கோயம்பேடு சென்னையில் உள்ள மிக பிரபலமான ஒரு ஏரியா (சென்னை வழக்கில்) . பேருந்து நிலையம், மெட்ரோ, மார்க்கெட் என பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய கோயம்பேடு ஓர் பழமை வாய்ந்த இடம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த பழமை வாய்ந்த தகவல்களை கல்வெட்டு ஆதாரத்துடன் உங்கள் அனைவருடனும் பகிரும் ஆவலில் உருவானது இப்பதிவு.
இங்குள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலிற்கு சென்ற பிறகு தான் நானும் இதனை பற்றி அறிய நேர்ந்தது.
கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டிலும் இந்த இடம் கோயம்பேடு என்றே அழைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஈசனும், ஈசனின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருப்பதால், அம்பிகைக்கு மவுசு அதிகம். அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம்.
இந்த தலத்திற்கு “குறுங்காலீஸ்வரர்” என பெயர் வரக் காரணத்தைதேடினோம். கல்வெட்டுகளின் மூலம் அதனை காண முடிகிறது.
பிற்காலத்தில் இத்தலத்து சிவலிங்கம், மணலால் மூடப்பட்டது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான்.
தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு”குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் கல்வெட்டுகள் கோவிலில் காணக் கிடைக்கின்றன.
மேலும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டிலும் “கோயம்பேடு” என்றே வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டுச் செய்தி விவரம் கீழே.
“ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன்முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு உயரு (25) ஆவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு மாங்காடு நாட்டுக் கோயம்பேட்டு உடையார்”.
இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக் கிறது. லவகுசர்கள் “கோ’ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, “அயம்’ என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் “கோயம் பேடு’ என பெயர் பெற்றது. “பேடு’ என்றால் “வேலி’ எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது “கோசைநகர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலத்தில் ஒவ்வொரு பகுதியும் கோட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவையில் குறுங்காலீஸ்வரர் கோவில் புலியூர் கோட்டத்தைச் சார்ந்து இருக்கிறது. புலியூர் கோட்டத்தின் வடதிசை எல்லையாக இதனை காண முடிகிறது. ஏனெனில் இதற்கு அடுத்துப் பாடியில் உள்ள திருவலித்தாயம் கோவில், புழல் கோட்டத்தின் ஆரம்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டு பேருந்து நிலையம் வருபவர்கள் பழமையான இத்திருக்கோயிலுக்கு ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.