சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு.
தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா போன்ற இடங்களிலும் வட ஆற்காடு மாவட்டத்தில் செங்கம் பகுதியிலும் சேலம் மாவட்டத்தில் குளத்தூர் பகுதியிலும் ஆங்காங்கே குடியமர்ந்து வாழ்கின்றமையினைக் காண முடிகிறது.

லம்பாடியர் எனும் இம்மலையின மக்களைப் பற்றி இன அறிமுகம், உடை, உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வழிபாட்டு முறையும் படங்குமுறைகளும், இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் எனும் நிலைகளிலும் அறியலாம்.”
பெரியார் மாவட்டத்தில் 30, 31, 3.89 – 1.4.89 ஆகிய நாள்களில் தொடர்ந்து நாயக்கர்தண்டா (40 குடிகள்) தேவலாந்தண்டா (7 குடிகள்) புருவந்தண்டா (30 குடிகள்) காலுத்தண்டா (15குடிகள்) புதுத்தண்டா (30 குடிகள்) ஆகியவற்றில் நேரடித் தகவல்கள், தரவுகள் பெற்று அதன் வழியே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
இன அறிமுகம்
திராவிட மொழிச் சொற்கள் அதிகம் கலந்துள்ள லம்பாடி மக்கள் பேசும் மொழியைக் ‘கார்போலி’ என்று கூறுகின்றனர். பெரும்பாலான மலையின மக்களிடம் விளங்குவது போலவே லம்பாடி இனத்தவர் பேசும் கார்போலிக்கு எழுத்து வடிவம் கிடையாது. தமிழக எல்லையோரங்களின் வடக்குப் பகுதியில் வாழும் லம்பாடியர் தமிழ் மொழியைப் பேசுவோராகவும் விளங்குகின்றனர். ஏனையோரிடம் பேசிப் பழகும்போது தமிழ் மொழியில் தங்கு தடையின்றிப் பேசுகின்றனர்.
மாநிறம் கொண்டவர்களாக உள்ள இம்மக்கள் ஐந்தடி யிலிருந்து ஐந்தரை அடி வரை ஆடவர்களும் நாலரை அடியிலிருந்து ஐந்து அடி வரை பெண்களும் வளர்ந்து காணப் படுகின்றனர். ஆணும், பெண்ணும் கைகளிலும், கால்களிலும் சில வேளைகளில் நெற்றியிலும் பச்சை குத்தியுள்ளனர். ஆடவர்கள் கடுக்கன் எனும் ஒருவகை அணிகலனைக் காதுகளில் குத்தியுள்ளனர். பெண்கள் காதணி, கையணி, மூக்குத்தி, கால்தண்டை, கால் விரல் மிஞ்சி, கைவிரல்களில் மோதிரம் போன்ற அணிகலன்களை அணிந்து காணப்படுகின்றனர்.
தண்டா என்பது லம்பாடியினத்தவர் குடியிருக்கும் பகுதிக்குப் பெயர் ஆகும். மரங்கள் அடர்ந்த சோலைப் பகுதியாக இவர்தம் குடியிருப்புகள் அமைந்துள்ளன. பஞ்சாயத்து செய்யுமிடமும். ‘தொலஜா’ போன்ற தெய்வங்களின் இருப்பிடமும் இவர்தம் தண்டாக்களுக்குள்ளேயே அமைந்துள்ளன.
ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் லம்பாடி மக்கள் மலை சார்ந்த வாழ்க்கையில் இருந்து விலகியுள்ளனர்.
இம்மக்கள் மலைகளில் வேட்டையாடுவதில்லை. மலையின மக்களின் உடை, உணவு போன்றவற்றில் ஏனைய பகுதிவாழ் மலையின மக்களிடமிருந்து வேறுபட்டுள்ளனர் என்றே கூறலாம். உடை, பழக்க வழக்கம் எனும் பகுதியில் இக்கூற்று அறியத் தெளிவாகும்.
உடை, உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள்
இம்மக்களின் உணவு முறை மூன்று வேளைகளில் அமைகிறது. நெல், கேழ்வரகு,சாமை,கோதுமை போன்றவற்றி லிருந்து உணவு தயாரித்து உண்கின்றனர். இவர்கள் உணவுகளில் தாங்கள் வளர்க்கும் ஆடுகள் எருமை மாடுகள் கோழி போன்ற வற்றைத் தங்கள் உணவுகளோடு கறி செய்து பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆடவரும் பெண்டிரும் சாராயம் குடிப்பதைச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பழக்கமாகக் கொள்கின்றனர். நிலக் கடலை இவர்கள் விளைவிக்கும் பயிர்களில் முக்கியமான தாகும். இவர்களின் உணவுகளில் நிலக்கடலையும் துணைப் பொருளாகப் பயன்படுகின்றது.
காதல் திருமணம் இம்மக்களிடையே இன்றளவும் நடைபெறக் காண முடிகிறது. சாதிவிட்டுத் திருமணம் செய்தல் இவர்களிடம் வழக்கத்தில் இல்லை. அவ்வாறு பிற இனத்தாரோடு பழக்க வழக்கம் கொண்டு திருமணம் செய்ய நேரின் தம் இனத்தில் இணைத்துக்கொள்வதில்லை. இவ்வழக்கம் ஏனைய மலையின மக்களிடமும் காணப்படுவதாகும்.
இம்மக்களிடையே உடன்போக்கு மணம் இன்றளவும் இருந்து வருகிறது. உடன்போக்குத் திருமணம் செய்து கொண்டாரை ஊர்ப்பஞ்சாயத்து வைத்துக்கொண்டு மீண்டும் குடும்பத்தில் இணைத்துக்கொள்கின்றனர். ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் ‘ஊர் நாயக்கன்’ என அழைக்கப்படுகிறார். ஒரு தண்டாவுக்கு ஒரு தலைவர் என நியமிக்கப்படுவது வழக்கம். இவர் வயதாலும், அனுபவத்தாலும் சிறந்தவராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவரே ஊரின் பொதுவான காரியங்களை முன்னின்று நடத்துகின்றார். இந்த வழக்கமும் ஏனைய மலையின மக்களிடையே காணப் படுகின்ற வழக்கங்களுள் ஒன்றாகும். பெரும்பாலும் ஊர்த் தலைவரே பூசாரியாக நியமிக்கப்படுவதும் உண்டு.
லம்பாடிப் பெண்கள் உடை ஒப்பனை முறை ஏனைய மலையின மக்களிடமிருந்து வேறுபட்டமுறையில் அமைகிறது. இப்பெண்கள் சீவிமுடித்த தங்களது தலை முடியில் குத்தித் தொங்க விடுமாறு அமையும் கொப்பி ஒன்றினையும், பல்லியா எனும் ஒரு கைவளையம் ஒன்றையும், சட்டிகி எனும் கால்விரலில் அணியும் மிஞ்சியினையும், கொல்லா எனும் காப்பும், செவல் எனும் தற்போதுள்ள நாலணாக் காசுகளின் கோவையான ( நவ்வாலனா) காசு மாலை போன்ற அணிகலன்களையும் அணிந்த நிலையில் காணப்படுகின்றனர்.
லம்பாடிப் பெண்கள் சட்டை அணிவதிலும் மிகுந்த கவனம் கொள்கின்றனர். பல வண்ணத் துணிகளின் இணைப்பில் இவர்கள் தாங்களாகவே சட்டைத்துணி அலங்காரம் செய்து கொள்கின்றனர். வண்ணத் துணிகளினாலே சிறு சிறு கண்ணாடித் துண்டினை வைத்துத் தைத்துச் சட்டை அணிந்துகொள்ளும் வழக்கம் எல்லாப் பகுதிகளிலும் வாழும் லம்பாடி இனப் பெண்களிடையே விளங்குகின்றது.
தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களின்போது இம்மக்களில் பெண் பாலோர் இணைந்து வந்து கைகொட்டிப் பாடி வட்டமாக நின்று ஆடுகின்றனர். வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை ஆட்டம் ஆடியும், பாட்டுப் பாடியும் சன்மானம் (காசு தானியம்) பெற்றுச் செல்கின்ற வழக்கம் இவர்களிடம் உள்ளது.
பனை ஓலை, மலைகளில் கிடைக்கும் புல், வைக்கோல் போன்றவற்றிலிருந்து தங்களின் கூரை வீடுகளை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்கின்றனர். சாமி கும்பிடுதல், திருமணம் செய்தல்,போன்றவற்றில், இம்மக்களது ‘சாங்கியங்கள்’ எனும் சடங்கு முறைகள் காணப்படுகின்றன.
தொழில் முறை
லம்பாடி இனத்தவர்கள் அணிகலன்களில் முக்கியக் கவனம் செலுத்தும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். இம்மக்கள் ஒரு காலத்தில் வளையல் வியாபாரிகளாக இருந்தனர் எனத் தங்களைக் கூறிக் கொள்கின்றனர். இசுலாமியர்க்கும் இந்துக்களுக்கும் சண்டை ஏற்பட்டு வந்த காலத்தில் மலைகளில் பிழைக்க வந்தவர்கள் என்றும் தங்களைக் கூறிக் கொள்கின்றனர். தற்போது இவர்கள் வளையல் வியாபாரம் செய்வதில்லை. எனினும் கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற பொருள்களிலிருந்து தயாரிக்கப் பட்ட வளையல்களை இன்றளவும் அணிந்துள்ளனர். காங்கிவாலா என்று தங்களைக் கூறிக்கொள்கின்றனர். காங்கிவாலா என்பது தமிழில் வளையல்காரர் என்று பொருள் கொள்கின்றனர்’. 12,000 மக்கள் தொகையைக் கொண்டு லம்பாடியர் சமூகம் தமிழகத்தில் வாழ்கிறது. 1967க்குப் பின் மலையின மக்கள் அட்டவணையில் அரசு சேர்த்து உதவவில்லை.
பெண்கள் ஒருகாலத்தில் இவ்வினத்தில் விற்கப்படும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டனர் என்று இவ்வினத்தாரில் சிலர் தகவல் கூறினர். இவ்வினப் பெண்கள் எப்போதும் கவர்ச்சிகரமாக, ஏனைய மலையின மக்களிடமிருந்து வேறுபட்டு அமையத் தங்கள் உடை, ஒப்பனைகளில் கவனம் கொள்கின்றனர்.
நாம் ஏலவே கண்டுள்ளபடி நெல், கேழ்வரகு, சோளம், சாமை,நிலக்கடலை போன்ற தானியங்களைத் தாங்களே பயிர் செய்துகொள்கின்றனர். மலைக்காடுகளை அழித்து மண்வெட்டி கொண்டு மலைச்சரிவுகளில் பாத்தி பாத்திகளாகச் செய்து வேளாண்மை செய்கின்றனர்.
தங்களுக்குப் பாத்தியப்பட்ட விளைநிலங்களில் பணம் செலவு செய்து விவசாயம் செய்திடச் சிரமம் ஏற்பட்டு வருவதால் தங்களின் விளை நிலங்களை ஏனைய இனத்தவர்களுக்கு விற்றுவிட்டு அல்லது ஒத்திக்கு வைத்துவிட்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வாழ்கின்றனர்.
வழிபாட்டு முறையும். சடங்கு முறைகளும்
இம்மக்கள்,’மத்ராள்’ எனும் பெண் தெய்வம் ஒன்று தண்டாவின் புறத்தே அமைந்திருக்கும் மரத்தடியில் கல்லால் ஆன உருவத்தில் குடியிருப்பதாக நம்பிப் போற்றுகின்றனர். ‘தொளஜா’ எனும் மற்றொரு பெண் தெய்வம் ஒரு கையில் வேலும் இன்னொரு கையில் தடியும் கொண்டு அமர்ந்திருக்கின்றது. ‘சமணக்’ எனும் ஒரு தெய்வமும் இவர்களின் வழிபாட்டுத் தெய்வங்களுள் ஒன்றாக உள்ளது. இவர்களது தெய்வங்களுக்கு இம்மக்கள் ஆடுகள், எருமை மாடுகள் ஆகியவற்றைப் பலி செய்து வழிபடுகின்றனர்.
சட்டி, பானை போன்றவற்றையும் இம்மக்கள் ஆண்டவன் படைப்புகளில் ஒன்றாகக் கருதிப் புதுச்சட்டிப் பானையையும், புதுச்சட்டிப் பானையைச் செய்யும் பூசாரியையும் வணங்குகின்றனர். சிலரது வீடுகளில் துணி, சிறு பெட்டி போன்றவற்றில் சாமிக்கான காணிக்கையை முடித்து வைத்திருக்கக் காண நேர்ந்தது. சிறிய தெய்வச்சிலையைக் கொண்ட வீட்டுச் சிறு பெட்டிகளில் உள்ள தெய்வத்துக்குப் பூசை செய்து விருந்து செய்கின்றனர்.
புலி, சிறுத்தை ஆகிய கொடிய விலங்குகளை இம்மக்கள் பெருநரி என்கின்றனர். யானையைப் பெரியசாமி என்கின்றனர். பெருநரி அடித்துக் கொல்லப்பட்டவரை ஆண்டுக்கொருமுறை நினைத்துப் பூசை செய்து வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு வழிபடுவதால் பெருநரியிடமிருந்து தாம் காப்பாற்றப்படுவோம் என்றும் நமக்காக அவன் உயிர் போனான் என்றும் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். இம்மக்களது தெய்வங்களின் இருப்பிடம் பெரும்பாலும் மரத்தடிகளிலேயே வீற்றிருக்கக் காண முடிகிறது.
மணமகன் பெண்ணுக்குத் தாலி கட்டுவது இல்லை. மாறாக முதியவர்கள் மணப்பெண்ணுக்குத் தலையில் கொப்பி எனும் அணிகலனையும், கையில் பல்லியா எனும் வளையலையும் அணிவிக்கத் திருமணம் நடைபெற்றதாக மனம் கொள்கின்றனர். சட்கி கட்டுவது, கங்கணம் அணிவிப்பது, திருமண விருந்து வைப்பது,கிடா வெட்டிப் பூசை செய்வது, கணவன் வீடு செல்வது என்பன போன்ற ஏழுவகைச் (சாங்கியங்கள்) சடங்குகள் இம்மக்க ளிடையே திருமணச் சடங்குகளாக நிறைவேற்றப்படுகின்றன.
ஊர்ப் பொது விழாக்களில் ‘தொளஜா’ சாமிக்குச் சர்க்கரைப் பொங்கல் வைத்து ஆட்டுக்கிடா வெட்டிப் பூசை செய்கின்றனர். கக்காளி எனும் ஒருவகைப் பெண் தெய்வத்திற்கு எருமைக்கிடா பூசை செய்து சடங்கு நிறைவேற்றுகின்றனர். பெருமாள் எனும் ஆண்தெய்வத்திற்குப் பச்சரிசிப் பொங்கல் வைத்து விடுகின்றனர். சாமிக்குப் பூசை செய்யும்போது சில ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் சாமி ஆட்டம் வருவதுண்டு.சாமி ஆட்டம் ஆடும்போது பிறர் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கம் ஆகும். லம்பாடியர் இனத்தில் பெண் தெய்வங்களே எண்ணிறைந்து உள்ளன.
நகார், கிண்ணி எனும் இருவகையான இசைக்கருவிகள் இவர்களது நல்ல மற்றும் துக்க நிகழ்வுச் சடங்குகளில் வாசிக்கப்படுகின்றன. நகார் என்பது ‘நகரா’ வாகும். ஒருபுற முழவு வகையைச் சேர்ந்ததாகும். தோலிசைக் கருவியான இதில் இருகுச்சிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.
கிண்ணி என்பது உலோகத்தாலான வட்டத்தட்டாகும். இது ஒரு குச்சி (மரக்கட்டை) அல்லது ஓர் உலோகக் கம்பியால் இயக்கப்படுவதாகும். இவர்களின் அனைத்துச் சடங்குகளிலும் இந்த வகை இசைக்கருவிகள் இடம்பெறுவது இயல்பாகும்.
பெண்கள் திருமணச் சடங்குகளின் போது அவரது மொழியில் பாடல் பாடிக்கொண்டு ஆடுவர். திருவிழாக்களில் சாமிக்குப் பூசை செய்து வழிபடும்போது பெண்கள் தங்கள் இருகைகளையும் உயரே தூக்கியவாறும், பக்கவாட்டுகளில் அசைத்தவாறும் சில நேரங்களில் தலையில் பானையை வைத்தவாறும் ஆட்டம் ஆடிச்சடங்கு நிறைவேற்றுவது வழக்கம்.
இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள்
குருவந்தண்டாவில் கணேசர் என்பவர் லம்பாடியர் இன மக்கள் சங்கம் வைத்து அதன் செயலராக உள்ளார். நான்கு பேர்கள் இந்த ஊரில் பட்டதாரிகளாக விளங்குகின்றனர். ஒருவர் காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். சில தண்டாக்களில் மெத்தை வீடுகள் கட்டியுள்ளனர். வேளாண்மையில் சிலர் கவனம் கொண்டுள்ளனர். சில பகுதிகளில் எருமைக் கிடா வெட்டுதல் குறைந்து வரக் காணமுடிகிறது. சில தண்டாக்களில் இன்று ‘பொட்டுத்தாலி’ ஒன்றினைக் கணவர், தாலியாகப் பெண்ணுக்குக் கட்டுகின்றார். விழாக்களின் போது ஆட்டம் ஆடிச் சன்மானம் பெறுவதையும் மதிப்புக் குறைவாக எண்ணிச் செல்லாதிருக்கக் கூட்டம் போட்டுப் பேசுகின்றனர்.” அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். முன்னேற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
1.தொளஜா, மத்ராள் போன்ற பெண் தெய்வங்கள் இம்மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவையாகும்.
- சாராயம் குடிக்கும் பழக்கம் இம்மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது.
- உடன்போக்குத் திருமணம் இம்மக்களிடையே இன்றளவும் உள்ளது.
- பெண்களின் உடை – ஒப்பனை வண்ணத்துணிகளால் பார்வைக்கு உரியதாக அமைகிறது.
5.5. வளையல் வியாபாரிகளாக இருந்ததாகச் சொல்லப்படும் இம்மக்கள் இன்று விவசாயத்துறையில் கவனம் கொண்டுள்ளனர்.
6.சாமி வழிபாடு,திருமணம் போன்றவற்றில் மட்டுமே இம்மக்களது சடங்குகள் குறிப்பிடும்படியாக அமைகின்றன.
- மணமகன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவதில்லை. மாறாக, முதியவர்கள் சில ஆபரணங்கள் மணப் பெண்ணுக்கு அணிவிக்கத் திருமணம் முடிந்ததாகக் கருதப்படுகிறது.
- அரசு கடன் வழங்கியும், கல்வி உதவி அளித்தும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முன்வர வேண்டும். லம்பாடி இனமக்களில் சில பகுதிகளில் வாழ்வோரை மலையின மக்கள் பட்டியலில் சேர்க்காமல் உதவியை மறுத்து வருகிறது. முன்னேற முயலும் இம்மக்களுக்கு அரசின் உதவி இன்னும் கொஞ்ச காலம் அவசிய மாகிறது.
தமிழக மலையின மக்கள் – டாக்டர் கே.ஏ.குணசேகரன்.
வெளியீடு: NCBHB
Buy: https://heritager.in/product/thamizhaga-malaiyina-makkal/