தென்னிந்தியாவின் திபெத் – வேலுதரன்

கர்நாடக மாநிலத்தின் கொல்லேகாலம் அருகேயுள்ள திபெத் அகதிகளின் ஒரு குடியமர்வு (Dhondenling Tibetan Settlement) என் பார்வையில் இக்கட்டுரையில் காண்போம்.

     

சென்ற ஜனவரி மாதத்தில் இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்தில் மாண்டியா அருகே உள்ள சோழர்கள், கங்கர்கள் மற்றும் போசாளர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காணச் சென்று இருந்தோம். கல்வெட்டுக்கள், கட்டிடக்கலை இவற்றைக் காண்பதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. இரண்டு கோயில்களைத் தவிர நாங்கள் திட்டமிட்ட மற்ற கோயில்களை எல்லாம் காண முடிந்தது ஒரு மகிழ்ச்சியான விடயமே. இதில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட சமணர் கோயில், சமண பள்ளிகளின் எச்சங்கள் மற்றும் சில இதுவரை காணாத நடு கற்களும் அடங்கும்.

பெங்களூரு சாலைப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு கிருஷ்ணகிரி வழியாகச் செல்லாமல் கொல்லேகால். ஹாசனூர் வழியாக ஈரோடு தடங்கல் இல்லாமல் (மலைப் பாதையில் கவிழும் நிலையில் இருந்த ஒரு லாரி..அந்த லாரியின் பக்கத்தில் சாலையின் குறுகிய இடத்தில் காரைச் செலுத்தி தப்பி வந்தது ஒரு தனி கதை) திரும்பி விடலாம் என முடிவெடுத்தோம்.

கொல்லேகால் அருகே தான் நாம் இப்பதிவில் காணப்போகும் திபெத் அகதிகளின் முகாம் அல்லது குடிஅமர்வு உள்ளது. கடந்த இரண்டு முறை இவ்வழியே சென்றும் இந்த திபெத் அகதிகள் முகாமையும் அங்கு அவர்களின் மடாலயங்களையும் காண சந்தர்பம் கூடிவராமலே போயிற்று. இந்தத்தடவை மாலை சுமார் 5 மணிக்கெல்லாம் திபெத் அகதிகள் குடியமர்த்தப்பட்ட இடத்திற்கு முன்பு இருக்கும் உடையார்பாளையத்தை அடைந்து விட்டதால் இம்முறை கண்டிப்பாக காணவேண்டும் என்ற ஆவலே மேலோங்கி இருந்தது.

திபெத் என்ற உடனே என்னுடைய கயிலாயம் மற்றும் மானசரோவர் யாத்திரையே மனத்தில் திரைப் படம் போல ஓடிற்று. எவ்வளவு அற்புதமான பயணம் அது. நேபாளம், அங்கு கண்ட பவுத்த மடாலயங்கள், புத்தர் சிலைகள், சுவர்களில் வரையப்பட்டு இருந்த கண்கவர் ஓவியங்கள், அவை உணர்த்தும் பாடங்கள், அங்கு பவுத்தமத தத்துவங்களை கற்கும் இளம் லாமாக்கள், “ஓம் மணி பத்மே ஹும்” என்ற மந்திர வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பிரார்த்தனை கொடிகள் மற்றும் சக்கரங்கள், பின்பு விசா கிடைக்காமல் சீன நாட்டின் எல்லை ஓர நகரிலேயே மூன்று நாட்கள் தங்கி அந்த ஊரில் இருந்த பவுத்த மடாலயங்களைக் கண்டது, பவுத்தர்களில் ஒருவரது இறுதி சடங்கைக் காண நேர்ந்தது, பின்பு சீனர்களால் அமைக்கப்பட்ட போக்குவரத்து மிக மிக குறைந்த திபெத்தின் சாலைகள் வழியே பயணித்தது, வழியே கண்ட ஆள் அரவமற்ற ஒன்றிரண்டு கிராமங்களின் அமைதி, சாலை ஓரங்களில் கண்ட பவுத்த மடாலயங்களில் கட்டப்பட்டு இருந்த பிராத்தனைக் கொடிகள், இப்படி என மனத்திரையில் சுழன்று கொண்டே இருந்தது.

சார் .சார்… என்ன தூங்கிட்டீங்களா.. எழுந்திருங்க நம் காண வேண்டிய திபெத் அகதிகளின் முகாம் / குடியமர்வு இடம் வந்து விட்டது என்று என்னை நண்பர்கள் எழுப்ப, கயிலாய நினைவுகளில் இருந்து மீண்டு வர சிறிது நேரம் பிடித்தது. அகதிகள் முகாம் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது பர்மா மற்றும் இலங்கை அகதிகள் குடியமர்த்தப்பட்ட காலனிகளே. குறுகிய தெருக்கள், கூச்சல் குழப்பங்கள், அதில் கசகசவென நடமாடும் நம் தமிழ் இன மக்கள், ஒழுங்காக கட்டப்படாத வீடுகள், சூரியனும் சந்திரனும் வீட்டின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் கூரைகள் இப்படித்தானே… இல்லை .. இல்லை இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டே இருந்தது.

அந்தக் குடியமர்வு சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் 22 கிராமங்களாக, கிராமத்திற்கு இருபத்தைந்து முதல் முப்பத்து குடும்பங்கள் என. சரி இவர்கள் எல்லாம் யார்.. இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்ற வரலாற்றையும் கொஞ்சம் காண்போமா.. வாருங்கள் ஒரு 60 வருடங்கள் பின்னோக்கிப் பயணிப்போம்.

திபெத்தை சீனா அதிரடியாக 1959ல் ஆக்கிரமித்த பொழுது சுமார் 80000 ஆயிரம் திபெத்தியர்கள் தங்கள் மத குருவான தலாய் லாமாவுடன் திபெத்திலிருந்து வெளியேறி, இந்தியா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று நாடுகளிலும் 58 இடங்களில் குடியமர்த்தப்பட்டனர் இந்தியா வந்த அவர்கள் 39 இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்படி குடியமர்த்தப்பட்ட இடங்களுள் கொல்லேகாலம் அருகே டான்டென்லிங் செட்டில்மென்டும்
(Dhondenling Settlement) ஒன்று.

மொழிவாரியாக இந்தியா பிரிக்கப்படும் வரை கொல்லேகாலம் மதராஸ் மாகானத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்த குடியமர்வு அகதிகளாக இந்தியா வந்து சுமார் 19 வருடங்கள் கழித்து ஏற்படுத்தப்பட்டது. அதுவும், தொழில்ரீதியாக
(விவசாயம், கைவினைபொருட்கள் செய்தல் என) பிரிக்கப்பட்டு தென் இந்தியாவில் 5 இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். ஆரம்பத்தில் 3160 அகதிகளாக இருந்த மக்கட்தொகை 60 வருடத்திற்க்குப் பிறகு தற்போது 6000மாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கொடுக்கப்பட்ட 3000 ஏக்கர் நிலத்தில் 22 முகாம்கள் / கிராமங்களில் குடியமர்தப்பட்டனர். வீடுகள் நன்றாகவே கட்டப்பட்டு உள்ளது.

கடும் குளிருக்கு பழக்கப்பட்ட இவர்கள் வெப்பமான காட்டுப் பகுதிக்கு தங்களை மாற்றிக் கொண்டனர். ஆரம்பத்தில் வந்தவர்கள் வாழ்வின் பெரும் பகுதியை காட்டைத் திருத்தி விளை நிலங்களாக மற்றவே செலவழித்தனர். குடும்பத்தில் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படுகின்றது. ஒருவருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் நிலம் இல்லாதவருக்கு மாற்றிக் கொடுக்கப்படுகின்றது. வருடத்திற்கு 140 முதல் 170 செமீ வரை மழைப் பொழிவு இருக்கின்றது. இப்போது ராகி, நெல், சோளம் பயிர் செய்கின்றனர்.

மற்ற இடங்களில் இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம், வறட்சி, பயிர் இழப்பு போன்றவை இவர்களுக்கும் விதிவிலக்கு இல்லை. இந்திய நாட்டின் குளிர் காலங்களில் ஸ்வெட்டர் பின்னத் தெரிந்தவர்கள் அயல் மாநிலங்களுக்குச் சென்று ஸ்வெட்டர் பின்னி வியாபாரம் செய்து விட்டு ஜனவரி பிப்ரவரி மாதங்களில் விவசாயத்திற்க்குத் திரும்பி விடுகின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் உயர்நிலைப்பள்ளி வரை மட்டுமே உள்ளது. கல்லூரி செல்ல வேண்டுமானால் பெங்களூருக்கோ அல்லது சென்னைக்கோதான் செல்ல வேண்டும் என்கின்றனர்.

கும்பத்திற்கு ஒருவரை கண்டிப்பாக அயல் நாடுகளில் படிபிற்க்கோ அல்லது வேலை நிமித்தமாகவோ அனுப்புகின்றனர், தங்கள் வாரிசுகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான். ஒரு மிகவும் கட்டுப்பாடு உள்ள முகாமைப் போலன்றி திபெத் மக்கள் இயல்பு வாழ்கை வாழ்வதாகவே தெரிந்தது. ஆனாலும் தங்கள் திபெத் நாட்டிற்கே, தங்கள் உடம்பில் ஊறிவிட்ட கடுங்குளிரை எதிர்கொள்ள திரும்பச் செல்வதையே இங்குள்ளவர்கள் விரும்புவதாக கூறுகின்றனர்.

Mysore Resettlement and Development Agency (MYRADA). என்ற அமைப்பு மூலமாகவே இக்குடியமர்வு செயல்படுத்தப்பட்டது. இக்குடியமர்வில் மருத்துவமனை, கூட்டுறவு பண்டகசாலை, பள்ளிக்கூடம், முதியோர் இல்லம், 5 பவுத்த மடாலயங்கள் முதலியன உள்ளன. முதியோர் இல்லம் அதரவற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. தற்போது இல்லத்தில் 32 பேர்கள் இருக்கின்றனர். ஒருவர் இறக்கும் பட்சத்தில் அடுத்த முதியவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்கின்றனர்.
இங்கு உள்ள 5 மடாலயங்களுள் பெரியது Dzogchen monastery டிசோக்சென் மடாலயமே. 1991ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1992ஆம் வருடம் பூர்த்தியானது. மதகுரு தலாய் லாமாவின் திருக்கரங்களால் இம்மடாலயம் திறந்து வைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு 10 வருட நிறைவும் கொண்டாடப்பட்டு கல்வெட்டும் நிறுவப்பட்டு உள்ளது. மடாலயத்தின் பின்புறம் 30 பிரார்த்தனை மந்திர எழுத்துக்களுடன் கூடிய உருளைகள் நிறுவப்பட்டு உள்ளது. திபெத்தியர்கள் வரிசையாக அவைகளைச் சுற்றிவிட்டு புத்தரை வணங்கச் செல்கின்றனர்.

அவை சுற்றும் பொழுது புத்தரின் போதனைகள் காற்றில் பரவி மக்கள் மனதை சென்றடையும் என்று நம்புகின்றனர். தரைத்தளத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. தினமும் இரண்டு வேலைகள் வழிபாடு நடத்தப்படுகின்றது. மதகுரு தலாய்லாமாவிற்கு என தனி இருக்கையும் அமைக்கப்பட்டு உள்ளது. மாலை வேளைகளில் திபெத்தியர்கள் ஸ்தூபியை வலம் வருகின்றர் இந்துக்கள் நவகிரகத்தைச் சுற்றுவது போல. சுவர்களில் பவுத்தமத போதனைகள், மற்றும் கோட்பாடுகள் சித்திரங்களாக கண்களையும் மனத்தையும் கவரும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. வண்ணமிகு சித்திரங்களை பார்த்துக்கொண்டு இருந்தாலே மனம் மிகவும் அமைதி அடைவதை உணர முடிகின்றது.

நாங்கள் சென்றபோது மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை. அவர்களின் மடாலயத்திற்குள் செல்லவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ எந்தவித கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியே. பொழுது சாய்ந்து விளக்குகள் போட்ட பின்புதான் நாங்கள் இங்கு வந்து நீண்டநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தோம். பிரிய மனம் இன்றி ஈரோடை நோக்கி பயணத்தைத் துவங்கினோம்.. மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையில்,

Leave a Reply