விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற பதவியும்

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சடங்குகளும்.

உணவும் மன்னர்களும்

மன்னர்கள் காலத்தில் யார் எது கொடுத்தாலும் மன்னர் வாங்கி உண்டுவிட முடியது. மன்னர்கள் காலத்தில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உண்ணும் உணவில் பல கட்டுப்பாடுகள் உண்டு. இன்றும், Fugu என்ற விஷத்தன்மையுள்ள ஒரு மீன்வகை உள்ளது. அதனை எல்லா ஜப்பானியரும் உண்ணலாம், ஆனால் ஜப்பான் நாட்டின் மன்னர் அதனை உண்ண தடை உள்ளது.

மன்னரை விஷம் வைத்துக் கொல்ல சதிசெய்வது அக்காலத்தில் வழக்கமான ஒன்றாகும். ஆங்கிலேயர் காலத்தில் இதற்கென்றே ஒரு அலுவலர் இருப்பார், அதற்கு Food taster என்று பெயர், Praegustator என்று பண்டைய ரோமாபுரியிலும் வழங்கப்பட்டனர். இவர் உணவை உண்டு சோதித்த பிறகே மன்னர் அந்த உணவினை உண்ண இயலும். எனவே, அரசருக்கு நேரடியாக வெற்றிலை மடித்து உண்ணக் கொடுக்கும் பணி எவ்வளவு நம்பிக்கை உள்ள பணியாக இருக்கும்.

தாம்பூலமும் அரசர்களும்

இறைவனுக்கு தாம்பூலம் அளிப்பதும், திருமணம் போன்ற மங்கள காரியங்களில் வெற்றிலை தாம்பூலம் வைப்பது அதனை ஒரு முறையாகவே பண்டை காலம் தொட்டு உள்ளது..

“தெலிகி” என்ற வணிகக் குழுவினரின் திருமணத்தின் போது, திருமண நிறைவு நிகழ்ச்சியாக அரசரின் பாதங்களில் விழுந்து அளிக்கும் தாம்பூல ஷ்ராவண என்ற முறை ஒன்று இருந்தது. அந்த உரிமையை குலோத்துங்க சோழரின் மகனான ராஜராஜ சோடகங்கா காலத்தில், மீண்டும் பெற்றனர் என ஒரு கல்வெட்டு ஆவணம் கூறுகிறது. அரசருக்குத் தாம்பூலம் கொடுக்கும் நிகழ்வு அரசருக்கும், அதனைச் செய்யும் நபருக்கும் உள்ள நெருங்கிய உறவினை, அவர்களின் சமூக அந்தஸ்தினை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் சடங்காக அந்நிகழ்வு கருதப்படுகிறது.

ஒரு அரசருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் (சமஸ்கிருதம் பீடகா – தமிழ் – வெற்றிலைச்சுருள்) வழக்கம் என்பது சடங்கு முறையில் அமைந்த பதவி ஆகும். இதற்கு அடப்பம் என்று பெயர். அடப்பம் என்பதற்கு வெற்றிலை பை அல்லது பெட்டி என்பது பொருள். அடப்பம் என்பது வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு, பாக்கு இடிக்கும் கருவி மற்றும் மேலும் சில கருவிகளைக் கொண்டுள்ள பை ஆகும். இந்த தாம்பூலத்தில் உயர்ந்த வெற்றிலை, பாக்கு, கிளிஞ்சில் சுண்ணாம்பு, வாசனை பொருட்கள், கற்பூரம் போன்றவை இடப்பட்டன. இந்த அடப்பம் என்போர் “வாசல்” என்ற பதவியையும் வகித்தனர். அதாவது அரசனின் அருகில் இருக்கும் அரச மெய்க் காவல் (King’s Gaurd), நிர்வாக தனி உதவியாளர் என்ற நம்பிக்கைக்கு உரிய பதவியை வகிப்போர். இந்த பதவி பெரும்பாலும் நெருங்கிய உறவினருக்கும், அரசியலில் பெரும் நம்பிக்கைக்கு உரியவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

கல்யாணி சாளுக்கியர் அவையில் (C.E 970–1200), பேரரசருக்குச் சிறு அரசுகள் வெற்றிலை மடித்துக் கொடுப்பதை நட்பினையும், உறவையும் உறுதிப்படுத்தும் சடங்காகக் கருதப்பட்டது. இது பதினேழாம் நூற்றாண்டு வரை பின்பற்றி வந்த சடங்காகக் கருதப்பட்டது. இது பெரும்பாலும் நாட்டில் உள்ள அரசுகள் ஆட்சியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகள், நடைமுறைகளை. பொறுப்புகளை ஒப்பந்தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் சடங்காகும். எடுத்துக்காட்டாக, திருமணத்தின் போது தாம்பூலம் வைத்து கொடுப்பது, இருவீட்டாரும் திருமணம் என்ற ஒப்பதந்ததை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை குறிக்கும்

வாராங்கல்லை சேர்ந்த சாளுக்கியருக்கு முற்பட்ட மிகவும் பழைய கல்வெட்டு ஒன்று, நில குத்தகை விட்டதை, சமண முனிவர்களுக்கு முன்பாக வெற்றிலை பாக்கு கொடுத்து உறுதிப்படுத்திக் கொண்டதையும், (தாம்பூலஷ்ராவனம்), பத்தாம் நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டு காமுண்டர் ஒருவர்க்கு நில எல்லையை வெற்றிலை பாக்கு கொடுத்து உறுதிப்படுத்திக்கொண்டதையும் கூறுகிறது.

இந்த வெற்றிலை பாக்கு வழங்குவோரை தாம்பூலதாயகா (வெற்றிலை மடித்துத் தருவோர்) tāmbūladāyaka (‘giver of betel’), தாம்பூல வாஹின் tāmbūlavāhin (வெற்றிலையைச் சுமப்போர்) (‘bearer of the betel’), தாம்பூலிகா tāmbūlika (‘betel-oiciant’) தாம்பூலக்காரன் and தாம்பூலகரண்காவாஹின் வெற்றிலை பெட்டி சுமப்போர் tāmbūlakaraṅkavāhin (‘bearer of the betel box’) என ஆவணங்கள் கூறுகின்றது. அய்யா பொழில் ஐந்நூற்றுவர் குழுவில் தாம்பூலிகா அல்லது தாம்பூலிகா செட்டிகள் என்ற வணிகர்கள் வெற்றிலை பாக்கு வணிகத்தை சாளுக்கியர் காலத்தில் மேற்கொண்டனர்.

சாளுக்கியர் காலத்தில் தாம்பூலம்

சாளுக்கிய அரசன் சொமேச்வரன் மனதைக் குதுகலிக்கும் நடைமுறைகளைத் தொகுத்து “மானசொல்லாச” என்ற நூலில், தாம்பூலம் மெல்லுவதை உபபோக/உத்தமபோகம் உயர்ந்த மகிழ் உணர்வினை தரும் நிகழ்வு என்பதை கூறுகிறது. அரச அவையில் வெற்றிலை மடித்து தரும் பழக்கத்தை, ஆஸ்தான போகம் என அழைக்கின்றது. அரசருக்கு அருகில் வாள் வைத்துக்கொண்டு எப்போதும் இருக்கும் வீரருடன், தாம்புலதாரின் என்ற வெற்றிலை பாக்கு மடித்துத் தரும் நபர் எப்போதும் இருந்துள்ளனர். ஒருவருக்கும் மேற்பட்ட அடப்பக்காரர் அந்த அரசவையில் இருந்துள்ளனர். அரசருக்கு வெற்றிலை மடித்துத் தரும் சடங்கினை, கோவிலில் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் அளிக்கும் நிகழ்வுடன் ஒப்பிடுகின்றனர். அரசவையில் கூடும் எல்லா இளவரசர்கள, முக்கிய அரசு நிர்வாகிகளுக்கு அரச பிரசாதமாக இந்த வெற்றிலை பாக்கு “அரச பிரசாதமாக” தரப்படுகிறது.

மானசொல்லாச இந்த வெற்றிலை பாக்கு தாம்பூல சடங்கு செய்யும் அதிகாரியை பிரதிஹார, (வாசல் – Kings Gaurd) எனக் குறிப்பிடுகிறது. இவரின் வேலை வெறும் வெற்றிலை மடித்துக் கொடுப்பது மட்டும் மல்ல, ராஜசபையை வழிநடத்துவதும், அரசவையில் அதிகாரம் மற்றும் பதவியைப் பொருத்து யார் எங்கு உட்காரவேண்டும், அரசவை சார்ந்த விஷயங்களை முன்னின்று ஏற்பாடுகள் செய்யும் (இன்றைய மந்திரியின் உதவியாளர்) அதிகாரியாகவும், அரசருக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்குவோராகவும், “இந்த தாம்பூலம் வழங்குவோர்” இருந்துள்ளார். அதாவது, அரசவை சடங்குகளின் போது அதன் நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் கௌரவ அதிகாரியாகக் கருதப்படுகிறார்.

சாளுக்கியர் காலத்தில், மன்னருக்குப் படை உதவி தேவைப்படும் போது படையை திரட்டிக் கொண்டு வரும் தண்டயக்கருக்கு ஹடப்பாவாலா என்ற பெயருள்ளது. இதனைக் கிட்டத்தட்டத் தோழன் என்ற ரீதியில் வழங்கப்படும் பட்டமாகும். சாளுக்கியரிடமிருந்தே இந்த அடப்பம் என்ற முறை தென்னகம் முழுவதும் பரவியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். குறுநில ஆட்சியாளர்களுக்கு தாம்பூலம் அளிக்கும் சடங்கு சாளுக்கியரிடமிருந்து தென்னகத்துக்கு பரவிய சடங்கு முறையாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

வரலாற்றில் அடப்பம் என்ற சொல்

ஆய்வறிஞர் தாவுத் அலி, கொங்கன் அரசன் (C.E 988) சீலஹரவின் அவையின் வணிகர்கள் மூன்று லட்சம் வெற்றிலை பாக்கு கொட்டைகளை ஹடப்பம் நிகழ்வுக்குத் தானமாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. இங்கு தான் முதன் முதலில் திராவிட வார்த்தையான ஹடப்பம் (கன்னடம்) (தமிழில் அடப்பம்) வருகிறது. கல்வெட்டுகளில் ஹடப்பவாளா, ஹடப்படா, ஹடப்பம்மு என பல கன்னட கல்வெட்டுகளில் வருகின்றது. பட்டான்குடி செப்புபட்டயம் ஹடப்பம் என்ற முறைக்கு தனி அலுவலகமே இருந்ததை குறிப்பிடுகிறது.

தஞ்சை, மதுரை, செஞ்சி நாயக்கர்கள் அனைவரும் பேரரசில் அடப்பம் பதவியிலிருந்தனர். அடப்பம் என்ற பதவி சடங்கு ரீதியாக அமைந்த பதவியாகவும், கௌரவ பதவியாகவும் இருந்தாலும், ஆய்வாளர்கள் இதனை ஒரு தற்காலிக பதவியாகக் கருதினர். நாயக்கர்கள், விஜயநகர அரசில் அடப்பமாகச் சிலகாலம் திகழ்ந்துவிட்டு, நாயக்க தானம் அளிக்கப்பட்டு பேரரசின் பல பகுதிகளுக்கு விஜயநகர பேரரசின் நாயக்கர் என்ற வாசல்களாக (பிரதிநிதி) பதவியில் அமர்த்தப்பட்டனர்.

தஞ்சை நாயக்க அரசுகளைக் குறிப்பிடும்போது, தஞ்சை நாயக்கர்கள் வெறும் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் தொழிலைச் செய்தவர்கள் என்றும். அவர்களுக்கு நாயக்க பதவி கொடுத்தனர் என்று வரலாற்றைப் பிழையாகக் கூறுவதுண்டு. ஆனால், இந்த வெற்றிலை மடித்து கொடுப்பது எவ்வளவு முக்கியமான ஒன்றாக விஜயநகரப் பேரரசில் கருதப்பட்டது என்பதை ஆழமாகக் ஆய்வு செய்யவேண்டும்.

விஜயநகர் அரசர் அச்சுத தேவ ராயாவுக்கு இவ்வாறன வாசல், மற்றும் அடைப்பமாக அலுவல் செய்தவர், அவரின் சகலையும், பின்னாளில் தஞ்சை நாயக்கராக நியமிக்கப்பட்ட செவ்வப்ப நாயக்கர் ஆவார். இவர் சென்னை நெடுகுன்றத்தை பூர்வீகமாகக் கொண்ட நாயக்கர். இவர் ராய்ச்சூர் போரில் தளவாயாகப் படையை வழி நடத்தியவர். போருக்குப் பின், இவரின் மனைவியும், விஜயநகர அரசியுமான திருமலாம்பாவின் தங்கையான மூர்த்தியம்பாவை இவருக்கு மணமுடித்துக் கொடுத்துள்ளனர்.

நெருங்கிய உறவினரும், அரசியல் மற்றும் போர் காரியங்களில் முன்னின்று நடத்திய நம்பிக்கைக்கு உரிய செவ்வப்ப நாயக்கரை நம்பிக்கைக்கு உரியவர் என்பதை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாகக் கொடுத்த பதவியை இந்த அடைப்பம் (betel-bearer) என்றும், இந்த பதவியை வகித்தோர் அடைப்பைக்காரன் என்றும் அழைக்கப்பட்டனர். விஜயநகர் காலத்தில் மன்னருக்கு நேரடியாக வெற்றிலை மடித்துக் கொடுக்கும் நபர் எந்த அளவுக்கு நம்பிக்கையான நெருங்கிய நபராக இருக்க வேண்டும்.

யாதவ ராயர் ராமச்சந்திரன் காலத்தில் போருக்குச் செல்லும் முன்பு விருந்து அளித்து, அரசரின் கையால் தாம்பூலம் பெறுவது நாயக்கர்களையும், படைத் தளபதிகளையும் வீரநிலை அடைவதற்குத் தயாராக இருங்கள் எனக் கூறும் நிகழ்வாகவும், ராஜ நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நிகழ்வாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பெற்ற ஒருவர் வீரமரணம் அடைந்ததை ஒரு நடுகல் கல்வெட்டு கூறுகின்றது.

இறுதியாக,

தமிழக நாயக்கர்கள் வரலாற்றை பிழையாகக் கூறுவோர், தஞ்சை நாயக்கர்கள் வெறும் வெற்றிலை மடித்துக்கொடுக்கும் அடப்பம் பணியில் இருந்தோர் எனக்கூறுவர். அவர்களுக்கு திருமண வரதட்சைனயாக “ஸ்ரிதானமாக” தஞ்சைபதி அளிக்கப்பட்டது என்று கூறுவார். இவர்கள் வரதட்சணை எனக் கூறுவருவது “நாயக்க தானம்” என்பது ஆகும். *தஞ்சாவூரி சரிதம்‌”, *தஞ்சாவூரி ஆந்திர ராஜீய சரிதம்‌’* ஆகிய தெலுங்கு நூல்கள்‌, சேவப்பதாயக்கர்‌, பேரரசிடமிருந்து, தஞ்சையைத்‌ தனது மனைவியின்‌ தனமாகப்‌ பெற்றார்‌ என்று கூறுகின்றன. ஆனால்‌ மற்றொரு நூலாகிய “*சாகித்யரத்னகாரா?” சேவப்பநாயக்கர்‌ தஞ்சையைப்‌ படைவலிமை கொண்டு பெற்றார்‌ என்று கூறுகின்றது. நாயக்கதனம் (நயங்கரம்) என்பது, ஒரு பகுதியை படை வைத்து ஆளும் உரிமையை ஒருவருக்கு அளிப்பது. அதற்கு வருடம் தோறும் விஜயநகர பேரரசுக்கு கப்பமும், தேவைப்படுபோது படையுதவியும் அளிக்க வேண்டும். அப்படி நயங்கரம் எனும் நாயக்கதனம் பெற்றவரே, “நாயக்கர்” என்ற பட்டத்துடன் ஆளுகின்றனர். இது விஜயநகர பேரரசில் இருந்த எல்லா நாயக்கர்களுக்கும் வழங்கப்படும் பெயர் ஆகும்.

மதுரை நாயக்கரான விஸ்வநாத நாயக்கரும் சிறு வயதில் கிருஷ்ணதேவராயருக்கு அடப்பமாக இருந்து அவரின் நன்மதிப்பை பெற்றதாக மதுரை நாயக்க வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறனர்.

எனவே, அடப்பம் என்பது அரசருக்கு வெற்றிலை மடித்து தருவது ஒரு சடங்கு ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு முறை. நாயக்கர்களாக நியமிக்கப்படவுள்ளவர்கள், அரசருக்கு வெற்றிலை மட்டித்து தருவதன் மூலம் தங்களது ராஜநாம்பிக்கையை, உறவினை வெளிப்படுத்தவும், அரசனுக்கு அண்மையில் நின்று ஆலோசனை சொல்லும் படிநிலையில் உள்ளதை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட கௌரவப் பதவி ஆகும். பணி ரீதியாக நிரந்தரமாக இப்பதவியில் யாரும் இல்லை என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல் ஆகும். இப்பதவி மூலம் ராஜாங்க காரியத்தில் இளம் நாயக்கர்களின் திறன், மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை விஜயநகர அரசர்கள் கூட இருந்து நேரடியாக அறிவதற்கும், எதிர்கால ராஜபிரதிநியாக நியமிக்கப்பட இருந்த நாயக்கர்கள் தங்களின் ராஜ நம்பிக்கையை பெற இப்பதவி உதவியாக இருந்துள்ளது எனலாம்.

சிங்கள அரசவையில் அரசனின் மெய்க்காப்பாளர் “அடபட்டு” (Vangaurd) என்று அழைக்கப்படுகின்றனர். இது, விஜயநகர ஆட்சியில் “அடப்பம்” என்ற மெய்க்காவல், தனி ஆலோசகர், வாசல் அரசனின் பிரதிநிதி என்ற பதவியுடன் பெயரளவிலும், செயல் அளவிலும் இது ஒத்துப்போகின்றது. இவர்களின் தலைவர் “அடபட்டுவே நிலமே” எனப்படுகிறார். சிங்கள தொழில் ஜாதிபட்டம் அமைப்பில் இது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவர்களின் சேவைக்காக நிலம் ஒதுக்கப்பட்டு, அதற்கு வரி நீக்கி அளிக்கப்பட்டிருந்தது.
சிங்கள அரசனின் தனி சேவையாளர்களையும், தனி வருவாயையும் நிர்வகித்த அதிகாரிகள், “டக்கன்னா” எனப்பட்டனர். நிலம், கால்நடை, வணிகம் போன்றவற்றில் குறிப்பாக நில வருவாயை நிருவாகம் செய்து வரி வசூலிப்பது, அரசருக்கான தனிப்பட்ட அரச சேவையை மேற்பார்வை செய்து, அதனை சரியாக செய்யாதவர்களை இவர்கள் தண்டிக்கவும் செய்தனர். இந்த பதவியை தென்னகப் பகுதியில் அடப்பம் மேற்கொண்டனர்.