அருங்காட்சியகங்கள் எப்போதுமே என்னை ஈர்க்கும் இடங்களில் ஒன்று. தமிழகத்தின் பெரிய அருங்காட்சியகம் சென்னையில் உள்ளது என்றாலும் கூட, அதை ”செத்த காலேஜ்” என்றே என் சிறு வயதில் நான் அறிந்திருக்கிறேன். என் சிறுவயதில் யாரும் என்னை அழைத்துச் சென்று இதையெல்லாம் காண்பிக்கவே இல்லை . நான் முதல் முதலாக சென்னை அருங்காட்சியகம் சென்ற போது, நான் கல்லூரியில்; மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.
என்னத் தான் அப்படி வைத்திருக்கிறார்கள் ? என்று அறிந்து கொள்ளவே சென்றேன். தனியாக, அன்றைய தினம் மிக அருமையானதாக அமைந்தது. அவ்வளவு கற்சிலைகளையும், கல்வெட்டுகளையும், செப்புத் திருமேனிகளையும், குழந்தைகளுக்கான அழகிய கண்காட்சியும், அளவிட முடியாத புத்தகங்களையும் கொண்டதாய் இருந்தது சென்னை அருங்காட்சியகம்.
எத்துனை முறை போனாலும் புதிதாகப் பார்ப்பதாய் ஒரு உணர்வு. ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு எல்லா ஊரிலும் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்துவிடும் ஆசை வந்தது.
என் இளங்கலை ஆய்வறிக்கைகாக காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவு+ர், கங்கை கொண்ட சோழபுரம், புதுக்கோட்டை திருச்சி, மல்லை, மதுரை மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து வந்தேன். அதற்காகவே அருங்காட்சியகம் வடிவமைக்கும் தலைப்பை ஆய்வில் இணைத்துக்கொண்டேன்.
இதில் நான் அதிக அளவில் சென்று வந்தது புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகம். நான் முதலில் சென்ற போது ஒரு சிறிய கட்டிடத்தில் இருந்தது. ஆனால், புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் தான் தமிழகத்தின் இரண்டாவது பெரிய சேகரிப்புகள் கொண்ட அருங்காட்சியகம். அங்கு சிற்பங்கள், செப்புப் பட்டயங்கள், கற்காலக் கருவிகள், படிமங்கள், அரிய வகை விலங்குகள், எலும்புகள், செடி வகைகள், மரச் சிற்பங்கள், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், உடைகள் என நிறைந்து கிடந்தது.
பல அருங்கட்சியங்களிலும் உள்ள ஒரு பொருள், பழங்காலக் காசுகள். அதிலும் சோழர் காலக் காசுகள் பார்க்க அதிக ஆசை, அதனால் தஞ்சை, கும்பகோணம் பகுதியில் உள்ள அருங்காட்சியகம் செல்ல நினைத்தேன். கும்பகோணத்தில் நான் அருங்காட்சியகங்ளைப் பார்த்தது இல்லை. ஆனால், தஞ்சை மராத்தியர் அரண்மனை முழுக்க அருங்காட்சியகமாக உள்ளது. நான் முதன் முதலில் சென்ற போது, இராஜராஜனுக்கு என்று தனி அருங்காட்சியகம் இல்லை. எல்லாம் ஒன்றாகவே இருந்தது.
அந்தக் கூடத்தில் பெரிய அளவில் இருந்த பிச்சாடனர் சிலையும், அவர்களின் சோழர்காலச் சிலைகளும் அவ்வளவு அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அழகு. அத்துனை மாடிகளும் ஏறி, மராத்தியர் காலக் கலைச் சேகரிப்புகள், அவர்களின் அரச சபை , தனி சேகரிப்புகள் , புத்தகங்கள் என நீண்டு கொண்டே போனது நான் பார்த்த விசயங்கள்.
இராஜராஜனை அடுத்து, நமக்கு எப்போதுமே இராசேந்திரன் தானே , கங்கை கொண்ட சோழபுரத்து அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரதிற்கு அகழ்வைப்பகமாக இருந்தது. அங்கு கிடைத்த தொல்லியல் எச்சங்கள், சிலைகள் என ஒரு சிறிய இடம் என்றாலும் நம் தேடல்களுக்கு மிகுந்த தீனி தரும் இடம் அது.
காஞ்சிபுரத்தில் அருங்காட்சியகமா?
இது எனக்கு கிடைத்த முதல் கேள்வி. காஞ்சியைச் சொந்த ஊராகக் கொண்ட மக்கள் பலரை நானும் விசாரித்தேன். கடைசியில் அருங்காட்சியகம் இல்லை, என்றே நானும் முடிவு செய்துவிட்டேன். அப்போதெல்லாம் இணையம் அவ்வளவு எளிதில் பயன்படுத்தக்கூடியதாக இல்லை. ஆனாலும் காஞ்சிக்கு வேறு இரண்டு அருங்காட்சியகங்களைப்; பார்க்க வேண்டும் எனக் கிளம்பி சென்றேன். அவை இரண்டும் தனிச் சேகரிப்புகள் , காஞ்சிக் குடில் மற்றும் சகுந்தலா தேவி அருங்காட்சியகம், காஞ்சியில் ஒரு ஆட்டோ பிடித்து இங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று பேசிவிட்டு, முதலில் காஞ்சிக் குடிலுக்குச் சென்றோம். ஆஹா, என்ன அருமையான இடம், ஒரு குடும்பம் தங்களின் மூதாதையர்களின் நினைவாக அவர்களின் பொருட்களை அப்படியே பாதுகாத்து வைத்துள்ளனர். அவர்களின் கூடம், திண்ணை, சமையலறை எல்லாம் அப்படியே அந்தந்தப் பொருட்களுடன் இருந்தது. அவர்களின் சமையலறை என்னைப் பெரிதும் ஈர்த்தது. இரண்டு தலைகளைக் கொண்ட அரிவாள்மனை, இரும்புக் கரண்டிகள், இரண்டு அடுப்பு, இரும்பில் இடிக்கும் சிறிய உரல்கள் என்று மிக அழகான சேகரிப்பு அது.
சகுந்தலா தேவி அருங்காட்சியகம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் அருகே இருந்தது. அது ஒரு கல்யாண வீட்டின் நிகழ்வுகளைப் பதிவு செய்திருந்தது நான் சென்ற போது. வீட்டின் ஆட்களைக் கூட பொம்மைகளாக செய்து வைத்திருந்தனர். அங்கு நான் ஒரு கட்டிடக்கலை மாணவியாக வியந்த விஷயம், அவர்களின் மாடியில் இருந்த பெண்களுக்கான தனி அறை.
அப்படியான ஒரு அமைப்பை நான் இசுலாமியக் கட்டிடக்கலையில் பார்த்திருக்கிறேன், நம் ஊரிலும் அப்படியான பழக்கங்கள் இருந்தது என்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. அந்த அறை ஆபரணங்கள், அவர்களின் ஆடைகள் போன்ற பொருட்களால் நிறைந்திருந்தது.
எல்லாம் பார்த்த பிறகு நான் வந்த ஆட்டோ அண்ணா, இதே போல அரசு ஏதோ வைத்திருக்கிறதே, அது பார்க்க வேண்டாமா என்று கேட்டாரே.. நான் என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தேன். அழைத்து போங்கள் அண்ணா என்று கூறிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம். அரசு அருங்காட்சியகம் , காஞ்சிபுரம், கட்டிடத்தின் முன்பு நிறுத்தினர். சிறிய கட்டிடம் தான் , ஆனால் நான் பார்க்க நினைத்த நிறைய விசயங்கள் அங்கே இருந்தது. மகர யாழின் சிறிய மாதிரியை செய்து வைத்திருந்தார்கள். நிறைய சிலைகள், காசுகள், பொது சேகரிப்புகள் என்று பல அரிய தகவல்களைக் கொண்டிருந்தது.
அடுத்து நான் சென்றது மதுரை மாநகர அருங்காட்சியகம். மதுரையில் காந்தி அருங்காட்சியகம் பெரிதாகவும், அரசு அருங்காட்சியகம் அளவில் கொஞ்சம் சிறியதாகவும் உள்ளது. ஆனால் கட்டிடத்தின் வெளியிலேயே பல சிற்பங்கள், கல்வெட்டுப் பகுதிகள் எல்லாம் இறைந்து கிடந்தது. உள்ளே ஒரு சிறிய அளவு சேகரிப்புகளே இருந்தன.
அடுத்து நான் அதிகமாகத் தேடியது திருச்சி அருங்காட்சியகம். மங்கம்மாள் சத்திரம், என்று உள்ளுhரில் அழைப்பார்கள் போலும், நானும் உச்சி பிள்ளையார் கோவிலின் வீதியில் பலரிடம் அருங்காட்சியகம் பற்றி விசாரித்து கிடைக்காது போய் முதல் முறை திரும்பிவிட்டேன். இரண்டாம் முறை சரியாக இடம் விசாரித்துக்கொண்டு சென்று அந்த அழகிய அருங்காட்சியகத்தைப் பார்த்தேன்.
வெளியிலேயே சிம்ம தூண் சிற்பங்கள், ஜேஷ்டா தேவி சிற்பங்கள், வீரக்கல், அகழ்வாராய்ச்சி பற்றிய புகைப்படங்கள், திருச்சி மாநகரின் வரலாற்று இடங்களின் புகைப்படங்கள் என வரலாற்றுப் பொக்கிஷமாகவே இருந்தது.
மல்லை செல்லும் போதெல்லாம், அந்த அருங்காட்சியகத்தின் சிற்பங்களைப் பார்க்க அதிகம் பிடிக்கும். அது சிற்பக் கலை கல்லூரியின் வேலைப்பாடுகளும் வைக்கப் பயன்படுத்தும் படியால், அங்கு இருக்கும் சிறிய கடற்கரைக் கோவில் மாதிரி, ஓவியங்கள், சுதைச் சிற்பங்கள் என அனைத்தும் நம்மை கவரும் வகையில் இருக்கும்.
வேலூர் சிறிய வயது முதலே சென்று வந்த ஊர். அங்கு உள்ள அருங்காட்சியகத்திற்க்கு சிறிய வயதிலேயே அழைத்து போயிருக்கிறார்கள். ஆனால் ஏதும் கூர்ந்து பார்த்ததில்லை, அல்லது நினைவில் இல்லை. அதனால் மீண்டும் சென்றேன். அங்கு ஆற்காடு நவாபுகள், ஆங்கிலேயர்கள், சில சோழ , பல்லவ சேகரிப்புகள் உள்ளன. ஆனால் மிக பெரிய கூடங்களில் அழகிய விளக்குகள் வைத்து, சேகரிப்புகளை காண்பிக்கிறார்கள்.
அதன் பிறகு முதுகலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டமே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டதால் பெரிதாய் அருங்காட்சியகங்கள் பார்க்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு தர்மபுரி நடுகல் அருங்காட்சியகம் சென்றோம். ஊரில் உள்ள பல நடுகற்கள் அங்குதான் உள்ளது. அதைத் தவிர அங்கு சுடுமண்ணில் செய்தக் குளியல் தொட்டியின் வடிவத்தில் உள்ள இமைதாழி ஒன்று அருமையாக இருந்தது.
என்னை மிகவும் ஈர்த்தது, நாங்கள் அங்கு பார்த்த ”மரத்தாலான ராவணன் சிலை”. அந்தச் சிலைக்கு பத்துத் தலைகளும், இருபது கைகளும் கொண்டு, மிக பிரம்மாண்டமாக இருந்தது. அது மரத்தால் செய்யப்பட்டு, அதன் மேல் தோல் கொண்டு மூடப்பட்டிருந்தது. மிக அருமையான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சிற்பம் அது.
கடந்த வருடம் ஜெய்பூர் அரண்மனை, அரசு அருங்காட்சியகம், ஜம்மு அரசு அருங்காட்சியகம், ஹம்பி அரசு அருங்காட்சியகம், பாதாமியில் ஒவ்வொரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்திலும் ஒரு அருங்காட்சியகம் இருந்தது, பாதாமிக் குடைவரைகள் அருகில் ஒன்று , ஐஹோலேவில் ஒன்று, பட்டடக்கல்லில் ஒன்று என்று அங்கு கிடைத்த சிலைகள், கல்வெட்டு பகுதிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
நாம் அனைவரும் பார்த்து ரசித்து வரலாற்றுத் தகவல்களை அறிந்துக்கொள்ளவே அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் யாரும் கேட்பாரற்றுக் கிடந்ததாலேயே பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கேயாவது பத்திரமாக இருக்கட்டும் என்று ஒரு மனநிலைக்கு நாம் இன்று வந்திருக்கிறோமே, அந்த மன நிலையே தவறு. நாமும் அறிந்து கொண்டு, நம் அடுத்தத் தலைமுறைக்கும் இந்தச் செய்திகளை எடுத்துச் செல்லவேண்டும்.
இச்சிலைகளிலும், கல்வெட்டுத் துண்டுகளிலும், உடைந்த சில்லுகளிலும் நம் வரலாறு இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது. அதை பாதுகாத்து போற்ற வேண்டியது நம் கடமை.