உலகில் நிலப்பரப்பினை விட நீர்ப்பரப்பே அதிகம். மனித சமூகம் இவ்விரண்டினையுமே தம் பொருளியல் வாழ்விற்காக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. வணிகம், வரலாறு நெடுக மனிதசமூகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கட்டுரை வணிகத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவினையே பேசுகிறது. புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகள் வணிகம் மூலமாகவே எளிய மக்களுக்கும் கிடைக்கிறது.
நவீன காலத்திற்கு முன்புவரை வணிகம் நிலத்தின் வழியேயும் கடல் வழியேயும் நிகழ்த்தப்பட்டது.
நிலத்தினைத் தனக்கான வாழ்களமாகப் பயன்படுத்திய மனிதன், கடல் பரப்பினையும் தனக்கான வாழ்வாதாரமாகக் கொண்டான். தொடக்கத்தில் மீன்பிடி களமாகப் பயன்பட்ட கடல்பரப்பு வணிகத்தளத்திற்கும் வழிவிட்டது. நவீன காலத்திற்கு முன்புவரை கடல் வணிகம் மத்தியத்தரைக்கடல் முதல் தென்சீனக்கடல் வரைக்கும் நீண்டிருந்தது. பருவகாலங்களில் மாறிவரும் காற்றின் திசைகளுக்கு ஏற்ப கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வரலாற்றில் வணிகமும் சமயமும் அரசும் சாதிகளும் பிணைந்துள்ளன.
வணிகத்தின் மூலம் கிடைத்தற்கரிய பொருள்களைப் பெறமுடிந்தது. பொருளாதார உயர்வு, சமயப் பரவல்கள் போன்ற பல வரலாற்றுத் தகவல்களை இந்நூல் நமக்குத் தருகிறது.