரையும் கொல்ல மாட்டோம், அனைத்து உரிமையும் வழங்குவோம்  என உறுதியளித்ததின் பேரில் பல குழந்தைகளும், தளர்ந்த நடையில் பெண்களும், பசியால் வாடிய முதியோரும் வர குஞ்சாலி கோட்டைக்கு வெளியே உருமாலை கட்டுடன்  வந்து நிமிர்ந்து நின்று தனது வாளை சமுத்திரியின் காலடியில் வைத்தார்.

அச்சமயம் போர்ச்சுகீசிய படைத்தளபதி பார்டடோ மின்னல் வேகத்தில் குஞ்சளியின் கைகளில் விலங்கிட்டு கீழே தள்ளினான்.இதைக்கண்ட நாயர்படை வீரர்கள் உறைவாளுடன் போர்ச்சுகீசிய வீரர் முன் ய்ந்தனர். பார்டாடோ துப்பாக்கியை பிரயோகிக்க போர்ச்சுகீசிய வீரர்களுக்கு அனுமதிவழங்க வேறு வழியின்றி நாயர்களின் வாள் உறை புகுந்தது. குஞ்சாலி மரக்காருடன் 40 பேரை கைது செய்து போர்ச்சுகீசியர் கோவா கூட்டி சென்று தோகோ சிறையில் சித்ரவதை செய்தது. மேலும் போர்ச்சுகீசியரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு போர்ச்சுகீசிய படையில் பணியாற்ற சம்மதம் தெரிவித்தால் மன்னிப்பு வழங்குவதாக போர்ச்சுகீசியர் வாக்கு கொடுத்தனர்.

நாய்களுக்கு முன் தலை வணங்க மாட்டேன் என குஞ்சாலி மரக்காரும்  , 40 வீரர்களும் ஒருமித்த குரலில் முழங்கினர்.அனைவரையும் சித்ரவதை செய்யும் போதும் குஞ்சாலி  பதறவில்லை. நகரத்தின் மைய்யத்தில் அவர்களது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.போர்ச்சுகீசியரின் உறக்கத்தை கெடுத்த குஞ்சாலியை காண பெரும் மக்கள் கூட்டம் கூடியது.அவரை வீதிக்கு கொண்டுவந்தனர் அசாதரணமான ஒரு தைரியம் குஞ்சாலியின் முகத்தில் தெரிந்தது.நிர்மிந்த நடைகண்டு மக்கள் கூட்டம் ஆராவாரமிட்டது.பெரும் மேளத்துடன் குஞ்சாலியின் கழுத்தில் மழு வேகமாக இறங்கியது. தலை உடலைவிட்டு தூரத்தில் சென்று விழுந்தது.40 பேரின் முடிவுகளும் இவ்வாறே அமைந்தது. குஞ்சாலியின் உடலைக்கண்டு கூட அவர்கள் பயந்தனர். அவரது உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசினர்.அவரது தலையை உப்பிலிட்டுகண்ணுரின் மைய்யத்தில் மக்களை பயமுறுத்த காட்சிபடுத்தினர்.குஞ்சாலி மரக்காரின் மரணத்திற்கு பின் மலபார் முழுவதும் போர்ச்சுகீஸ் வசம் சென்றது.

குஞ்சாலி மரக்காரின் நானூற்றி இருபதாவது ஆண்டில்  நமக்கு இன்றும் தென்னிந்தியாவின் மேற்குகரையில் வடகரைக்கு அடுத்த இரிங்கள் எனுமிடத்தில் அழிக்கப்பட்ட   கோட்டையின் உட்புறம் குஞ்சாலி வசித்த வீட்டின் சிறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் குஞ்சாலியின் வரலாற்றை கூறிக்கொண்டுதான் உள்ளது. இங்கு நான்கு மரக்கார்களின் நினைவாக கல்வெட்டுடன் கூடிய நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் குஞ்சாலி படை மற்றும் போர்த்துகீசியரால் உபயோகப்படுத்தப்பட்ட வாட்களும்,பீரங்கிகுண்டுகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.மேலும் இவ்வருங்காட்சியகதிற்கு வடக்கில் அமைந்துள்ள குஞ்சாலி பள்ளியில் அவர்களது அரியாசனம்,போர்த்துக்கீசிய வாள் போன்றவை பாதுகாக்கப்படுகிறது.

மரக்கார் குடும்பத்தின் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக கேரள அரசு கொச்சி பல்கலைகழகத்தில் உள்ள கடற்சார்அறிவியல் துறைகளில் ஒன்றிற்கு “குஞ்சாலி மரக்கார் ஸ்கூல் ஆப் மரைன் இஞ்சினியர்ங்” என பெயரிட்டுள்ளது.

கடந்த 2௦௦௦ஆம் ஆண்டில் ஒரு வண்ண அஞ்சல்தலையை குஞ்சாலியின் கடற்படையை நினைவூட்டும் விதமாக இந்திய தபால் துறை  வெளியிட்டது.

நவம்பர் 10,2017 ஹெரிடேஜர் குழுவின் பயணத்தில் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம்.

 

Leave a Reply