அண்மைக்காலமாக திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், புனையப்பட்ட கற்பனைச் செய்திகளின் அடிப்படையில் கட்டுரைகளாக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு மாறாக, கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் உள்ளன. அவற்றின் தொகுப்பு இந்நூல்.
ஏராளமான படங்களுடன் கூடிய இந்தத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிற சில தகவல்கள்:
ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமானின் மகள் என்பது; இந்தத் தகவல் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலிலுள்ள எண்பது கல்வெட்டுகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டதாகும். மேலும் கபிலர் வரலாறு – பாரி மகளை மலையமான் மணந்து கொண்டது உள்ளிட்டவையும் – கபிலர் தன்பணி முடிந்ததும் – “கபிலக்கல்’ என்னும் பாறையில் தீ மூட்டி உயிர் துறந்ததும் இக்கல்வெட்டில் உள்ளது.
இக்கல்வெட்டை ராஜராஜனின் மூத்த அதிகாரி மகிமாலய மூவேந்த வேளான் என்பவர் பதிப்பித்திருக்கிறார்.
தவிர திருவாரூரை அடுத்த, “சித்தாய்மூர்’ கோயில் கல்வெட்டில் ஜாதிப்பாகுபாடு இன்றி, களத்து மேட்டில் கூலிப் பிச்சை என்று இடுகிற நெல்லை குயவரும் (வேளார்), கோயில் பூசாரியும் எடுத்துக் கொண்டு, தங்களது பங்காக ஐயனார் கோயில் புரவியெடுப்புக்கு பயன்படுத்திய தகவலும் அரிதானதே.
சிதம்பரம் திருக்கோயில், திருவண்ணாமலை திருக்கோயிலிலுள்ள கோபுரங்கள், கோனேரி ராஜபுரம் கோயில் ஆகியவற்றை எழுப்பிய மன்னர்களது சிற்பத்துடன் சிற்பிகளின் சிற்பங்களும் வடிக்கப்பட்டதும் ஆச்சரியத்தைத் தருகிறது.
திருவாரூர் – தாராசுரம் – பட்டீஸ்வரம் உள்ளிட்ட 28 கோயில்களின் சிற்பங்களையும், கல்வெட்டு சாசனங்களையும் விரித்துரைக்கும் இந்நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன.