இந்த நூல் தமிழகத்தில் விஜயநகர நாயக்கர், தஞ்சாவூர் மராத்திய ஆட்சியாளர்கள், ஆற்காடு நவாப் மற்றும் பாளையக்காரர்களின் படைகள், படையில் இருந்த போர்வீரர்கள் மற்றும் போர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது. ஆங்கில – பிரெஞ்சிய அதிகார ஆதிக்கப் போர்களில் தமிழகப் படைவீரர்கள், சிப்பாய்கள், ஏவலர்கள், பணியாளர்கள், ஜமேதார்கள், சர்தார்கள் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு, எவ்வாறு காலனிய அரசின் இராணுவம் உருவானது பற்றி விளக்குகிறது. இராணுவத் தொழிலாளர் சந்தை, ஐரோப்பியர் படையில் இருந்த உள்ளூர்வாசிகளின் சமூக வாழ்க்கை பற்றியும் விளக்குகிறது. பல்வேறு படையெழுச்சிகள், முகாம்கள், முற்றுகைகள், போர்கள், பூசல்கள், எண்ணிலடங்கா உள்ளூர்க்கார வீரர்களின் மரணம் குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது. போரினால் மக்கள் பட்ட இன்னல்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
பள்ளர்கள் படைவீரர்களாகவும், பறையர்கள் முரசு அடிப்பவர்களாகவும் காலாட்படை பிரிவில் சேர்க்கப்பட்டதையும், போர்ப்பிரிவின் கீழ் இருந்த குதிரைப்படை, பீரங்கிப்படை, துப்பாக்கிப்பிரிவு குறித்தும், வெடிமருந்து கிடங்கு செயல்பட்டது, தேவையான போர்த்தளவாடங்கள், கைத்துப்பாக்கிகள் ஐரோப்பியர்கள் இறக்குமதி செய்தது குறித்தும் எழுதப்பட்டுள்ளது. இராணுவ சேவைகளில் ஐரோப்பிய வீரர்களுக்கும் உள்ளூர் வீரர்களுக்கும் அளிக்கப்பட்ட சம்பளம், பாரபட்ச கொள்கைகளை சுட்டிக்காட்டுகிறது. 1757ஆம் ஆண்டு வங்காளத்தில் நடைபெற்ற பிளாசிப் போரில் சண்டையிட சென்னைப் படைவீரர்கள் அனுப்பப்பட்டது, 1762ஆம் ஆண்டு மணிலாவிற்கு சென்னை போர்வீரர்கள் சென்றது, 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சி, அதன் காரணம், நடைபெற்ற விதம், கிளர்ச்சி செய்த உள்ளூர் சிப்பாய்களின் சுபாவம், அதன் தாக்கம், 1857ல் சென்னைப் படைவீரர்கள் வங்காளத்திற்குச் சென்று சண்டையிட மறுத்தது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. காலனியப் போர்கள் தமிழக சமூகத்திற்கு பேரழிவையும் துயரத்தையும் விளைவித்து உள்ளதையும், ஐரோப்பிய காலனிய ஆட்சிக்கு வித்திட்டது, பேரரசை விரிவடையச் செய்ததுபற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
முன் அட்டைப்படம்: கடலூர் போர்க்களம், 13-06-1783 (பிரித்தானிய நூலகம் லண்டன்)