கடந்த இரு மாதங்களாக சமணச் சின்னங்கள் உள்ள ஓணம்பாக்கம் கருப்பங்குன்று மலை மற்றும் வெடால் வடவாமுக அக்னீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டும் பல்வேறு காரணங்களால் கடைசி நேரத்தில் செல்ல இயலாமல் எங்கள் பயணத்தை தள்ளி வைத்து கொண்டே இருந்தோம். ஒரு வழியாக 22.07.2018, ஞாயிற்றுக்கிழமை அன்று, பிற்பகல் செல்வது என முடிவெடுத்து நண்பர்கள் ஹரிஷ் குமார், லோகேஷ், முரளி, ஜனா இவர்களுடன் திருக்கழுக்குன்றத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஓணம்பாக்கத்தை நோக்கி பயணம் தொடங்கியது.
வல்லிபுரம் வழியாகப் பாலாற்றை கடந்து வாகன நெரிசல் இல்லா கிராமங்களினூடே 33 கிலோ மீட்டர்கள் பயணித்து ஓணம்பாக்கத்தை அடைந்தோம். ஊரின் தொடக்கத்திலேயே சுற்றிலும் ஆங்காங்கே சிறுசிறு மலை குன்றுகள் கண்ணில் தெரிகின்றன. அது மட்டுமில்லாமல் அந்த குன்றுகளை குடைந்தும் வெடி வைத்து தகர்த்தும் தனியார் கல்குவாரிகள் இயங்கிக்கொண்டிருப்பதையும், லாரிகளில் ஏற்றிச் செல்லும் ஜல்லி மற்றும் M-Sand மூலம் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.
கல்குவாரிகளை கடந்து சில நூறு மீட்டர்கள் சென்றால், இடதுபுறம் கருப்பங்குன்று செல்வதற்கான வழிகாட்டி பலகை நம் கண்ணில் படுகிறது. அதுகாட்டும் திசையில் சிறிது தூரம் பயணித்ததும் மற்றொரு வழிகாட்டி பலகை இடது புறம் செல்க என வழிகாட்டுகிறது. புதிதாக வருபவர்களுக்கு எளிதில் கருப்பங்குன்றை அடைவதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.
கருப்பங்குன்று மலையானது, குறத்தி மலை, பஞ்சபாண்டவர் மலை, நாகமலை என பல்வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையின் மேலே செல்வதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஏறி மேலே சென்றால் முதலில் நம் கண்ணில்படுவது சிறிய பாறையொன்றில் க்ரீவம், சிகரம் எனும் உறுப்புகளை கொண்ட கோயிலின் விமானத்தை போன்று செதுக்கப்பட்ட கோட்டத்தின் உள்ளே சமண தீர்த்தங்கரருள் ஒருவரான பார்சுவநாதர் ஐந்துதலை நாகம் குடை பிடிக்க நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இச்சிற்பத்தின் மேலே இருபுறமும் சாமரமும், கீழே பார்சுவநாதரை வணங்கிய நிலையில் தரணேந்திர யக்ஷனும், பத்மாவதி யக்ஷியும் காணப்படுகிறார்கள்.
அதே பாறையில் பார்சுவநாதர் சிற்பத்தின் வலப்புறத்தில் மேலே ஆறு வரிகள் கொண்ட கிரந்த வரி வடிவம் கொண்ட பல்லவர் கால கல்வெட்டு ஒன்று காணக்கிடைக்கிறது.
“ஸ்ரீ சதுர்விம்
சதி ஸ்தாவகவ
ஸுதேவ சித்தா
ந்த படாரர்
செய்வித்த
தேவாரம்”
சதுர்விம்சதி ஸ்தாபகராகிய வசுதேவ சித்தாந்த பட்டாரகர் எனும் சமணத்துறவியால் எடுப்பிக்கப்பட்ட கோயில் என (தேவாரம்) இக்கல்வெட்டு மூலம் அறிகிறோம்.
பார்சுவநாதர் சிற்பத்தின் எதிரேயுள்ள பாறையில் சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ஆதிநாதரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. ஆதிநாதர் யோக நிலையில் அமர்ந்திருக்க, அவர் தலையின் பின்புறம் அரை வட்ட பிரபையும், அதற்கு மேலே முக்குடைகளும், அவரின் இருபுறமும் சாமரம் வீசுபவர்களுடன் காட்டப்பட்டுள்ளது.
அதற்கடுத்த பாறையில் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. அவர் ஏழு சிம்மங்கள் உடைய ஆசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருக்க, அவர் தலையின் பின்புறம் அரை வட்ட பிரபையும் , அதற்கு மேலே முக்குடைகளும் இருபுறம் சாமரம் வீசுபவர்களும், மேலே இரு தேவர்கள் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இந்த புடைப்பு சிற்பங்கள் கிபி 7-8 நூற்றாண்டு காலத்தை சார்ந்தவையாகவும், பல்லவர் கலைப்பாணியை பெரிதும் ஒத்துள்ளன.
அதை தாண்டி மேலே சென்றால் இயற்கையாக அமைந்த குகைகளும், ஒரு பெரிய பாறையின் கீழ் ஐந்து சமணப் படுக்கைகளும், மற்றொரு இடத்தில் மேலும் ஐந்து சமணப் படுக்கைகளும் காணக்கிடைக்கின்றன. மலைக்கு மேலே வற்றிய சிறு குளமொன்றும் உள்ளது.
இந்த சமணப் படுக்கைகள், குகைகள், தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள், கல்வெட்டு ஆகியவற்றை வைத்து நோக்கும் பொழுது ஓணம்பாக்கம் குறத்தி மலையில் சமணத் துறவிகள் தங்கியிருந்து சமய பணிகள் ஆற்றியதையும், அவர்களால் இப்பகுதியில் சமணம் செழித்து வளர்ந்திருந்தையும், அறிய முடிகிறது.
இத்தனை சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட இவ்வரிய தொல்லியல் சின்னங்களுக்கு, இப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடிகளால் ஏற்படும் அதிர்வினால் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் மற்றும் சேதமடையும் வாய்ப்பும் உள்ளது. கல் குவாரிகளிடமிருந்து குறத்தி மலையை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் மக்களும், தமிழ் சமணர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருவதாகவும் அறிந்தோம்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக தொல்லியல் துறை இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, சற்றேறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்து பாதுகாக்க வேண்டுமென்பதே வரலாற்றை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
அமைவிடம்:
ஓணம்பாக்கம் செய்யூருக்கு கிழக்கே 6 கி மீ தொலைவிலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மேல்மருவத்தூர் – சித்தாமூர் – செய்யூர் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் இருந்து தென்கிழக்காக 22 கி மீ தொலைவில் அமைந்திருக்கிறது.