கீழ்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில் – ஆயிஷா பேகம்

வடமூலநாதர் என்று அழைக்கப்படும் ஆலந்துறையார் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது. கீழ்பழுவூருக்கு செல்ல எண்ணற்ற பேருந்து வசதிகள் உள்ளன.

கீழ்பழுவூரின் சிறப்பு

அரியலூரில் அமைந்துள்ள, கீழ்பழுவூர் பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ள ஊராக திகழ்கிறது. இந்த ஊர் ஆலமரங்கள் நிறைந்திருந்த ஊராக விளங்கியதால் கீழபழுவூர் என்னும் பெயர் ஏற்பட்டது. அவ்வூரினை சோழர்களும், அவர்களுடைய சிற்றரசர்களான பழுவேட்டரையர்களும் ஆட்சிப்புரிந்தனர். வேட்டரையர்களும் ஊரின் பெயரினை கொண்டு பழுவேட்டரையர்கள் என அழைக்கப்பட்டன.

பழுவேட்டரையர்களின் சிறப்பு வாய்ந்த ஊராக பழுவூர்கள் விளங்கியது. (கீழ்பழுவூருக்கு அருகில் மேல்பழுவூர் என்னும் ஊர் உள்ளது.) மேல்பழுவூரில் பழுவேட்டரையர்களின் கோயில் உள்ளது. கல்வெட்டுகளில் ஊரின் பெயர் சிறுபழுவூர் என்றும் திருபழுவூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் உள்ள வரலாற்று கோயில்களுள் ஆலந்துறையார் கோயிலும் ஒன்றாக திகழ்கிறது.

1) பெருமாள் கோயில்
2) மறவனீஸ்வரர் கோயில்
கோயில் சிறப்புகள்

ஆலந்துறையார் திருக்கோயில்,பல்வேறு சிறப்புகளையும் வரலாற்று பெருமைகளையும் உள்ளடக்கியது.அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
சிவனும் உமையும் கைலாயத்தில் இருக்கும் போது,பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூடினார். அவ்வாறு கண்களை மூடியதன் விளைவாக பூமி சுழல்வது நின்றது. பார்வதியின் செயலைக் கண்டு கோபம் கொண்ட சிவன் பார்வதியை பூமிக்கு சென்று தவம் செய்யுமாறு சாபமிட்டார்.
பெருமானின் சொல்லை ஏற்ற அம்மை பூலோகத்திற்கு சென்று’யோகவனம் என்ற இடத்தில் கடுந்தவம் புரிந்தார். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவரை தன்னுள் இணைத்து கொணடார். பார்வதியின் தவத்தின் பலனாய் அவருக்கு ‘”அருந்தவ நாயகி” என்ற பெயர் ஏற்பட்டது.
பரசுராமன் தன் தாயை கொன்ற தோஷத்தை போக்குவதற்காக லிங்க வடிவோனை வணங்கிய தலமாக ஆலந்துறையார் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் தான்தோன்றீயாய் (சுயம்புவாய்) உருவானதாக ஸ்தலபுராணம் கூறுகிறது. இலிங்கத்தின் மேல் காலை கதிரவனின் கதிர்கள் அழகாக படுகிறது.

வடமூலநாதர் என்று அழைக்கப்படும் ஆலந்துறையார் திருக்கோயிலின் வரலாறு முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் செங்கல்தளியாக இருந்த இக்கோயில் பின் ‘கற்றளியாக மாற்றப்பட்டது (பராந்தகன் காலத்தில்-?).

அதற்கு பின் வந்த சோழ அரசர்களாலும் அவர்களின் சிற்றரசர்களான பழுவேட்டரையர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டது.

அருணகிரிநாதர் கீழபழுவூரினையும்,ஆலந்துறையார் கோயிலினையும் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

கோயில் அமைப்பு

ஆலந்துறையார் திருக்கோயில் அர்த்த மண்டபம்,முகமண்டபம், மகாமண்டபம் என்று பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. கோயிலின் விமானம் ஒரு அடுக்கினை உடைய ஏகதள விமானமாகும். கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள பெருநாசிகைகளில் தூர்க்கை, பிரம்மா, தட்சிணாமூர்த்தி போன்ற தெய்வங்கள் உள்ளன. விமானத்தில் தேவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கபோதத்தின் மேல் (கூரையின் மேல்) மகரவரிகளும், கீழே பூத கனங்களும்,பத்மவரிகளும் இடம் பெற்றுள்ளன.
கோயில் ‘”பித்தி” என்றும் ‘”பாதம்” என்றும் அழைக்கபடும் சுவர்ப்பகுதியில் அழகான தேவகோட்டங்கள் கோட்டபஞ்சரங்களோடு உள்ளன.தேவகோட்ட நாசிகைகளில் சிறு சிறு உருவங்கள் உள்ளன. கோட்டங்களின் அருகே அரைத்தூண்கள் உள்ளன. தேவகோட்டங்களில் மேல் சிறு சாலகோயிலும் உள்ளது.

தேவ கோட்டச் சிற்பங்கள்

கோயிலில் உள்ள தேவகோட்டங்களில் பல்வேறு இறையுருவங்கள் உள்ளன. அவற்றில் சில முற்கால சோழர் காலத்தை சேர்ந்த சிற்பங்களும் உள்ளன.

1) கஜசம்ஹார மூர்த்தி
2) உமையொருபாகன்
3) சரஸ்வதி
4) திரிபுராந்தகர்
5) தட்சிணாமூர்த்தி
6) பிரம்மா
7) கொற்றவை
8) நடராசர்
9) காலாந்தக மூர்த்தி
10) கங்காதர மூர்த்தி
11) உமாசகிதர்

கஜசம்ஹார மூர்த்தி

முற்கால சோழர் காலத்தை சேர்ந்த சிற்பத்தின் அழகு வியக்கத்தக்கது. எட்டு கரங்களை பெற்றுள்ள கரி உரித்த பெருமான் தலையில் ஜடா மண்டலத்தையும், செவிகளில் குதம்பைகளையும்,மார்பில் உதரபந்ததையும், பூணூலையும்,கழுத்தில் சரப்பளியையும் அணிந்துள்ளார். நான்கு கரங்களில் ஒன்றில் வாளையும்,மற்றொரு கரத்தில் எச்சரிக்கை முத்திரையையும் கொண்டுள்ளார்.வீரக்கழல்கள் கால்களில் ஆபரணமாக உள்ளன. ஜடா மண்டலத்தில் சிறு கபாலம் உள்ளது.

சரஸ்வதி

சரஸ்வதி என்கிற ஞானசக்தி பிற்கால சோழர் காலத்தை சேர்ந்தவர். நான்கு கரங்கள் இரண்டில் முறையே அக்கமாலையும்,கமண்டலமும் மற்ற கரங்கள் அபயத்திலும், வரத்திலும் உள்ளன. தலையில கீரிட மகுடமும், செவிகளில் அன்னப்பறவை தோடுகளும்,தோள்களில் வளைகளும் உள்ளன.

விஷ்ணு

தலையில் கிரீட மகுடம்,செவிகளில் மகர குண்டலங்கள் ஆபரணங்களாக கொண்டுள்ள மாயோன் நான்கு கரங்களைக் கொண்டுள்ளார். மேற்கரங்களில் சக்கரம் மற்றும் சங்கு மற்றும் கீழ்க்கரங்கள் அபயத்திலும், வரத்திலும் உள்ளன.விஷ்ணுவின் சிற்பத்திற்கு கீழே அடியவர் ஒருவரின் சிற்பம் உள்ளது.

கங்காதர மூர்த்தி

நான்கு கரங்களை பெற்றுள்ள அய்யன் நேராக நிற்காமல் சற்று திரும்பி நின்றுள்ளார். நான்கு கரங்களில் முறையே உடுக்கையும்,திரிசூலம்(அதன் மேல் சிறு உருவம்) மழுவையும் கொண்டுள்ளார். சூலத்தை கொண்டுள்ள கரமும் மற்ற கரமும் மத்தளத்தை இசைப்பதை போல் உள்ளது. கழுத்தில் முத்து மாலையும் தோள்களில் வளைகளையும் அணிந்துள்ளார்.
பிரம்மா, நடராஜர் போன்ற சிற்பங்கள் பிற்கால சேர்க்கையாகும்

அர்த்த்நாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் உமையொருபாகனின் சிற்பம் பராந்தக காலத்து சிற்பமாக கருதப்படுகிறது.ஒரு காலை சற்றே முன்னிருத்தி நிற்கும் சிவபெருமான் அம்மையை தன் இடபாகத்தில் கொண்டுள்ளார்.தலையில் ஜடா மகுடமும்,காதில் பத்ர குண்டலங்களும் அணிந்துள்ளார்.
பிற சிற்பங்கள்

  1. ஆகாய லிங்கம்
  2. வாயு லிங்கம்
    அப்பு லிங்கம்
  3. கஜலட்சுமி
  4. மகிஷாசுரமர்த்தினி
  5. விநாயகர்
  6. தட்சிணாமூர்த்தி
  7. முனிவர்கள்
  8. சப்தமாதர்கள்
  9. நாயன்மார்கள்
  10. சூரியன்
  11. சந்திரன்
  12. நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள்

கோயிலின் வெளியே சிறு கோயில் ஒன்று இலிங்கத்துடன் அமைந்துள்ளது மற்றும் கோயிலின் வாயிலாக அமைந்துள்ள மற்ற சிற்பங்கள் பிற்கால சோழர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.

கோயில் கோபுரம்

கோயில் கோபுரம் இரண்டு அடுக்குகளை உடைய கோபுரமாகும்.அதில் அழகான தெய்வ சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்

ஆலந்துறையார் கோயிலில் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளும்,பழுவேட்டரையர்களின் கல்வெட்டுகள் மற்றும் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன.

1) முதலாம் பராந்தகன்
2) முதலாம் இராஜராஜன்
3) முதலாம் இராஜேந்திரன்
4) முதலாம் குலோத்துங்கன்
5) விக்கிரம சோழன்
6) முதலாம் இராஜாதிராஜன்
கல்வெட்டில் குறிக்கப்பெறும் நாடு,கூற்றம் வளநாடு, ஊர்கள் மற்றும் சதுர்வேதி மங்கலம்
1) குன்றக்கூற்றம்
2) உத்துங்க வளநாடு
3) சிறுபழுவூர்
4) புவனமுழுதுடையாள் வளநாடு
5) பொய்கை நாடு
6) கண்டாரதித்த சதுர்வேதி மங்கலம்
7) கருணகானல்லூர்
8) விராணஒற்றியூர்
9) பெரும்பழுவூர்
10) செம்பக்குடி

கல்வெட்டில் காணப்படும் இறைவனது பெயர்கள்

1) திருவாலந்துறை உடையார்
2) திருவாலந்துறை மகாதேவர்
3) ஸ்ரீ மகாதேவர்

கல்வெட்டில் உள்ள அதிகாரிகளின் பெயர்கள்

1) புரவுவரி சிகரணனாயகம் இளங்குடையான் (வரி வசூலிப்பவர்)
2) இலாடதரையன் (கல்வெட்டு எழுத்துக்களை எழுதியவர்)
3) வயநாட்டரையன் (கல்வெட்டு எழுத்துக்களை எழுதியவர்)
4) வாணகன்
5) ஸ்ரீ கௌசிக நக்கந் மாறஞ் ஸ்ரீ காரிய மாராயர்
6) அரையன் சுந்தரசோழன்
7) அரையன் வீரசோழன்
8) நிலகங்கராயர்
9) திபத்தராயர்
10) கங்கராயர்
11) நந்திபன்மர்
12) வில்லவராயர்
13) வாணாதராயர்
14) நுளம்பராயர்
கல்வெட்டில் காணப்பெறும் இறைவன் பெயர்கள்

1) திருவாலந்துறை உடையார்
2) திருவாலந்துறை மகாதேவர்
3) ஸ்ரீ மகாதேவர்
4) திரிபுவன தேவர்
கல்வெட்டில் காணப்படும் வாய்க்கால்கள்

1) மாதேவி வாயக்கால்
2) அரிஞ்சய வாய்க்கால்
3) ஆரி வாய்க்கால்

திருவாலந்துறை கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இறைவனுக்கு கொடுத்த நில தானங்கள் மற்றும் கொடைகள் பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ சிற்றரசர்களான பழுவேட்டரையர்களின் கல்வெட்டுகளும் சோழர்களின் கல்வெட்டுகளும் உள்ளன.பழுவேட்டரைய அரசரான ஸ்ரீ கண்டன் மாறன் என்பவனின் கல்வெட்டுகள் அவன் கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளது.

தபஸ்வி (சைவத்துறவி) ஒருவன் கோயிலுக் கு கொடுத்த கொடைகள் பற்றியும்,கல்வெட்டுகளை வெட்டியவன்,வரி வசூலித்தவன் பெயரும் கல்வெட்டுகளில் உள்ளன. கோயிலின் கல்வெட்டுகள் ஜகதியிலும்,சுவர்ப்பகுதியிலும்,குமுதத்திலும்,துண்டு கற்களிலும் உள்ளன. கோயிலின் கோபுரத்திற்கு அருகே சிறு கோயிலும்,அதற்கு அருகே சோழர் காலத்து உதிரி சிற்பங்களும் உள்ளன.

திருப்பழுவூர் என்கிற கீழ்ப்பழுவூர் அமைந்துள்ள வடமூலநாதர் எனப்படும் கோயில் சோழர்-பழுவேட்டரையர் கால கலைப்பொக்கிஷமாக திகழந்து வருகிறது.மேலும் பல சிக்கல்களை தீர்க்கும் பரிகார தலமாகவும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

 

Leave a Reply