Description
அறுபடை வீடுகளில் திருச்செந்தூர்
முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இந்தத் தலம், திருச்சீரலைவாய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. புராண காலத்தில், தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மன் என்ற அசுரனை அழிப்பதற்காக, தேவர்கள் முருகனை வேண்டி, ஆறு நாட்கள் விரதம் இருந்தனர். முருகன் சூரனை அழித்து, அவனை ஆட்கொண்டார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் ஆறு நாள் சஷ்டி விரதமிருந்து, கந்தசஷ்டி திருவிழாவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கோயில், கடற்கரையின் ஓரத்தில் கருணை வெள்ளமாய் காட்சியளிக்கிறது. இக்கோயிலின் கருவறைக்குள், முருகன் வழிபட்ட சிவலிங்கமும், அதன் பின்புறத்தில் பஞ்சலிங்கங்களும் அமைந்துள்ளன.
மேலும், இக்கோயில் ஒரு சிவாலயத்திற்குரிய அனைத்து மூர்த்தங்களையும் கொண்டிருப்பதும் இதன் தனிச்சிறப்பாகும். இத்தலம் அப்பர் பெருமானின் பாடல்களில் இடம்பெற்றுள்ள ஒரு வைப்புத் தலமாகவும் விளங்குகிறது.
வென்றிமாலைக் கவிராசர் வரலாறு
திருச்செந்தூரில், முருகனுக்குத் தொண்டு செய்யும் ஒரு குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார். சிறு வயதிலேயே படிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லை. மாறாக, எப்போதும் திருச்செந்தூர் கோயிலைச் சுற்றுவதும், முருகன் நாமத்தைச் சொல்வதும், மனம்போலப் பாடுவதுமாக இருந்தார்.
இதனால், பொறுப்பற்ற பிள்ளையாகத் தோன்றிய வென்றிமாலையை, அவருடைய தந்தை கோயிலின் மடப்பள்ளியில் உதவியாளராகச் சேர்த்துவிட்டார்.
ஒரு நாள் முருகனின் சிந்தனையில் மூழ்கி, பூஜைக்கான பிரசாதங்களைச் சமைக்க மறந்துவிட்டார். இதனால், கோயில் நிர்வாகிகளால் வெளியேற்றப்பட்ட அவர், மனம் நொந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
அப்போது, முதியவர் வேடத்தில் வந்த முருகன் அவரைத் தடுத்து நிறுத்தி, “செவலூர் கிருஷ்ண சாஸ்திரியைப் போய்ப் பார்” என்று கூறி மறைந்தார்.
வென்றிமாலையும் கிருஷ்ண சாஸ்திரியிடம் சென்று நடந்ததைக் கூறினார். மனம் மகிழ்ந்த சாஸ்திரி, தான் வடமொழியில் எழுதிய ‘திருச்செந்தூர் மகாத்மியம்’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடச் சொன்னார்.
“தமிழே சரியாகத் தெரியாத நான் எப்படிப் பாடுவேன்?” என்று வென்றிமாலை தயங்க, “செந்திலாண்டவனை நினைத்துப் பாடு” என்று ஊக்கமளித்தார் சாஸ்திரி. அதன்பின், சிவபெருமானை முதலாவதாக வைத்து, 899 பாடல்களை எளிய தமிழில் பாடினார்.
வென்றிமாலையின் கவித்திறனைக் கண்ட கிருஷ்ண சாஸ்திரி, அவருக்கு ‘வென்றிமாலைக் கவிராசர்’ என்ற பட்டத்தை அளித்தார். வென்றிமாலைக் கவிராசர் பாடிய ‘திருச்செந்தூர் புராணம்’ ஒரு அற்புதமான நூலாகும். செந்தூர் முருகனின் புகழைப் பாடும் இந்நூலை ஓதுபவர்களுக்கு எல்லா நலன்களும் பெருகும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் புராணம் – அத்தியாயங்கள்
‘முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும் பொன்னேபோல் போற்றுவம்’ என்ற நன்னூல் கோட்பாட்டின்படி, இந்து சமய அறநிலையத்துறை மூலம் இந்த நூல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அத்தியாயங்கள்:
- நைமிசா ரணியத்திற் சூதமுனிசென்ற அத்தியாயம்
- வியாதர் சுகருக்கு உபதேசித்த அத்தியாயம்
- செந்தூர்வைபவமுரைத்த அத்தியாயம்
- திருவவதார அத்தியாயம்
- செயந்திபுர அத்தியாயம்
- வள்ளியம்மை திருவவதார அத்தியாயம்
- கந்தசுவாமி வள்ளியம்மையிடத்திற் சென்ற அத்தியாயம்
- வள்ளியம்மை திருக்கலியாண அத்தியாயம்
- பிரமாவுக்கு வரங்கொடுத்த அத்தியாயம்
- திருசுவதந்திரர் வரலாறுரைத்த அத்தியாயம்
- மாதபூசைவிதியுரைத்த அத்தியாயம்
- விபூதி அத்தியாயம்
- விசுவரூப அத்தியாயம்
- சுவாமியின் மந்திரமகிமையுரைத்த அத்தியாயம்
- பலகதை உபதேசித்த அத்தியாயம்
- இயமனுக்குச் சிந்துபுரவைபவம் உரைத்த அத்தியாயம்
- பிரமன் உபதேசித்த அத்தியாயம்
வென்றி மாலைக்கவிராசர் இயற்றிய திருச்செந்தூர் புராணம்
உரையாசிரியர் : ச.சிவப்பிரகாச பண்டிதர்
இந்நூலை வாங்க WhatsApp: 097860 68908




