பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒருநாள். ஒடிசாவின் கருப்புக் கண்மணி ஜெகந்நாதரின் தேரோட்டத் திருவிழாவிற்காகப் பூரியே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது.
திருவிழாவைக் காண்பதற்காகப் பூரி மன்னரின் மனங்கவர்ந்த காஞ்சி இளவரசி பத்மாவதியும், மன்னரும் வந்திருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் இடையே வணிகம், கலை, கலாச்சாரத் தொடர்பு கடல் வழியாக இருந்திருக்கிறது. அடுத்து திருமணமும் நடக்கவிருக்கிறது என்பதால் ஊரே கலகலப்பாக இருந்தது.
காஞ்சி மன்னரும், இளவரசியும் தமிழ் நாட்டுக் கோபுரங்களிலிருந்து மாறுபட்டு, குறுகலாக, கருவறையின் மேல் எழுப்பப் பெற்றிருந்த உயரமான விமானத்தையும், சதுரமாக, பிரமிடு வடிவக் கோபுரங்களுடன் கட்டப் பட்டிருந்த முக மண்டபம், பிரசாதங்கள் சமர்ப்பிக்கப் படும் போக மண்டபம், நடன மண்டபம் ஆகியவற்றைப் பார்த்து வியந்து கொண்டிருந்தார்கள். சற்றே செந்நிற, மெதுவகை மணற் கற்களால் கட்டப் பட்டிருந்த அவற்றின் வடிவமைப்பையும், வெளிப்புறம் ஒரு இடம் கூட விடாமல் செதுக்கப் பட்டிருந்த சிற்பங்களும் கவின்கலை நிறைந்த காஞ்சியிலிருந்து வந்தவர்களையே கிறங்கடித்துக் கொண்டிருந்தன.
கோயிலின் முன்பிருந்த பரந்த வீதியில் புதிதாகச் செய்யப்பட்ட மூன்று பெரிய தேர்கள் நின்று கொண்டிருந்தன. பெரிய மரச்சக்கரங்கள் மேல் சதுரமான மர மேடை. அதன் மேல் ஒடிசாவின் கோபுரங்கள் போலவே, தேரின் மேற் பகுதியும் உயரமாக இருந்தது. கண்ணைப் பறிக்கும் பல வண்ணத் துணிகளால் அலங்காரம்.
திருக்கோயிலின் மூலமூர்த்திகளான வெண்ணிற பலராமர், மஞ்சள் நிற சுபத்திரை, கருநிற ஜெகந்நாதர் ஆகியோர் தேரில் எழுந்தருளி விட்டனர். மரத்தால் உருவாக்கப்பட்டு, உருண்டையான கண்கள், மூக்குடன், அவயவங்கள் இல்லாமல் இருந்த வித்தியாசமான மூர்த்திகளையும், மூலவரே வீதியுலா வரும் அதிசயத்தையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இளவரசி.
மக்கள் ”தேர் அதன் சக்கரங்கள், வடங்கள், அந்தப் பெரிய வீதி எல்லாம் அந்த நேரத்தில் இறைவனிடம் ஒன்றுபட்டு விடுகின்றன. அப்பொழுது தேர், அதன் வடம் இவற்றைத் தொடுவதே தவம், வேள்வி செய்வதால் வரும் பலனைக் கொடுக்கும் “ என்ற பொருளமைந்த பிரபல ஒரிய மொழிப் பாடலைப் பாடியும், ஆடியும் பக்தி வௌ¢ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
“ கஜபதி ராஜா வருகிறார்” முழக்கங்கள் கேட்டதும், காஞ்சி மன்னரும், இளவரசியும் ஆவலுடன் நோக்கினர். மன்னரும் வந்தார், தெருக்கூட்டும் துப்புரவுப் பணியாளர் போல் உடையணிந்து தங்கப்பூண் பூட்டிய துடைப்பத்தால் தேர், அதன் முன்புறம் இருந்த வீதியைப் பக்தியுடன் சுத்தப் படுத்தி, வாசனைத் திரவியங்கள் கலந்த நீரையும் தெளித்தார்.
மன்னனாக இருந்தாலும் இறைவன் முன் அடித்தொண்டனே. ஆண்டவன் முன் அரசனும் அடிமையும் ஒன்றே என்பதைக் காட்டும், காலங்காலமாக நடந்து வரும் “சேர பஹாரா” என்ற சம்பிரதாயச் சடங்கு நிகழ்ச்சியாகும் அது.
ஆனால் காஞ்சி வேந்தரோ கொதித்தெழுந்தார். தெரு கூட்டும் ஒருவனுக்குத் தன் மகளைக் கொடுப்பதா என்று, இளவரசியையும் வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு காஞ்சிக்குத் திரும்பி விட்டார்.
நிகழ்ந்ததை அறிந்த பூரியின் மன்னனும் வெகுண்டெழுந்தான். காஞ்சியின் மீது படையெடுத்தான். வென்றான். காஞ்சியிலிருந்து விநாயகர் சிலையையும் வெற்றிச் சின்னமாகக் கவர்ந்து சென்றான். தன்னைத் தெரு கூட்டுபவன் என்று இழித்துரைத்த மன்னரின் மகளை ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கே மணமுடிப்பேன் என்று சூளுரைத்துச் சிறையெடுத்தான். ஆனாலும் காதலர்களால் ஒருவரையொருவர் மறக்க முடியவில்லை.
ஆயிற்று. அதற்குள் அடுத்த ஆண்டு ரத யாத்திரையும் வந்து விட்டது. பூரி அரசனும், இளவரசியும் தங்கள் நேசத்தை மறக்க முடியாமல் தவிப்பதைக் கண்டார் ஒரு நல்ல அமைச்சர்.
அரசர் துப்புரவுத் தொழிலாளியாக ரதத்தையும், வீதியையும் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இளவரசியை அழைத்து வந்து, “ தற்பொழுது தாங்களும் தெரு கூட்டுபவன் தானே! அதனால் தாங்களே இவளைத் திருமணம் செய்யுங்கள்” என்றார் அமைச்சர். சபதத்திற்கும் பங்கமில்லாமல், பகையும் மறைந்து எல்லாம் மங்கலமாய் முடிந்தது (என்று கதை). திருமணத்தின் போது, இளவரசிக்கு விருப்பமான காஞ்சிபுரத்துப் பிள்ளையாரையும் காஞ்சி மன்னர் பரிசளித்தார் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ காஞ்சிகணேஷ் பூரி ஜெகந்நாத் கோயிலில் குடியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மேற் பூச்சைச் சுத்தப் படுத்திய போது, அரசரும் அரசியும் பூரி ஜெந்நாதரைத் தொழும் பண்டைய ஓவியம் வெளிப்பட்டது என்று நாளிதழ்களில் செய்தி வந்தது.. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே காஞ்சிக்கும், பூரிக்கும்தொடர்பு இருந்திருக்கிறது; திருமண உறவும் நிகழ்ந்திருக்கிறது.
ரதயாத்திரையுடன் தொடர்புடைய கதையைப் பார்த்தோம். அதைப் பற்றிய செய்திகளையும் பார்ப்போம்.
கடோபநிடதத்தில் உடம்பே தேர்; உயிரே அதில் அமர்ந்திருக்கும் தெய்வம்; புத்தியே மனம், எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் தேர்ப்பாகன் என்று கூறப்பட்டுள்ளது. இதன் குறியீடாகத் தேர்த்திருவிழா கொண்டாடப் பட்டிருக்கலாம்.
மேலும் தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத அக்காலத்தில், அவர்களும் கடவுளைத் தரிசித்து அருள் பெறுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.
ஒடிசாவின் கவிஞரும், மகானுமான சாலபேகா, “கருப்புச் செல்லம் காட்டு யானை போல் ஆடி அசைந்து, பெரிய வீதிக்கு வந்து தேரில் பவனி வருகிறார். அடியார்களின் கொடிய மன்னிக்க முடியாத குற்றங்களையும் மன்னித்து அருள்கிறார்” என்று பாடுகிறார்.
ஸ்கந்த புராணத்தில் ரதயாத்திரை சென்று குண்டிச்சா கோயிலில் இருக்கும் இறைவன் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனைத் தருகிறார் என்று கூறப் பட்டுள்ளது.
பிரம்ம புராணம், பத்ம புராணம் இவையும் ரதயாத்திரை பற்றி விரிவாகக் கூறுகின்றன. கங்க வம்ச மன்னர்கள் கி பி 1150ம் ஆண்டில் கோயிலைக் கட்டி முடித்த போதே ரத யாத்திரை சிறப்புடன் நடை பெற்றிருக்கிறது.
இந்துக்களின் திருவிழாக்களில் இந்த ரத யாத்திரையே மேற்கத்திய உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தெரியப்பட்ட ஒன்றாகும்.
Friar Odoric of Porplenone என்பவர் 1316 முதல் 1318 வரை இந்தியாவில் பயணம் செய்திருக்கிறார். அவர் எப்படிச் சிலைகளை ரதத்தில் ஏற்றினார்கள், அரசன், அரசி, மக்கள் அனைவரும் சேர்ந்து ஆடல், பாடலுடன் தேவாலயத்திலிருந்து ( கோயிலைச் சர்ச் என்று குறிப்பிட்டிருக்கிறார்) இழுத்து வந்தார்கள் என்று எழுதியிருக்கிறார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் பயணம் செய்த சில ஐரோப்பியர்கள், ரதயாத்திரையின் போது மக்கள் கூட்டத்தில் தேரின் பெரிய சக்கரங்களால் எதிர்பாராத வண்ணம் நசுக்கப் பட்டார்கள்; சில தீவிர பக்தர்கள் தேர்ச் சக்கரங்களின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். மக்களின் பக்திப் பரவச உச்ச நிலை அவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்க வேண்டும்.
இவையெல்லாம் சேர்ந்து “தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி”, “வெறியர்களால் நிகழ்த்தப் பெறும்செயல்” போன்ற பொருள்களைக் குறிப்பிடும் “juggernaut“ என்ற புது ஆங்கில வாரத்தையே உருவானது. பழைய ஓவியங்களில் ஜெகந்நாத் கோயில் “Juggernaut Temple” என்றே ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒடிசாவின் மழைக்காலத்தில் ஆஷாடா மாதத்தில் _ ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் இத்திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய சக்கரங்களுடன் புதிய ரதங்கள் குறிப்பிட்ட சில மரங்களால் செய்யப் படுகின்றன. மகாநதிக் கரைக் காடுகளிலிருந்து சுமார் 600 மரங்களிலிருந்து 400 சதுர மீட்டர் அளவில் மரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. செய்யும் தச்சர்கள், வண்ணம் தீட்டுவோர், ஓவியங்களாலும், வண்ணத் துணிகளாலும் அலங்கரிப்போர் _ அனைவரும் பரம்பரை உரிமையுடன், வழிவழியாகச் செய்யப் பட்ட முறையிலேயே, எளிய கருவிகளை வைத்து, பளீரென்ற சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு வண்ணங்களுடன் செய்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அட்சய திருதியை அன்று தேர் செய்யும் பணி சில சடங்குகளுடன் ஆரம்பமாகிறது.அரசரின் மாளிகைக்குச் சென்று, அனுமதி பெற்று, விரதமிருந்து செய்கின்றனர். கோயில் விமானங்கள் போலவே குறுகலாக, உயரமாகத் தேரின் மேற்பகுதி விமானங்கள் அமைக்கப் படுகின்றன.
நந்தி கோசா என்பது ஜெகந்நாதரின் தேராகும். 45 அடி உயரத்துடன், 7 அடிவிட்டமுடைய 16 சக்கரங்களுடன், 45 அடி அகலத் தேர்த் தட்டுடன் உள்ளது. கிருஷ்ணனாகவே ஜெகந்நாத் பாவிக்கப் படுவதால், அவரது பீதாம்பரத்தின் பொன்னிற மஞ்சள் கோடுகளுடன் சிவப்புத் துணியில் விமானப் பகுதி அலங்கரிக்கப் படுகிறது. இந்த ரதத்தின் கொடியின் பெயர் திரைலோக்ய மோகினி. கருடனால் காக்கப்படும் இத்தேரின் சாரதி தாருகாவின் உருவமும் மரத்தால் செய்யப் பட்டு, பக்கவாட்டில் அமைக்கப் படுகிறது. சங்கா,பாலகா, சுவேதா, ஹர்டஷா என்ற வெண்ணிறக் குதிரைகளும், சங்கசூடா என்ற பெயருடன் தேர் வடமும் அமைக்கப் படுகின்றன.
தலத்வாஜா பலபத்திரரின் ரதமாகும். 44 அடி உயரத்தில், 14 சக்கரங்களுடன் சிவப்பு பச்சை வண்ணத் துணிகளால் அலங்காரம். வாசுதேவரால் காக்கப்படும் இத்தேரின் கொடி யுனானி ஆகும். சாரதி மாதலி. டிப்ரா, கோரா, டிகாஸ்ராமா, சுமானவா என்ற கருப்பு நிறக் குதிரைகளுடன், பாசுகி தேர்வடத்துடன் உள்ளது.
தர்படாலானா என்ற சுபத்ராவின் தேர் 43 அடி உயரத்தில், 12 சக்கரங்களுடன், சக்தி வழிபாட்டுக்கே உரிய கருப்பு, சிவப்பு வண்ணத்தில் செய்யப் படுகிறது. ஜெயதுர்காவால் காக்கப்படும் இத்தேரின் கொடி நடம்பிகா, சரரதி அர்ஜுனா. ரோசிகா, மோசிகா, ஜிலா, அபராஜிதா என்ற சிவப்புக் குதிரைகள், வடம் ஸ்வர்ணசூடா.
இவைகளுடன் ஒவ்வொரு தேரைச் சுற்றிலும் மரத்தால் செய்யப்பட்டு, வண்ணங்கள் தீட்டப் பட்ட ஒன்பது பார்ஸ்வ தேவதைகள் அமைக்கப் படுகின்றன. ஜெகந்நாத் தேரில் வராகா, கோவர்த்னா, கிருஷ்னா, கோபிகிருஷ்னா, ந்ருசிங்கா, ராமா, நாராயணா, திரிவிக்ரமா, ஹனுமான், ராத்ரா போன்ற தேவதைகளும்,
கணேஷ்,கார்த்திகேயா, சர்வமங்களா, ப்ராலம்பரி,ஹலாயுதா, மிருத்யுன்ஜயா, நடம்வரா, முக்திஸ்வர், சேஷதேவா ஆகியோர் பலதேவரின் தேரிலும்,
சண்டி, சாமுண்டா, உக்ரதாரா, வன்துர்கா, சூலிதுர்கா,வராகி, சியாமாகாளி, மங்களா, விமலா ஆகியோர் சுபத்ராவின் தேரிலும் இடம் பெறுகின்றனர்.
ஒவ்வொரு தேரிலும் இடம் பெறும் பரிவார தேவதைகளின் பெயர்கள் ஜெகந்நாத் திருமால் வடிவமாகவும், பலபத்ரர் சிவ அம்சமாகவும், சுபத்ரை சக்தி அம்சமாகவும் வழிபடப் படுவதைக் காட்டுவதுடன், ஒடிசாவில் பழங்காலத்திலிருந்து வைணவம், சைவம், சாக்தம் மூன்றும் இணைந்து விரவி இருந்த நிலையையும் காட்டுகின்றது.
ரதயாத்திரைக்குப் பலநாட்கள் முன்னதாகவே கோயிலில் திருவிழா ஆரம்பமாகிறது. “சந்தன் யாத்ரா” என்ற சந்தனத் திருவிழாவில் மதன்மோகனா, ராமகிருஷ்னா ஆகிய உற்சவர்களுடன் நரேந்திரா குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகின்றது. அவர்களுடன் பஞ்சபாண்டவர் எனப்படும் பூரியின் ஐந்து முக்கிய சிவன் கோயில்களின் மூர்த்திகளும்கலந்து கொள்கின்றனர். குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில், சந்தனம், வாசனைத் திரவியங்கள், மலர்களால் நிரப்பப் பெற்ற கல்தொட்டியில் திருமுழுக்கு நடைபெறுகின்றது.
அத்திருவிழாவின் இறுதியில் 108 முறை தங்க கலச நீரால் “ஸ்நான யாத்ரா” எனப்படும் திருமுழுக்கு செய்யப்படும். அதன் பின் இரண்டு வாரங்கள் மூர்த்திகளுக்கு உடல் நலமில்லை என்று தனியாக வைக்கப் படுகின்றனர். அப்பொழுது ஒடிசாவின் பட்டசித்ராவால் ஆன திரையையே தரிசனம் செய்ய முடியும்.
வேர்கள், இலைகள், பெர்ரி பழங்கள் மட்டுமே நைவேத்தியம் செய்யப் படுகின்றன. “அனாசாரா” என உள்ளூர் மக்கள் கூறும் இந்த நேரத்திலும், ஸ்நான யாத்திரை, ரதயாத்திரையிலும் தைத்யபதிகள் அல்லது தைத்யாக்கள், இறைவனுக்குப் பணி செய்யும் உரிமை உள்ளவர்கள். இவர்கள் நீலமாதவனைக் கானகத்தில் காண உதவிய மலைவாசிகளின் அரசன் விஸ்வாஸுவின் மகள் லலிதா, வித்யாபதி என்ற அந்தணக் குருக்களின் வழி வந்தவர்கள். இப்படி ஜெகந்நாத் வழிபாட்டில் மலைவாழ் மக்களின் வழிபாட்டுக்கூறுகளும் பொதிந்து கிடக்கின்றன.
ரதயாத்திரைக்கு முன்னால் “நவஜாபனா” _ இளமையைப் புதுப்பிக்கும் சடங்கு நடக்கிறது. மூர்த்திகளுக்குப் புது வண்ணம் தீட்டப் படுகின்றது.யாத்திரைக்கு முதல் நாள் கண் திறக்கும் “நேத்ரோத்ஸவா” சடங்கு நடந்து, நடைபெறும் தரிசனத்திற்கு மக்கள் வௌ¢ளம் அலை மோதும்.
இந்தச் சடங்குகளும், “நவகளேபரா” _ மூர்த்திகளைப் புதுப்பிக்கும் சடங்குகளும், முற்காலத்தில் படையெடுப்பின் போது பின்னப் பட்ட மூர்த்திகளைச் சீர்ப்படுத்தி, புதுப்பித்ததின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
யாத்திரையின் போது மூல மூர்த்திகளே ரதத்தில் செல்கின்றனர். இதுவும் மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பம்சமாகும்.
மூவரும் சுதர்சனருடன் கோயிலிலிருந்து தேருக்குச் எழுந்தருளுவதே “பஹண்டி” என்ற விரிவான சடங்காகும். வௌ¢ளை, சிவப்புத் தாமரை மலர்கள், இலைகளால் செய்த பெரிய, அரை வட்ட வடிவ தலை அலங்காரங்களுடன் கண்டா, ககாலி, டெலிங்கி போன்ற தாள வாத்தியங்கள் முழங்க, யானை போல் அசைந்து அசைந்து செல்கிறார். கோயிலை விட்டு வெளியுலகைப் பார்க்கும், அத்தை வீட்டிற்குச் செல்லும் மகிழ்ச்சியில் ஆடி வருகிறாராம். மக்கள் தங்கள் கருப்புக் கண்மணி ஆடி அசைந்து வருவதைக் கண்டு பக்திப் பரவசத்தின் உச்சிக்கே சென்று விடுகின்றனர்.
கோயிலின் சிம்மத்துவாரா வாயிலின் முன் படாதண்டா _ பெரிய வீதியில் பலபத்திரா, சுபத்ரா, ஜெகந்நாத் ரதங்கள் வரிசையாக நிற்கின்றன. ரதத்தின் தேவதைகளுக்குப் பூஜை முடிந்த பின், மூவரும் தேரில் எழுந்தருளுகின்றனர். பூரியின் கஜபதி ராஜா, ரதங்களைத் தங்கப் பூண் கொண்ட துடைப்பம், வாசனைத் திரவியங்கள் கலந்த நீரால் சுத்தம் செய்யும் “சேரபஹாரா” சடங்கு நடைபெறுகிறது. ரதங்கள் திரும்பி வரும் போதும் இச்சடங்கு மறுபடி செய்யப்படுகிறது.
முதலில் பலபத்திரர், பின் சுபத்ரை, ஜெகந்நாத் ரதங்கள் மக்கள் வௌ¢ளத்தினூடே பக்திப் பரவசத்துடன் இழுத்துச் செல்லப் படுகின்றன. படாதண்டாவில் சுமார் 3 கி.மீ. தூரம் பவனித்து குண்டிச்சா மந்தீர், மாஸிமா மந்தீர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயிலுக்குச் சென்று 9 நாட்கள் தங்குகின்றனர். இக்கோயில் பூரி ஜெகந்நாத் கோயிலைக் கட்டிய அரசன் இந்திரத்தூய்மனாவின் அரசி குண்டிச்சாவால் கட்டப்பட்டது என்று கூறப் படுகிறது.
பின் திரும்பி வரும் “பகுட யாத்ரா” நடைபெறுகிறது. எளிய மக்களின் இனிப்பு வகையான ‘போடபித்தா’ வரும் வழியில் கருப்புக் கண்மணிக்குப் படைக்கப் படுகிறது.
திரும்பி வந்து, கோயிலின் முன் ரதத்தில் “சுன பேஷா” எனப்படும், மிக அதிகமான தங்க அணிமணிகளால் ஆன ராஜ அலங்காரத்தில் மூன்று மூர்த்திகளும் காட்சி அளிக்கின்றனர். இத்தரிசனம், தங்களது தீய கர்மாவிலிருந்து விடுவிக்கும் என்று மக்கள் நம்புகினாறனர்
யாத்ரா, சுனபேஷா எல்லாம் முடிந்து, சுதர்சனர், பலபத்ரர், சுபத்ரா உள்ளே செல்கின்றனர். கோயில் வாசல் கோபுரத்தின் மேலிருக்கும் ஸ்ரீமந்தீரின் மகாராணியான மகாலட்சுமி, தன்னை விட்டு, சகோதர, சகோதரியுடன் சென்றதற்காகக் கோபித்து, ஜெகந்நாத் செல்ல அனுமதி மறுக்கிறார். சில சண்டைகளுக்குப் பின், பூரியின் பாரம்பரிய இனிப்பான ரசகுல்லா கொடுத்து, சமாதானம் செய்து, உள்ளே செல்கிறார் சுவாமி.
இந்த ஆண்டு ரதயாத்ராவைத் தொலைக்காட்சியில் பார்த்த பொழுது, வித்தியாசமான வடிவத்தில் இருந்த பெரிய மூர்த்திகள், வரிசையாக நின்ற பிரமாண்டமான தேர்கள், புதிய வண்ணத் துணிகளால் ஆன அழகிய விமானப் பகுதி, ரதங்கள் நின்றிருந்த அகலமான படா தண்டா, முழுவதும் நிறைந்திருந்த மக்கள் வௌ¢ளம், பக்திப்பரவசத்தில் மக்களது ஆடல் பாடல் _ அனைத்தும் பிரமிக்க வைத்தன. ரதத்தில் எதற்காக இவ்வளவு மக்கள் ஏறியிருந்தார்கள் என்பது புரியவில்லை.
மூர்த்திகளின் மாறுபட்ட வடிவங்கள், பருவ காலங்களுக்கு ஏற்ப செய்யப்படும் விதவிதமான அலங்காரங்கள், பலவகை நைவேத்யங்கள், வித்தியாசமான சடங்குகள் _ எல்லாமே ஒரு தனித்தன்மையுடன் விளங்குவதே பூரி ஜெகந்நாத் கோயிலின் சிறப்பாகும்.
மகான் இராமானுசர் கோயில் நடைமுறைகளைத் திருத்தி அமைக்க முற்பட்ட போது, இறைவனே அவர் கனவில் தோன்றி, “ இவர்களும் என் பக்தர்கள் தான்; அவர்கள் விருப்பப் படியே நடக்கட்டும்” என்று கூறி, அவர் படுத்திருந்த கட்டிலுடன் தூக்கிச் சென்று ஊருக்கு வெளியே வைத்து விட்டதாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
வைணவ, சைவ, சாக்த மதக் கூறுகளுடன், மலை வாழ் மக்களின் வழிபாட்டு முறைகளும் விரவப் பெற்று, ஓரளவு சமண, பௌத்த சமயத் தாக்கத்துடனும் விளங்குகிறது இக்கோயில். அன்ன சேத்திரமாகத் திகழும் இத் திருக்கோயில் இந்தியாவின் நான்கு தெய்வீக நகரங்களில் ஒன்றும் ஆகும்.