அன்று எங்களின் முதல் பயண இடம், சடையார் கோவில், திருச்சென்னம்பூண்டி திருக்கோவில் ஆகும். முதலாம் பராந்தகன் காலக் கற்றளி என்பது எங்களை அதிகம் ஈர்த்தது. அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் கோவிலின் பெயர்ப்பலகை இருந்தது, ஆனால் உயர்ந்த கோபுரமோ, மக்கள் நடமாட்டமோ காணப்படவில்லை. யாராவது வருகிறார்களா என்று பொறுத்துப் பார்த்துவிட்டுச் சற்று முன்னேறிச் சென்றோம்.
சில ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறிய பெண்பிள்ளை கண்ணில் பட ”இங்கே பெரிய கோவில் இருக்கிறதாமே, வழி தெரியவில்லை எப்படிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டோம். ”அந்தப் பலகைக்கு எதிரில் இருக்கும் சாலையில் கோவில் இருக்கு!” என்று கூறவும், சற்றும் நம்பிக்கை இன்றியே உள்ளே நுழைந்தோம்.
பாதி வழிக்கு மேல் கார் செல்ல முடியாததால் நிறுத்திவிட்டு, அழகிய தென்னை மரங்கள் வழ்ந்த சிறிய பாதையில் நடந்து கோவிலை அடைந்தோம். பூஜைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. அருகில் இருந்த தோட்டக்காரர் சாவி கொண்டுவந்து திறந்துவிட்டார்.
இக்கோவிலைப் பற்றி திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் , அப்பர் சேத்திரக்கோவையிலும் பாடியுள்ளனர். ஆனால் இன்று இந்த இடம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. கோவில் முழுக்கக் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.
இந்தியத் தொல்லியல் பரப்பாய்வு துறையினரால் கல்வெட்டுகள் படி எடுக்கப்படுள்ளன. கல்வெட்டுகள் தௌ¢ளாறெறிந்த மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், கோவிளங்கோ முத்தரையன், முதலாம் பராந்தகன் காலத்தவையாக உள்ளன.
அதிகமானவை கோவிலுக்கு விளக்கெரிக்கக் கொடுத்த பொன் கழஞ்சுகளைப் பற்றியதாக உள்ளன. கல்வெட்டில் இக்கோவிலின் இறைவன் பெயர் ’தென்கரை இடையாற்றுநாட்டுத் திருக்கடைமுடி மஹாதேவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் மகாமண்டபம் , அர்த்த மண்டபம், கருவறைகளைக் கொண்ட சிவன் கோவிலையும், செங்கல் கட்டுமானத்தில் அம்மன் கோவிலையும் , சிதைந்த சண்டேசுவரர் சந்நிதியையும் கொண்டுள்ளது. சிவன் சந்நிதியின் சுவர் முழுக்க புடைப்புச் சிற்பங்களும், கோஷ்ட சிற்பங்களும் உள்ளன. இக்கோவில் பல காலங்கள் வழிபடப்பட்டு இன்று சிதைந்துள்ளது. இது சமீப காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. முதலாம் பராந்தகனுக்குப் பிறகு இந்தக் கோவிலில் எந்தக் கல்வெட்டுகளும் காணப்படவில்லை. அதற்கு இங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து போனது காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வூரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் இடம் பெயர்ந்துவிட்டதாக, விக்ரமசோழனின் திருப்போரூர் கோவில் கல்வெட்டில் செய்தி உள்ளது.
அதனால் இக்கோவில் பல காலங்கள் மண்மூடி கிடந்திருக்கலாம். இக்கோவிலைத் தொல்லியல் துறையினர் சீர் செய்து, திருப்பணி செய்து பராமரித்து வருகின்றனர். சிவன் கோவிலின் கருவறை சதுர வடிவத்தில் உள்ளது. அர்த்த மண்டபம் செவ்வகமாக உள்ளது. மகாமண்டபம் சிதைந்து காணப்படுகிறது. நாங்கள் கோவிலைச் சுற்றி வரும்போது கோட்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி , நான்முகன், முருகன், கடைமுடிநாதர் போன்ற சிற்பங்களும், புடைப்புச் சிற்பங்களாக மகிசாசுரமர்தினி, காலாந்தக மூர்த்தி, பிட்சாடனர், கங்காதரர் , ஆடல் சிற்பங்களும் , அதிட்டானத்தில் இராமாயண சிற்பங்களும் இருந்தன.
மிகுந்த அழகுடனும், ஒரு பசுமையான வயலின் நடுவேயும் இந்தக் கோவில் அமைத்திருக்கிறது. விமானம் முழுமைபெறவில்லையாகினும் அதன் வேலைப்பாடுகள் அமைத்த சிற்பங்களின் வழியே முதலாம் பராந்தகனின் கட்டிடக்கலைப் பாணியை நாம் உணர முடிகிறது.
எங்களின் இந்த பயணம் இனிதே முடிந்தது.