சில மாதங்களுக்கு முன்பு சமண பௌத்த தடய தேடலை திருச்சி லால்குடி பகுதியில் பல்லபுரம் மற்றும் நகர் ஆகிய கிராமங்களில் நடத்தினோம்.
திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கணகம்பீரமாக அமர்ந்து இருக்கும், இ.வெள்ளனூர் அருகில் இருந்த புத்தரைத் தேடுகையில் அவர் களவு போன விசயம் கேள்விப்பட்டு திரும்பிவிட்டோம்.
அடுத்த நாள் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு சென்று விசாரித்து வருவோம் எனச் சென்றபொழுது, மகிழ்ச்சியான தகவல்கள் கிடைத்தது சிலை சில வருடங்களுக்கு முன்பு திருடுபோனதும், அதனைக் கண்டுபிடிக்க அல்லும் பகலும் ஓயாது முயற்சி மேற்கொள்ளப்பட்டுச் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து சீறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அவர்களது முயற்சி வீண்போகவில்லை. ஒருநாள் நாகை துறைமுகத்திலிருந்து கடத்தல் தடுப்புப் பிரிவிலிந்து ஊர்மக்களுக்குத் தகவல் வந்தது. அங்கே சென்ற அவர்கள் சிலையை அவர்களது ஊரில் இருந்துதானென உறுதி செய்யப்பட்டு, பின்னர் சட்டப்படி தங்களது ஊருக்குக் கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பாதுகாப்பாய் வைத்துள்ளனர்.
திருச்சி பகுதியில் புத்தமும், சமணமும் மகோண்ணதநிலையில் செழிப்புற்று இருந்தமைக்கு இந்தத் தடயங்களே சாட்சி.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் சமண, பௌத்தம் சிறப்புற்று விளங்கியது. இவர்களது வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பல்லவர்களும் பின்பற்றினாலும், அப்பர் நிகழ்த்திய அற்புதசெயல்களின் ஈர்ப்பால் சைவமதத்திற்கு மாறினார் மகேந்திர பல்லவர்.
“கோ எவ்வழியோ, குடியும் அவ்வழியே” எனும் சிந்தையினால் மங்கியது சமணவழிபாடு. மேலும் சைவ வைணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய தொண்டினால், சமணமும் பௌத்தமும் தென்னகத்தில் மேன்மேலும் தழைக்காமலும் கிளைகளைப் பரப்பாமலும்போயிற்று.
– இளையராஜா சிவலிங்கம்