தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்

சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர்.

சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும் சமயம் ஆருக சமயம் என்று அழைக்கப்பட்டது. சமண சமண சமயத்தின் பரப்பாளர்களாக உலகத்தில் 24 பெரியோர்கள் (தீர்த்தங்கரர்கள்) தோன்றினார்கள் அவர்களுள், முதல்வராக கருதப்படுபவர் ஆதி நாதர் எனப்படுகிற விருஷப தேவர் மற்றும் கடைசி தீர்த்தங்கரராக இருந்தவர் வர்த்தமான மகாவீரர். இவரது காலம் கி.மு 6-ம் நூற்றாண்டாகும்.

சமண சமயம் பிற்காலத்தில் திகம்பர சமணம், ஸ்வேதாம்பர சமணம், ஸ்தானக வாசி சமணம் என மூன்றாக பிரிந்தது.

சாத்தன், அமணன், கணியன் என்ற பெயர்கள் சமணர்களைக் குறிக்கும் பொதுப் பெயர்களாகும்.

 

தமிழகத்தில் சமணத்தின் வரலாறு

சங்க காலம்

இந்தியாவில் கி.மு 6-ம் நூற்றாண்டில் வைதீக மதத்திற்கு எதிராகச் சில சமயங்கள் கிளர்ந்தெழுந்தன. வைதீகச் சமயத்தின் மீதும், அவற்றின் சடங்குகள் மீதும் நம்பிக்கை கொள்ளாத மக்களால் தோற்றுவிக்கப்பட்ட மதமே சமண மதமாகும்.

சமணக் கோட்பாடுகளைப் பரப்பும் பொருட்டு மகாவீரர் தனது சீடர்களின் அணி ஒன்றை நிறுவினார். அதில் ஆடவரும்,பெண்டிரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சமண மதம் மக்கள் திரளைப் பெரிய அளவில் ஈர்க்கத் தவறிவிட்டாலும் படிப்படியாகப் தென்னிந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.

இந்தச் சமண சமயம் தென்னிந்தியாவில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் சந்திர குப்த மௌரியர் என கர்ண பரம்பரை என்னும் கதை வாயிலாக அறிய முடிகிறது.

அந்தப் பேரரசர் அரசு கட்டில் துறந்து ஒரு சமணராகி கர்நாடகத்திற்கு வந்து அங்கு ஒரு ஜைன (சமண) துறவியாகக் கழித்தார் என்று கூறப்படுகிறது என்றாலும் அதனை உறுதிப்படுத்தக்கூடிய கல்வெட்டுச் சான்றுகளோ அல்லது பட்டயச் சான்றுகளோ இல்லை.

மகா வீரர்¢ மறைந்து 200 ஆண்டுகளுக்கு மகதத்தில் ஏற்பட்ட ஒரு பஞ்சம் தென்னிந்தியாவில் சமணம் பரவ இரண்டாவது காரணமாகக் கருதப்படுகிறது.

கர்நாடகாவில் கி.மு 3-ம் நூற்றாண்டில் பத்ரபாகு என்னும் சமண துறவியின் தலைமையில் சமணர்கள் அங்கு புலம் பெயர்ந்தனர்.

கி.மு 3-ம் நூற்றாண்டளவில் கர்நாடகாவில் பரவிய சமணம் பிறகு மெல்ல மெல்ல தமிழகத்தில் பரவியது.எனவே, சங்க காலமே தமிழகத்தில் சமண சமயத்தின் தொடக்க காலம் என்று கூறலாம்.

புத்த மதத்திற்கு முன்னரே தமிழ்நாட்டில் சமண சமயம் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சங்க கால அரசர்களான பாண்டியர்களும், சேரர்களும், அதியமான்களும் சமண சமயத்திற்கு ஆதரவு அளித்து போற்றியுள்ளனர். குறிப்பாக, சங்க கால பாண்டியர்கள் சமண சமயத்தினை போற்றி வந்துள்ளனர்.

சங்க கால பாண்டிய மன்னனான நெடுஞ்செழியன் என்பவன் சமணர்களை போற்றியுள்ளான் என்பதை மாங்குளம் கல்வெட்டுகள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றன.

‘கணிய் நந்தஅ ஸரிய் இகுவ் அன்கே
தம்மம் இத்தஅ நெடுஞ்செழியன் பணஅன்
கடல்அன் வழுத்திய கொடுப் பித்தஅ பளிஇய்”.

நெடுஞ்செழியனின் பணியாளனாகிய கடலன் வழுதி என்பவன் கணிய நந்தன் என்னும் சமண முனிவருக்குக் கற்படுக்கை செய்து கொடுத்ததைப் பற்றிக் கூறுகிறது.

பண்டைய தமிழகத்தில் சமணத்தின் தாக்கம் சமயம், இலக்கியத்தில் மட்டுமில்லாமல் வணிகத்திலும் எதிரொலித்தது. அக்கால தமிழ் வணிகர்கள் பலரும் சமணச் சமயத்தை சார்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது.

இந்த வணிகர்கள் பலரும் சமணத் துறவிகளுக்கு ஏராளமான தானங்களை அளித்துள்ளனர்.

பெரும்பாலான தமிழ்க் கல்வெட்டுகளில் வைதீகச் சார்பைவிடவும் சமணச் சார்பு சீரிய முறையில் காணப்படுகிறது. வணிகத்தில் சேர்த்த செல்வத்தினைச் சமணர்கள் எவ்வாறு சேர்த்து வைத்தனர் என்பதைத் தெளிவுப்படுத்த நீண்ட ஆய்வுத் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் சமண சமயம் பரவியிருந்தற்கான சான்றுகளாக அமணப்பாக்கம், அருகத்துறை, நமணசமுத்திரம், ஜீனாலயம் பஞ்ச பாண்டவர் மலை, அமண்குடி, சமணர்திடல், சமண மலை, அருக மங்கலம் போன்ற ஊர்கள் திகழ்கின்றன.

மேலும், பள்ளி என்ற சொல்லைப் பின்னொட்டாக கொண்ட ஊர்கள் சமணத் தளங்கள் இருந்தற்கான குறிப்பை உணர்த்துக்கின்றன. சமணர்கள் வெறும் துறவிகளாக மட்டுமில்லாமல் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் இருந்து மக்களுக்குக் கல்விச் சேவையையும், ஔடத சேவையையும் புரிந்துள்ளனர்.

சமணர்கள் உறைவிடம்

சமணர்கள் பெரும்பாலும் “அமண நிலையில் (நிர்வாண நிலையில்) இருப்பதற்காகவும், தனிமையில் இறக்கும் வரையில் உண்ணா நோன்பை மேற்கொள்ளவதற்காகவும் வெளியுலக வாழ்க்கையை விடுத்து இயற்கை சூழலில் அமைந்திருந்த குகைத்தளங்களில் வாழ்ந்தார்கள்.கடும் விரதம் இருந்து உயிர் விடும் முறைக்கு “சல்லேகணம்” என்று கூறுவார்கள் இவ்வாறு உயிர் துறந்த துறவியின் உடலைக் காடுகளில் தூக்கி எறிந்து விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இரையாக்குவார்கள்.

கல்கஞ்சனம், கற்பள்ளி, பளிஇய் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சமணப்படுக்கைகள் அரசர்களாலும், வணிகர்களாலும் பொது மக்களாலும் சமணத்துறவிகளுக்குச் செய்து தரப்பட்டன.சமணப்பள்ளிகளுக்கு என்று கொடுக்கப்படும் தானங்களுக்குப் பள்ளிச்சந்தம் என்று பெயர்.

சமணர்கள் வாழ்ந்திருந்த பெரும்பாலான குகைகளில் மருந்துக் குழிகள் காணப்படுகின்றன.இவை மூலிகைளை அரைப்பதற்காக பயன்படுத்தியிருப்பார்கள்.

சமணர் வாழ்ந்த இத்தகைய குகைத்தளங்கள் மழை நீர் உட்புகாதவாறு அதனுடைய மேற்தளங்கள் வெட்டப்பட்டிருக்கும். சமணர் தளங்களில் அமர்ந்த நிலையில் நின்ற நிலையிலும் சமணத்துறவிகளின் (தீர்த்தங்கரர்களின்) புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். சமணச் சிற்பங்கள் நிற்கும் கோலத்திற்கு “காயோத்சர்க்கம்” என்றும் ஆஜானு லம்ப பாகு என்றும் என்றும் பெயர். இந்நிலையைத் தமிழில் தாள் தாழ் தடக்கை என்று கூறுவர். சில ஊர்களில் சமணக் குகைகளைப் “பஞ்ச பாண்டவர் மலை” என்று அழைக்கிறார்கள்.
சமண இலக்கியங்கள்

சங்க காலத்தில் சமணர்கள் சிறந்த அறிஞர்களாக விளங்கினர் என்பதை அவர்களது இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.

1) நாலடியார்
2) திணைமாலை நூற்றைம்பது
3) ஏலாதி
4) குண்டலகேசி
5) வளையாபதி
6) சீவக சிந்தாமணி
7) சூளாமணி
8) நீலகேசி

களப்பிரர்கள் காலத்தில் சமணம்

தமிழ் மூவேந்தர்களிடையே நிலவிய ஒற்றுமை இன்மை அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட போர்களால் பொருளாதாரச் சீரழிவு, குறுநில மன்னர்கள், வேளிர் போன்றோர் சுய உரிமை பெற்று பேரரசர்களுக்குக் கட்டுபடாத சூழல் போன்றவை களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றிக் கொள்ள காரணமாக அமைந்தது. இது நிகழ்ந்த காலம் கி.பி 3-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

களப்பிரர்கள் வைதீக சமயத்திற்கு எதிரானவர்கள் என்ற கருத்து பல அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகள் கல்லாடம், பெரிய புராணம் ஆகிய இலக்கியங்களில் காணலாம்.

நாயன்மார்களுள் ஒருவரான மூர்த்தி நாயனார் பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டை வடுகக் கருநாடர் வேந்தனை மதுராபுரி காவல் கொண்டான் என்று கூறுவதைக் காணலாம்.இதனையே கல்லாடம் என்னும் இலக்கியம், மதுரை வவ்விய கருநாடர் வேந்தன் அருகர் சார்ந்து நின்று அரண்பணி அடைப்ப என்பதால் இக்களப்பிரர்கள் சமணச்சமயம் சார்ந்து நின்று சிவன் கோயில் பூசைப்பணிகளைத் தடுத்தனர் என்று அறிகிறோம்.

களப்பிரர்கள் கர்நாடகப் பகுதியின் சரவண பெலகோலா என்னும் பகுதியிலிருந்து வந்தவராதலால் இவர்கள் சமண சமயத்தை சார்ந்தவர்களாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

கி.பி 470-ல் திராவிட சங்கம் என்னும் சமணச் சங்கத்தை வஜ்ர நந்தி என்ற சமணத்துறவியால் களப்பிரர்கள் காலத்தில் நிறுவப்பட்டது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது.

பல்லவர்கள் காலத்தில் சமணம்

முதலாம் சிம்மவர்மன்(கி.பி 456-460) பல்லவ மன்னர்களில் பெரும்பான்மையானோர் சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரே சமண சமயத்திற்குத் தங்களின் ஆதரவினை அளித்துள்ளனர்.

இடைக்காலப் பல்லவருள் ஒருவரான முதலாம் சிம்மவர்மன் பாதிரிபுலியூர் என்ற ஊரில் உள்ள சமண மடத்தை நன்கு ஆதரித்தான் என்பதை லோக விபாகம் என்னும் வடமொழி இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

பாதிரி புலியூர் மடம், பல்லவர் காலத்தில் பெருமைமிக்க சமணமடமாகத் திகழ்ந்தது மேலும், இம்மடத்தினைப் புகழ்ப்பெற்ற சமணப்பேரறிஞர்களான சிம்ம சூரி,சர்வ நந்தி என்பவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.

முதலாம் மகேந்திரவர்மன்(கி.பி 610-கி.பி 630)

சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவ சமயத்தைத் தழுவியவன் என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது. இவனச் சமணனாக இருந்த பொழுது சமணர் சொற்கேட்டு சிவனடியார்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்தான். இவனால் துன்புறுதலுக்கு உண்டான அப்பர் என்கிற திருநாவுக்கரசரும் முதலில் சமணராக இருந்து பின் சைவராக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மவர்மனுக்கு அடுத்து பாதிரிபுலியூர் என்ற ஊரில் உள்ளசமண மடத்தைப் போற்றியவன் மகேந்திரவர்மன் ஆவான்.

அவன் சைவனாக மாறியதும் பாதிரி புலியூர் மடத்தை இடித்து அங்கு “குணதர ஈஸ்வரம்” என்ற கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகிறது.

இரண்டாம் நந்திவர்மன்

பல்லவ மல்லனான இரண்டாம் நந்திவர்மன் சிறந்த வைணவன். ஆயினும் சமண சமயத்திற்குச் சிறந்த தொண்டினை ஆற்றியுள்ளான்.

இவன் காலத்தில் ஆர்க்காடு நகர்க்கு அருகில் உள்ள பஞ்ச பாண்டவர் மலையில் ஒரு குகை சமணருக்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டு ஒன்றில், நந்தி போத்தரையர்க்கு 50 யாண்டு நாகநந்தி குரவர் வழிப்படப் பொன் படிமம் எடுக்கப்பட்டது என்று உள்ளது. இதனால் இப்பேரரசன் காலத்தில் சமணர் சிலரும் இருந்தமை என்பது தெளிவாம்.

சிம்ம வர்மனுக்கு முன் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவருள் சிலர் சமணராக இருந்திருக்கலாம் ஆனால் அதனை உறுதி செய்யக் கூடிய கல்வெட்டு ஆதாரங்கள் சரி வர இல்லை.

சோழர் காலத்தில் சமணம்

சோழ நாட்டைப் பொறுத்த வரை கி.மு 3-ம் நூற்றாண்டு முதல் சமணர்கள் அப்பகுதியில் வாழ்ந்தற்கான சான்றுகள் இல்லை. சமண சமயத்திற்கு மாறாக பௌத்த மதமே சோழ நாட்டில் பிரதானமாக இருந்துள்ளது.

பல்லவர் காலத்தில் சமணர் செல்வாக்கு மிகவும் குன்றி விட்டதாயினும் சமணம் அடியோடு விடப்படவில்லை. பல்லவர்களுக்குப் பிற்பட்ட சோழர் காலத்திலும் சமணக் கோயில்களையும் மடங்களையும் சமணர்கள் பாதுகாத்து வந்தனர் என்பதைக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.

முதற் பராந்தகன் காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள (தற்போது விழுப்புரம் மாவட்டம்) ஆனந்தமங்கலத்தில் ஜினகிரிப் பள்ளி என்ற சமணமடம் ஒன்று இருந்துள்ளது.

மேலும், சிறுவாக்கம் என்ற ஊரில் “ஸ்ரீ கரணப்பெரும் பள்ளி” என்ற மடமும், கீரைப்பாக்கம் என்னும் ஊரில் தேச வல்லப ஜினாலயம் என்ற சமணக் கோயிலும் முதலாம் பராந்தகன் காலத்தவை.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் “விடால்” என்ற ஊரையடுத்த குன்றில் இரண்டு சமண குகைத்தளங்கள் அமைந்துள்ளன.முதலாம் இராசராசனின் திருத்தமக்கையார் குந்தவை நாச்சியார் தாதாபுரம் என்னும் ஊரில் “குந்தவை ஜினாலயம்” என்ற சமணக் கோயிலை எடுப்பித்தார்.

அவ்வம்மையாரே போர் வட்டம் திருமலையிலுள்ள சமணக் கோயிலையும், திருச்சி மாவட்டத்தில் மேற்பாடியில் உள்ள சமணக் கோயிலையும் கட்டுவித்தார்

சோழ நாட்டில் சமணர்கள் வாழ்ந்த குகைத் தளங்கள் குறைவாக இருப்பினும் பிற்கால சமணக் கோயில்கள் இருந்திருக்கின்றன.ஆனால் அவற்றுள் பல இன்று அழிந்துவிட்டன.

விஜயநகரர்கள் காலத்தில் சமணம்

விஜயநகர வேந்தர்கள் பெரும்பாலும் வைணவ சமயத்தைத் தழுவியவர்கள் என்பதை அவர்கள் கட்டிய பல வைணவ கோயில்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் மற்றும் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

ஆயினும் அவர்கள் சமண சமயத்திற்கும் தங்களது ஆதரவினை நல்கியுள்ளனர். மேலும், அரசாங்க பணிகளிலும் சமணர்களை அமர்த்திச் சிறந்த சமயச்சகிப்பாளர்களாக இருந்துள்ளனர் என்பதை அவர்களது கல்வெட்டுகள் நன்கு விளக்குகின்றன.

சமணர்களின் அழிந்த பாழடைந்த கோயில்கள் அரசின் செலவிலேயே திருப்பணி செய்யப்பட்டன. விஜயநகர மன்னர் இரண்டாம் அரிகரன் என்பவர் இருகப்பதன்னாதா என்ற சமணரை அமைச்சராக நியமித்தார். மேலும், தலைநகர் விஜயநகரில் ஒரு சமணக் கோயிலும் கட்டப்பட்டது.

இரண்டாம் அரிகரனின் கல்வெட்டுகள் காஞ்சிபுரத்திற்கு அருகில் சமணர் காலணி ஒன்று இருந்தது என்றும், அங்கே இருந்த சமணக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தையும் கட்டினார் என்பதையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

நாயக்கர் காலத்தில் சமணம்

பௌத்த மதத்தை (புத்த மதம்) போல் முற்றிலும் மறையாமல் சமணம் ஓரளவுவரை தமிழகத்தில் நீடித்து வந்தது. சோழ நாட்டில் இன்றளவும் மூன்று முக்கிய இடங்களில் அருகனை (சமணக் கடவுள்) வழிப்படும் சமணர்கள் நிறைந்து வாழ்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் தீபங்குடி, மன்னார்குடி தஞ்சை மாவட்டம் கருந்திட்டைக்குடி ஆகிய இடங்கள் சமணர் மணம் வீசும் இடங்களாகும்.

சோழ நாடு மட்டுமின்றி தொண்டை நாட்டிலுள்ள சமண ஆலயங்கள் பலவற்றுக்கும் நாயக்க மன்னர்கள் பல கொடைகளை அளித்துள்ளனர்.

செஞ்சி வட்டம் சிற்றாமூர் ஜினாலயத்தின் அருகில் உள்ள குளக்கரைக் கல்வெட்டு செவ்வப்ப நாயக்கரின் மகனான அச்சுதப்ப நாயக்கரின் காரிய கர்த்தர் சிற்றாமூர் சமணக் கோயிலுக்கு அளித்த அறக்கொடைகளைக் கூறுகிறது.

நவீன காலத்தில் சமணம்

சுமார் 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமணசமயம் தற்போது மற்ற மதங்களின் வளர்ச்சியால் தன் பொலிவை இழந்து காணப்படுகிறது. வடஇந்தியா மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலும் சமணம் பின்பற்றப்படுகிறது.அக்காலத்தில் பின்பற்றிய கடுமையான பழக்க வழக்கங்கள் தற்போதும் சமணமதத்தவரால் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆசாபாசங்களைத் துறத்தல், மொட்டையடித்தல், வௌ¢ளையாடை அணிதல், பிச்சையெடுத்து உண்ணுதல், தலையில் உள்ள முடியைக் கைகளால் பிடுங்குதல் போன்றவைச் சமணர்களின் கடுமையான பழக்கங்களாகும்.

ஜீவ காருண்யம் என்பது சமணத்தத்துவங்களில் ஒன்றாகும். அதன்படி இன்றும் கூட சமண சமயத்தவர்கள் வௌ¢ளையாடை அணிந்து, வாயினை மூடிக்கொண்டு மயில்பீலியால் நடந்து செல்லும் பாதையைச் சுத்தம் செய்து கொண்டு செல்வார்கள்.

சமணமதத்தில் துறவறம் மேற்கொள்ளும் பெண்களுக்கு என்று விழா நடத்தி பெற்றோர்களும், உறவினர்களும் பிரியாவிடை கொடுப்பார்கள்.

தமிழ்நாட்டில் சமண சிற்பங்கள் இருக்கும் கிராமங்களில் அச்சிற்பங்களை “அமணச்சாமி” என்று வழிப்படும் பழக்கம் இருந்து வருகிறது.

சமணத் தடங்கள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகள்:

கி.மு 3-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைந்த சமணமதத்திற்கு புகலிடமாக மதுரை திகழ்ந்தது.இயற்கை அரண்களாக விளங்கும் மலைகளையும், பாறைக்குன்றுகளையும் மதுரை பெற்றுள்ளதால் சமணர்கள் தாங்கள் வாழும் பகுதியாக இதனை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

தமிழகத்தில் காணப்படும் தமிழ்-பிராமி கல்வெட்டுகளுள் 70 மூமதுரையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சமணத் தடங்கள் இருக்கும் இடங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

1) தொண்டைமண்டலம்
2) பாண்டிய மண்டலம்
3) கொங்கு மண்டலம்
4) நடுநாடு

அவைகளைப் பற்றி அடுத்த மாதம் விரிவாகக் காண்போம்

ஒவா மலையில் 6 தமிழ்-பிராமி கல்வெட்டுகள் சமணப்படுக்கைகளுடன் உள்ளன.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி கல்வெட்டுகளில் மிகப் பழைமையான கல்வெட்டு மாங்குளம் கல்வெட்டாகும்.இக்கல்வெட்டினை 1882-ல் இராபர்ட் சீவெல் என்னும் ஆங்கிலேயர் கண்டுப்பிடித்தார்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் வழுதி என்பவனால் கணிய நந்தி என்னும் சமண ஆசிரியருக்கு செய்து கொடுத்த கற்படுக்கைகளை பற்றிக் கூறுகிறது.
அரிட்டாப்பட்டி

மதுரை மாவட்டம் அழகர் கோவில் செல்லும் வழியில் , மேலூரிலிருந்து 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.அரிட்டாப்பட்டி பிராமி கல்வெட்டுகள் சங்க காலத்தை சார்ந்த கல்வெட்டுகளாகும்(கி.மு 3 அல்லது கி.மு 2).

பாண்டிய தளபதி ஆதனன் என்பவன் சமண முனிவர்களுக்கு கொடுத்த தானத்தைக் குறிக்கிறது.
கீழ்வளவு

கீழ்வளவு என்னும் ஊர் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள குகைத்தளங்களில்சமணப்படுக்கைகளும்,பாறையின் மேல்முகப்பில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.கீழ்வளவு கல்வெட்டு 1903-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.இதற்கு அருகில் சமணப் புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இருக்கின்றன.இவற்றின் காலம் கி.பி 7(அ) கி.பி 8-ம் நூற்றாண்டாகும்.

இக்கல்வெட்டினை,

‘உபாச அபோத நெடுல வோசோ கொடுபாரிஇ”
என்று வு.ஏ மகாலிங்கம் வாசித்துள்ளார்.

நெடுலன் என்பவனின் மகன் ஆபுத்திரன் சமண முனிவர்களுக்கு கற்படுக்கைகளை தானமாக செய்து கொடுத்ததைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

கொங்கர்புளியங்குளம்

கொங்கர்புளியங்குளம் மதுரையிலிருந்து தென்மேற்காக 9 கி.மீ தொலைவில் திருமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்குள்ள குகைத்தளங்களில் 3 பிராமி கல்வெட்டுகளும் மற்றும் ஆறு சமணப்படுக்கைகளும் காணப்படுகின்றன.

குகையின் மேற்புறத்தில் சமணப் புடைப்புச் சிற்பங்கள் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன.கொங்கர்புளியங்குளக் கல்வெட்டினை கி.மு 3 அல்லது 2-ம் நூற்றாண்டை சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

விக்கிரமங்கலம்

இவ்வூர், மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.இங்குள்ள நாக மலை என்னும் மலைத்தொடரில் சமணர் குகைகள் இருக்கின்றன.இக்குகைகளை „உண்டான் கல்… என்று அவ்வூர் மக்கள் அழைக்கிறார்கள்.இந்த குகைத்தளங்களில் சமணப்படுக்கைகளுடன் கூடிய பிராமி கல்வெட்டுகள் உள்ளன.இதன் காலம் கி.மு 3 அல்லது கி.மு 2-ம் நூற்றாண்டாகும்.

அழகர்மலை

அழகர் மலை, மதுரையிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் கிடாரிபட்டி என்ற ஊரினலிருந்து 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.அழகர் மலையில் மொத்தம் 8 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அச்சநந்தி என்ற சமணர் உருவாக்கிய கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரரின் சிற்பம் உள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மதுரைக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடமாகும்.இங்கு மொத்தம் 6 சமணப்படுக்கைகள் பிராமி கல்வெட்டுகளுடன்அமைந்துள்ளது.இதன் காலம் கி.மு 1-ம் நூற்றாண்டாகும்.

பொது மக்களின் கல்வெட்டுகளுள் திருப்பரங்குன்றம் கல்வெட்டு பிரதான இடத்தை பெற்றுள்ளது.இலங்கையை சேர்ந்த போலாலயன் என்பவன் செய்து கொடுத்த சமணப்படுக்கையை பற்றிக் கூறுகிறது.

திரு நாராயணராவ் திருப்பரங்குன்ற கல்வெட்டினை பின்வருமாறு படிக்கிறார்

‘எருக்காட்டூரா இ(ல்)ல குடும்பிகன போலாலயன
செய்த ஐய-கயன நேடு கையான”

இங்கு “குடும்பிகன” என்பது குடும்பத் தலைவன் என பொருள்படும்.

சித்தர் மலை

சித்தர் மலை என்னும் ஊர் மதுரை மாவட்டத்தில் மேட்டுப்பட்டி அருகே உள்ளது.வைகை நதிக்கரைக்கு அருகே அமைந்துள்ள இம்மலையில் 5 கற்படுக்கைகளும், தமிழ்-பிராமி கல்வெட்டுகளும் உள்ளன.

முத்துப்பட்டி

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.இவ்வூரில் உள்ள “உண்ணா மலை” என்ற மலையில் 30-க்கும் மேற்பட்ட சமணப்படுக்கைகளும் 5 தமிழ்-பிராமி கல்வெட்டுகளும் இருக்கின்றன.குகையின் மேற்புறம் 2 சமணப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.பி 8 (அ) 9-ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

வரிச்சியூர்

வரிச்சியூர், மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அமைந்துள்ள மலை குன்றுக்கு உதயகிரி என்று பெயர்.இக்குன்றில் சமணத்துறவிக்களுக்கான பெரிய குகை ஒன்று உள்ளது. வரிச்சியூர் மலையில் அதிகமான கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு அருகில் சிதைந்த நிலையில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

ஆனைமலை

மதுரையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஆனை மலை என்னும் மலைத் தொடர்.தொலைவில் இருந்து பார்த்தால் உறங்கு கின்ற யானையை போல் தோற்றமளிப்பதால் இதற்கு „ஆனை மலை… என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
ஆனை மலையில் உள்ள எட்டு சிறு குன்றுகளில் சமணர் வசித்தற்கான அடையாளங்களாக 12 கற்படுக்கைகளும்,குகையின் முகப்பில் ஒரு தமிழி கல்வெட்டும் உள்ளன.இக்குகை 23 அடி 6 அங்குல நீளமும்,3அடி உயரத்தையும் கொண்டுள்ளது.

ஜம்பை

நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், திருக்கோவிலூர் தாலுக்காவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது.இவ்வூர் மலையில்; உள்ள குகைத்தளத்தில் தமிழ்- பிராமி கல்வெட்டு ஒன்று இருக்கிறது. கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு, அதியமான் என்ற குறுநில அரச மரபை சார்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுடையதாகும்.

அசோகருடைய கல்வெட்டுக்களில் வரும் „சதியபுதோ…என்னும் வார்த்தை இந்த கல்வெட்டில் வருகிறது. இதனை சத்திய புத்திரர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.சமணத் துறவிகளுக்கு செய்து கொடுக்கப்பட்ட சமணப்பள்ளியை பற்றி ஜம்பை கல்வெட்டு கூறுகிறது.

புகார்

புகார், சேரர்களின் தலைநகரான கரூர்க்கு அருகில் உள்ளது.புக;ரில் ஆறு நாட்டார் மலை… என்ற பகுதியில் புக;ர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இம்மலையடிவாரத்தில் உள்ள ஊரை „வேலாயுதம் பாளையம்… என்றுக் குறிப்பர். அங்கு உள்ள குகைத்தளங்களில் சேரர் காலத்திய தமிழிக் கல்வெட்டுகள் உள்ளன.

சங்க கால சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைப்பற்றி கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.இக்கல்வெட்டுக்களை மிகத் தெளிவாக படித்த பெருமை திரு.ஐராவதம் மகாதேவனையே சாரும். புக;ர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சேர மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

அரச்சலூர்

அரச்சலூர் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.இங்குள்ள நாக மலை என்னும் மலைத் தொடரில் உள்ள குகைத் தளங்களில் பிற்கால தமிழ்- பிhhமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அரச்சலூர் கல்வெட்டுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இசைக் கல்வெட்டாகும்.ஏனெனில் பழங்கால இசையைப் பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது.மேலும் இக்கல்வெட்டுகள் முற்கால தமிழ்-பிராமி எழுத்துக்களை விடவும் மேம்பட்ட வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.

அரச்சலூர் பிராமி கல்வெட்டுகள் தான் நாளடைவில் வட்டெழுத்துக்களாக உருப்பெற்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சித்தன்ன வாசல்

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்ன வாசலில் காணப்படும் குடைவரையும் அங்கு தீட்டப்பட்டுள்ள ஓவியமும் பல வகைகளில் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவை.வு.N இராமச்சந்திரன்,திரு.நாகசாமி ஆகியோரின் கருத்துப்படி இவ்வரலாற்றுச் சின்னம் சமண சமயத்திற்குரியது என்பதாகும்.சித்தன்ன வாசலை „சிறு பொசில்…என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.

இம்மலையின் மேல் பகுதியில் உள்ள ஏழடிப்பட்டம் என்னும் குகைப்பள்ளியில் வெட்டப்பட்டுள்ள பழந்தமிழ் கல்வெட்டு சமணம் சார்ந்தது என்று ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார். சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரான பார்சுவ நாதரின் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது.

பாதிரி புலியூர்
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் சிறந்த சமண மடம் பாதிரி புலியூரில் இருந்தது என லோக விபாகம் என்னும் சமண நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதலாம் மகேந்திர வர்மன் சைவனாக மாறியதும் அம்மடத்தை அழித்து அதன் கற்களை கொண்டு குணபத ஈஸ்வரம் என்ற கோயிலை கட்டினான் என்று லோக விபாகம் என்ற நூல் கூறுகிறது.

திருப்பருத்திக்குன்றம்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள இந்த இடம் சமணக் காஞ்சி எனப்படும். வேகவதி ஆற்றங்கரையில் அமைந்த இந்த ஊர் காஞ்சியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.மொத்தம் இங்கு இரண்டு கலைப்பாணியிலான கோயில்கள் அமைந்துள்ளது.

1) திராவிடம்
2) வேசரம் (தூங்கானை மாடக் கோயில்)

இக்கோயிலைப் பற்றி அறிஞர் வு.N.இராமசந்திரன் என்பவர் ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார். திகம்பர சமணர் கலைப்பீடங்களுள் நான்கனுள் ஒன்றாக சமணக் காஞ்சியும் விளங்கியது. தமிழ் நாட்டில் திகம்பர சமணம் கி.பி 3-ம் நூற்றாண்டில் தான் தோன்றியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இக்கோயில் பிற்கால சோழர் காலத்தில் பெருஞ்சிறப்பு பெற்றிந்தது.

இந்த கோயிலில் முன் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் அழகான சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.இவை விஜய நகரர்களின் காலத்தை சேர்ந்தவை.சோழர் மற்றும் விஜய நகரர் அரசக்களின் கல்வெட்டுகள் உள்ளன.கோயில் வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. திருப்பருத்திக்குன்றம் சமணக்கோயில் தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் உள்ளது.

முடிவுரை

கி.மு 3-ம் நூற்றாண்டில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்தில் நுழைந்த சமண மதம் கி.பி 7-ம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 1000 ஆண்டுகள் தழைத்தோங்கி வளர்ந்தது. கி.பி 7-ம் நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கம் காரணமாக சமணம் அதன் பெருமையை இழக்க தொடங்கியது.இத்தகைய பக்தி இயக்கம் உருவாக காரணமாக இருந்தவர்கள் தேவார மூவரான அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர்.மேலும் சமண சமயத்தின் கடுமையான விதிமுறைகளையும்,பழக்க வழக்கங்களையும் சாதாரண மக்களால் பின்பற்ற முடியாததும் சமணத்தின் சிறுமைக்கு ஒரு காரணம் எனலாம்.

Leave a Reply