கட்டபொம்மு – தி.நா.சுப்பிரமணியன்

140

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

குத்தகைத் தகராறு :

கும்பினிப் படை திருநெல்வேலிச் சீமையை விட்டுச் சென்றதும் பாளையக்காரர்கள் பழைய வழிக்கே திரும்பி விட்டார்கள். மாபூஜ்கானை நவாபின் பிரதிநிதியாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுடைய சேவகர்கள் வெளிக் கிளம்பி நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று திறைப் பணம் வசூல் செய்தார்கள்.

மூடேமியா திருவாங்கூருக்குச் சென்று களக்காட்டைத் திரும்பவும் பிடித்துக்கொள்ளுமாறு மன்னரை உற்சாகப் படுத்தினான். திருவாங்கூர்ப் படை வந்தவுடன் அதனுடன் சேர்ந்துகொண்டு நாட்டைப் பிடித்துக்கொள்ளப் பூலித் தேவரும் தயாரானார்.

கர்னல் ஹீரானுடன் மதுரைக்குத் திரும்பிச் சென்ற மாபூஜ்கானுக்கு இச்செய்தி எட்டியதும் அவன் திருநெல்வேலிக்கு விரைந்து சென்றான். கும்பினியார் விட்டுச்சென்ற ஆயிரம் சிப்பாய்களையும், நவாபினிடமிருந்து வந்த அறுநூறு குதிரை வீரர்களையும் தவிர அவனும் ஒரு பெரும் படை திரட்டினான். ஆயினும் அவனுக்குப் போரை நடத்துவதற்கு வேண்டிய திறமை போதவில்லை.

மாபூஜ்கான் வருவதற்குள்ளாகத் திருவாங்கூர்ப் படை களக்காட்டுக்குச் சமீபம் வந்துவிட்டது. பூலித் தேவரும் அதனுடன் சேர்ந்துகொண்டார். அங்கே நடந்த போரில் நவாபின் படை முறியடிக்கப்பட்டது. போர் வீரர்கள் திரும்பி ஓட்டம் எடுத்தனர். மிஞ்சிய முந்நூறு பேர்களும், தாங்கள் தாங்கிச் சென்ற துப்பாக்கிகள் ஓடுவதற்குத் தடையாக இருப்பதையறிந்து அவற்றை எறிந்துவிட்டு ஓடினர்; எதிரிகள் அவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொண்டனர்.

உடனே மூடேமியா நவாபின் வசம் இருந்த களக்காட்டுக் கோட்டையைத் தாக்கினான். வெற்றி தங்களுக்கே நிச்சயமாக இருந்தும் திருவாங்கூர்ப் படையினர் தாமதிக்கவில்லை; தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். அவர்கள் திருவாங்கூரிலே தங்களுக்கு அவசர வேலை இருக்கிறது என்று சாக்குக் கூறினார். ஆனால் மாபூஜ்கானுக்கு உதவியாக அவனது குதிரைப் படை வருவதையறிந்து அதற்கு எதிராக நின்று போர்புரிய விரும்ப வில்லை என்பதே முக்கியமான காரணம் போலும்.

மூடேமியாவும் அப்படையுடன் போய்விட்டான். பூலித் தேவரும் நெற்கட்டுஞ் செவ்வலுக்குத் திரும்பி விட்டார். மாபூஜ்கான் உள்நாட்டுக் கலகத்தை அடக்கிவிட்டதாக மனப்பால் குடித்திருந்தான். ஆனால் அமைதி நிலைத்திருக்க வில்லை.

மூடேமியா திருவாங்கூர்ப் படையுடன் மறுபடியும் வந்து களக்காட்டைத் தாக்கிக் கைப்பற்றினான். நவாபின் படை, முன் தடவையைக் காட்டிலும் அதிகமாக அடிபட்டது. இருநூறு குதிரைகளும் ஐந்நூறு சிப்பாய்களும் சிறைப்பட்டனர்.

அது அறுவடைக் காலம். திருவாங்கூரார் நாட்டைக் கைக்கொண்டதன்றிக் கிஸ்தியையும் வசூல் செய்து கொண்டார்கள். மாபூஜ்கான் பெரு நஷ்டம் அடைந்தான் சாப்பாட்டுக்கே சரியாகக் கிடைக்கவில்லை. அதனால் உணவுப் பொருள்களை வெளியிலிருந்து வரவழைக்க வேண்டியதாயிற்று. வழியில் கள்ளர்கள் அவற்றைக் கொள்ளையிட்டுச் செல்லாமல் காத்துச் செல்லக் கும்பினியார் பட்டாளத்துடன் வந்தனர். வந்தும், பூலித்தேவர் அப்பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றார்.மாபூஜ்கான் நெற்கட்டுஞ் செவ்வலை முற்றுகையிட்டான். ஒன்றும் பலிக்கவில்லை. பட்டாளத்தின் சம்பளப் பாக்கியைத் தீர்க்கப் பணம் இல்லை. பெருந்தொகை கொடுப்பவரும் இல்லை. நிலங்களை ஒற்றி வைத்தாவது அவற்றின் மீது கடன் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் அவன் திருநெல்வேலி திரும்பினான்.

இதற்கிடையில், தங்களுக்குக் கிடைத்த வெற்றியினால் சந்தோஷமும் தைரியமுங் கொண்ட பூலித்தேவர் மூடேமியா முதலானோர் தங்கள் பக்கத்தைப் பலப்படுத்திக்கொள்ள முயன்றனர். வடகரை முதலிய மேல்படாகைப் பாளையப் பட்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தன.

கீழ்ப்படாகைப் பாளையப்பட்டுகளையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ள முயன்றார் பூலித்தேவர். கிழக்குப் பக்கத்துக்குத் தலைமை பூண்ட பாஞ்சாலங்குறிச்சியாரை அங்ஙனமே வேண்டிக்கொண்டார். ஆனால் கட்டபொம்மு அதற்கு இணங்க வில்லை. அவரும் எட்டையபுரத்தாரும் கிஸ்தி பாக்கிக்கு ஜாமீனாகக் கொடுத்திருந்த நபர்கள் திருச்சிராப்பள்ளியில் சிறைப்பட்டிருந்தார்கள்; நவாபுக்கு விரோதமாக பூலித் தேவருடன் சேர்ந்துகொண்டால் அவர்களை மீட்க வழி யில்லாமல் போய்விடும் என்பதே அவ்வாறு இயங்காததற்கு முக்கிய காரணம் ஆகும்.

Weight0.25 kg