தாமிரபரணி கரை தொடும் கிராமத்தில் பிறந்தவர். நெல்லை மண்ணையும், தாமிரபரணியையும் சுவாசமாக நேசித்து வருபவர். நெல்லை தமிழ்முரசில் ‘நதிக்கரையோரத்து அற்புதங்கள்’ எனும் தொடரை 5 வருடங்களாகத் தொடர்ந்து எழுதி, அதை ‘தலைத் தாமிரபரணி’ எனும் 1000ம் பக்க நூலாகப் படைத்தவர்.
ஆரம்பகாலத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றிய இவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சொந்தமாக புகைப்பட ஸ்டுடியோ நடத்திவருகிறார். தினகரன் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
நாவல், சிறுகதை, ஆன்மிகம், வானொலி நாடகம், வரலாறு, சினிமா, சின்னத்திரை என பல தளங்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் பலமுறை யாத்திரை மேற்கொண்டவர். ‘சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை’ எனும் இவரது நூல் மிக பிரபலம். ‘அத்ரி மலை யாத்திரை’ தினகரன் ஆன்மிக மலரில் தொடராக வந்து, சூரியன் பதிப்பகம் மூலமாக நூலாக வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்துவருகிறது.
நூல் குறிப்பு: ஜமீன்தார்கள் என்றாலே அவர்களுடைய ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகார தொனியும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததை அவர்களுடைய ஆன்மிக நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. தாம் பாரம்பரியமாக வழிபடும் கோயில்கள் மட்டுமல்லாமல், பிற கோயில்களுக்கும் நன்கொடைகள், புனரமைப்பு என்று பல சேவைகளை ஆற்றியிருக்கிறார்கள். இப்போதும் ஜமீன்தார்களின் வாரிசுகள் தம் முன்னோர்களின் அடிச்சுவட்டில் ஆன்மிகப் பணியைச் சற்றும் தொய்வில்லாமல் மேற்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறப்பை விளக்குவதுதான் இந்தப் புத்தகம். கோயில்களில் முதல் மரியாதையை ஏற்கும் இந்த ஜமீன்தார்கள் அதற்கான தகுதி படைத்தவர்கள், அந்த அளவுக்கு இறைப்பணி ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் இழையோட்டமாக உணரமுடியும்..